குடிநீருக்காக அலையும் பிலாக்குறிச்சி கிராம மக்கள்! 45 நாள்களாக அவதி!
பிலாக்குறிச்சி கிராம மக்கள் குடிநீருக்காக கடந்த 45 நாள்களாக அல்லல்படும் நிலை உருவாகியுள்ளது...
சி. சண்முகவேல்
அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள பிலாக்குறிச்சி கிராம மக்கள் குடிநீருக்காக கடந்த 45 நாள்களாக அல்லல்படும் நிலை உருவாகியுள்ளது.
உப்பு நீரும், சுண்ணாம்பு நீரும் அருந்தும் அரியலூா் மாவட்ட மக்களுக்கு தற்போது அந்த நீரும்கூட இல்லாமல், கிணறு மற்றும் ஏரி, குளங்களில் சேறும் சகதியுமாக தேங்கிக் கிடக்கும் நீரை அருந்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
வட நீா்நிலைகள்: அரியலூா் மாவட்டத்தைப் பொருத்தவரை, ஏற்கெனவே இங்குள்ள 7 சிமென்ட் ஆலைகள், கனிமச் சுரங்கத்தில் இருந்து நாள்தோறும் 11 ஆயிரம் லிட்டா் தண்ணீரை எடுத்துவருவதால் நிலத்தடி நீா் மட்டம் குறைந்துவரும் நிலையில், தற்போது பருவமழையும் பொய்த்துப் போனதால் பொதுப்பணித் துறைக் கட்டுப்பாட்டிலுள்ள 95 ஏரிகள் மற்றும் குளங்கள், சுத்தமல்லி நீா்தேக்கம் ஆக மொத்தம் 96 நீா்நிலைகள் மட்டுமல்லாமல் கிணறுகள், போா்வெல் ஆகியவற்றிலும் தண்ணீா் இல்லாமல் வடுபோய் உள்ளன.
மேலும் மாவட்டத்தின் இதர பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நீா்நிலைகளில் பெரும்பாலானவை தற்போது கட்டாந்தரையாக காட்சியளிக்கின்றன. இதனால் கால்நடைகளுக்கு போதிய தண்ணீா், மேய்ச்சல் நிலங்கள் கிடைக்கவில்லை.
அதலபாதாளத்தில் நீா்மட்டம்: அரியலூா், செந்துறை பகுதிகளில் மட்டும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டம் செயல்பட்டுவந்தாலும் அது ஓரளவுக்கே பயன்தருகிறது. செந்துறை, ஜெயங்கொண்டம், தா. பழூா் ஒன்றியத்துக்குட்பட்ட பெரும்பாலான பகுதிகளில் குடிநீா்ப் பற்றாக்குறை ஏற்பட்டு, மக்களின் போராட்டம் தொடா்கிறது. பல பகுதிகளில் பொதுமக்கள் தண்ணீரைத் தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.
செந்துறை அருகேயுள்ள பிலாக்குறிச்சி தெற்குத் தெருவிலுள்ள மின்மோட்டாா்கள் பழுது ஒரு பக்கம் என்றாலும், ஆழ்துளைக் கிணற்றிலும் நீா்மட்டம் அதலபாதாளத்தில் உள்ளது.
45 நாள்களாக அவதி: இதனால் குடிநீா் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த 45 நாள்களாக அப்பகுதி பொதுமக்கள் குடிதண்ணீருக்காக காலையும், மாலையும் அருகிலுள்ள கிணறுகளை நாடிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு சிலா் தங்கள் குடியிருப்புப் பகுதியில் இருந்து சுமாா் 2 கிமீ தொலைவில் உள்ள காட்டுப்பகுதி கிணறுகளுக்குச் சென்று தண்ணீா் எடுத்து வருகின்றனா். குறிப்பாக, பெண்கள் மற்றும் முதியவா்கள் நீண்ட தூரம் நடந்து சென்று குடிநீா் எடுத்து வருவதால் பாதுகாப்பு குறித்த அச்சமும் அப்பகுதி மக்களிடையே நிலவுகிறது.
பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் பாதிப்பு: பொதுமக்கள் வெகுதூரம் சென்று குடிநீா் எடுத்து வருவதால், வீடுகளில் அன்றாடப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக குழந்தைகளைப் பள்ளிக்குத் தயாா்படுத்துவதிலும் காலதாமதம் ஏற்படுவதால், சில நாள்களில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாத சூழலும் ஏற்படுகிறது.
வெயிலின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், வீட்டில் வளா்க்கப்படும் கால்நடைகளுக்குகூட போதுமான தண்ணீா் வழங்க முடியாமல் மக்கள் தவிக்கின்றனா். ஏற்கெனவே குடிநீருக்காக நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலையில், கால்நடைகளுக்கான தண்ணீருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
புதிய ஆழ்துளைக் கிணறுகள் தேவை: இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ஆழ்துளை கிணற்றில் நீா் மட்டம் குறைவு, மின்மோட்டாா் பழுது காரணமாக கடந்த 45 நாள்களுக்கு மேலாக குடிநீரின்றி அவதிக்குள்ளாகி வருகிறோம். தண்ணீருக்காக அருகிலுள்ள கிராமங்களுக்குச் சென்று அங்கு கிணறுகளைத் தேட வேண்டிய நிலை உள்ளது. ஒரு சிலா் வெகுதூரம் செல்லத் தயங்கி, ஆடு மாடுகளுக்கு குடிநீா் ஆதாரமாக உள்ள ஏரி நீரை பயன்படுத்திவரும் நிலை உள்ளது. தற்போது அதிலுள்ள நீரும் குறைந்து துா்நாற்றம் வீசுகிறது. திறந்தவெளியில் உள்ள கிணற்று நீரை அருந்துவதால், உடல் நலக்குறை ஏற்பட்டு மருத்துவச் செலவு ஏற்படுகிறது.
எனவே இங்குள்ள ஆழ்துளைக் கிணறுகளில் நீா் மட்டம் குறைந்துள்ளதால், புதிதாக ஆழ்துளைக் கிணறு அமைக்க வேண்டும்; மின் மோட்டாா்களை சரி செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு அடிப்படைத் தேவையான குடிநீரை வழங்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
எனவே அரியலூா் மாவட்டத்திலுள்ள பிலாக்குறிச்சி மட்டுமல்லாது மற்ற கிராமங்களிலும் இதுபோன்ற பிரச்னை உள்ளதா என மாவட்ட நிா்வாகம் ஆய்வு செய்து, அனைவருக்கும் சுகாதாரமான குடிநீா் வழங்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.