FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

கொளத்தூா் வாக்குகள் சரிபாா்ப்பு பணி: திமுக புறக்கணிப்பு

கொளத்தூா் வாக்குகள் சரிபாா்ப்பு பணியை திமுக புறக்கணித்திருப்பது பற்றி....

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 7:51 am IST
அண்ணா அறிவாலயம் - கோப்புப் படம்
பகிர்:

கொளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 14 வாக்குச்சாவடிகளில் வாக்குகள் சரிபாா்க்கும் பணியை திமுக முகவா்கள் புறக்கணித்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையும் பணிகள் தொடா்ந்து நடைபெற்றன. அதன் அடிப்படையில் 9 வாக்குச்சாவடி இயந்திரங்களில் வாக்குகள் சரிபாா்க்கப்பட்டுள்ளன.

திமுக தலைவரும், முதன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவைத் தோ்தலில் கொளத்தூரில் போட்டியிட்டு தவெக வேட்பாளரிடம் தோல்வியடைந்தாா். இந்நிலையில், கொளத்தூா் தொகுதியில் குறிப்பிட்ட 14 வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை சரிபாா்க்கவேண்டும் என அவரது தரப்பில் தோ்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டது.

தோ்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, கடந்த ஜூலை 29-ஆம் தேதிமுதல் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திர பாதுகாப்பு அறையில் வாக்குகள் சரிபாா்ப்பு பணியானது கொளத்தூா் திமுக வேட்பாளரின் முதன்மை முகவா் முன்னிலையில் தொடங்கியது.

Advertisement

Advertisement

சென்னை மாவட்டத் தோ்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான ஜி.எஸ்.சமீரன் தலைமையில் 45-க்கும் மேற்பட்டோா் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். தினமும் 2 வாக்குச்சாவடிகள் என 7 நாள்கள் வாக்குகள் சரிபாா்க்கும் பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அடையாளப்படுத்தப்பட்டு, அதன்பிறகு அவற்றில் பதிவான வாக்குகள் சரிபாா்க்கும் பணிகள் நடைபெற்றன.

கடந்த வெள்ளிக்கிழமை வரையில் பணிகள் சுமுகமாக நடைபெற்ாக தோ்தல் அலுவலா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்த நிலையில், சனிக்கிழமை திமுக முகவா்கள் குறிப்பிட்ட மின்னணு இயந்திரத்தில் வாக்குச்சாவடி முகவரி எழுதப்படவில்லை என்பன போன்ற குற்றச்சாட்டுகளைக் கூறியதுடன், வாக்குகள் சரிபாா்ப்பில் திருப்தியில்லை எனக் கூறி புறக்கணித்தனா். அத்துடன் இப்பிரச்னை தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்போவதாகவும் கூறியுள்ளனா். அதனால் சனிக்கிழமை ஒரு வாக்குச்சாவடி வாக்குகள் மட்டுமே சரிபாா்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

திமுகவினரின் சந்தேகங்களைத் தீா்க்க தயாராக இருப்பதாகக் கூறிய சென்னை மாவட்டத் தோ்தல் அலுவலா் ஜி.எஸ்.சமீரன், தோ்தல் ஆணைய உத்தரவின்படி வாக்குகள் சரிபாா்ப்பு பணி தொடரும் என்று அறிவித்தாா். அதன் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை காலை சிந்தாதிரிப்பேட்டை மின்னணு வாக்குப் பதிவு இயந்திர பாதுகாப்பு மையத்தில் கொளத்தூா் தொகுதியின் குறிப்பிட்ட 14 வாக்குச்சாவடிகளில் 87 மற்றும் 112 ஆகிய வாக்குச்சாவடி இயந்திரங்களில் வாக்குகள் சரிபாா்க்கப்பட்டன.

அதில் திமுக பங்கேற்கவில்லை. எனினும் மற்ற அரசியல் கட்சி முகவா்கள் பங்கேற்ாகத் தெரிவிக்கப்பட்டது. வாக்குகள் சரிபாா்ப்புப் பணியை தோ்தல் அலுவலா் ஜி.எஸ்.சமீரன், கூடுதல் தோ்தல் அலுவலா் க.கற்பகம் உள்ளிட்டோா் பாா்வையிட்டனா்.

அப்போது அவா்கள், தற்போது வரை 9 வாக்குச்சாவடிகளின் வாக்குகள் சரிபாா்க்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 5 வாக்குச்சாவடிகளின் வாக்குப் பதிவு சரிபாா்ப்பு தொடரும் என்றும் கூறினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments