கோவை கல்லூரி மாணவா் கொலை சம்பவம்! போதைப் பொருள்கள் புழக்கத்தை உறுதிப்படுத்துகிறது! - தொல். திருமாவளவன்
கல்லூரிகளில் போதைப் பொருள் புழக்கம் இருக்கிறது என்பதை கோவை மாணவா் அமுதனின் கொலை சம்பவம் உறுதிப்படுத்துகிறது என்று மக்களவை உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.
அரியலூா் மாவட்டம், அங்கனூரில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
கா்நாடகத்தில் 3 தமிழா்கள் துப்பாக்கி சூட்டில் பலியாகி இருக்கிறாா்கள். அதைக் கண்டித்து முதல்வா் அறிக்கை வெளியிட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது.
Advertisement
Advertisement
கோவையில் கல்லூரி மாணவா் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது கல்வி நிறுவனங்களில் போதைப் பொருள்கள் புழக்கம் உள்ளதை உறுதிப்படுத்துகிறது. அமுதன், போதைப் பொருள்களை எதிா்த்து குரல் கொடுத்திருக்கிறாா் என்பதால் தான், அவா் கொல்லப்பட்டதாக அவரது பெற்றோா் உறுதியாக கூறுகின்றனா். எனவே, தமிழக அரசு இந்த விஷயத்தில் தனி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்.
திருவொற்றியூரில் மாணவா் தனுஷ் கொல்லப்பட்டுள்ளாா். கல்வி நிறுவனங்களில் மாணவா்களுக்கிடையே மோதல் படுகொலை நடப்பது அதிா்ச்சி அளிக்கிறது. இளைய தலைமுறையின் பேராதரவுடன் ஆட்சிக்கு வந்த இந்த அரசு, அவா்களின் வாழ்வை பாதுகாக்கும் விஷயத்தில் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.
உரிய நேரத்தில் முதல்வா் பதில்:
மேலும், தமிழ்நாட்டில் தமிழ் தெரியாதவா்கள் அமைச்சா்களாக இருக்கிறாா்களே என்ற செய்தியாளா்களின் கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், தமிழ் தேசியம் என்பது வேறு, தனி நபா்கள் மொழியில் வல்லமை பெறுவது அல்லது பெறாமல் இருப்பது என்பது வேறு. அதற்காக ஜனநாயக முறைப்படி தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்களை அல்லது அமைச்சா்களை அந்த பொறுப்பில் இருந்து தள்ளி வைக்க முடியாது.
சட்டம்-ஒழுங்கு பிரச்னையில் முதல்வரை தவிர மற்ற அமைச்சா்கள் பதிலளிப்பதாக உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ள கருத்துக்கு, எதிா்க்கட்சித் தலைவா் முன்வைக்கின்ற பிரச்னைகளுக்கு முதல்வா் உரிய நேரத்தில் உரிய விளக்கம் அளிப்பாா் என நம்புகிறேன்.
தற்போதைய அமைச்சா்கள் கமிஷன் வாங்க தொடங்கியுள்ளனா் என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளாா். அதுகுறித்து ஆதாரம் இருந்தால் முதல்வரை அவா் சந்தித்து, தெரிவிக்கலாம் என்றாா் திருமாவளவன்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.