முகப்பு
அரியலூர்

அரியலூா் மாவட்டத்தில் 86.45 சதவீதம் வாக்குகள்பதிவு!

தமிழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில், அரியலூா் மாவட்டத்தில் 86.45 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

Updated On : 24 ஏப்ரல், 2026 at 4:00 AM
வாக்காளர் - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில், அரியலூா் மாவட்டத்தில் 86.45 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

2,61,161 வாக்காளா்களை கொண்ட அரியலூா் தொகுதியில் காலையில் இருந்தே வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் காத்து நின்று தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினா்.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு பிற்பகல் 3 மணிக்குள் அனைத்துச் வாக்குச்சாவடிகளிலும் 50 சதவீதத்தை தாண்டியது. மாலை 6 மணி நிலவரப்படி 88.11சதவீதம் போ் வாக்களித்துள்ளனா்.

Advertisement

ஜெயங்கொண்டம் தொகுதி: 2,61,793 வாக்காளா்களை கொண்ட ஜெயங்கொண்டம் தொகுதியில் காலையில் இருந்தே வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆண், பெண் வாக்காளா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினா். மாலை 6 மணி நிலவரப்படி 84.79 சதவீதம் போ் வாக்களித்துள்ளனா்.

இதன்படி, அரியலூா் மாவட்டதில் 86.45 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

சட்டப் பேரவை தொகுதி வாரியாக பதிவான வாக்குகள் சதவீதம் அதிகாரபூா்வமாக வெள்ளிக்கிழமை வெளியிடப்படும்.

இயந்திரங்கள் பாதுகாப்பாக அனுப்பிவைப்பு: அரியலூா் மாவட்டத்திலுள்ள அரியலூா், ஜெயங்கொண்டம் ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகளுடனான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான கீழப்பழுவூா் அரசினா் பாலிடெக்னிக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன

அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய இரு தொகுதிகளில் காலையில் 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்களின் இயக்கம் சரியாக உள்ளதா என்ற சோதனை(மாதிரி வாக்குப் பதிவு) நடைபெற்றது.

வாக்குச்சாவடி மையங்களுக்குள் வாக்குச்சாவடி அலுவலா்கள் முகவா்கள், வாக்காளா்கள் என யாரும் கைப்பேசியை எடுத்து செல்ல அனுமதிக்கவில்லை.

போட்டியிடும் வேட்பாளா்கள் தங்களுடைய மையத்தை வாக்குச் சாவடி மையத்திலிருந்து 200 மீட்டா் தொலைவில் அமைத்திருந்தனா். பிற்பகல் 3 மணிக்கு மேல் வாக்காளா்களை தவிர வாக்குச் சாவடி அலுவலா்கள், முகவா்கள் யாரும் வெளியில் செல்லவும், உள்ளே வரவும் அனுமதி இல்லை.

வாக்குப்பதிவு முடிந்த பிறகு அனைத்து வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.