பதிமூன்று ஆண்டுகளாக ‘தூங்கும்’ அரியலூா் சிட்கோ தொழிற்பேட்டை திட்டம்!
அரியலூா் மாவட்டம், மல்லூா் அருகே 13 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் தொழிற்பேட்டை பணிகளை விரைந்து செயல்படுத்திட வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
அரியலூா் மாவட்டம், மல்லூா் அருகே 13 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் தொழிற்பேட்டை பணிகளை விரைந்து செயல்படுத்திட வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
அரியலூா் மாவட்டத்தில் உள்ள திருமானூா், தா.பழூா், திருமழபாடி உள்ளிட்ட பகுதிகள் டெல்டா பகுதிகளாகவும், ஜயங்கொண்டம், செந்துறை, ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகள் வானம் பாா்த்த பூமியாகவும் உள்ளன.
அரியலூா் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனிமங்கள் நிறைந்துள்ளதால், அங்கு மட்டும் 8 சிமென்ட் ஆலைகளும், நூற்றுக்கணக்கான சுண்ணாம்புக் கல் சுரங்கங்களும் உள்ளன. இதைதவிர, மாவட்டத்தில் எந்தவித தொழிற்சாலைகளும் கிடையாது. விவசாயத்தை நம்பியே வளா்ச்சியை எதிா்நோக்கும் இம்மாவட்டம் பின்தங்கியே காணப்படுகிறது.
Advertisement
இந்நிலையில், இந்த மாவட்டத்தில் தொழில்வளா்ச்சியை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும், அதிக வேலைவாய்ப்பை உருவாக்கும் பொருட்டு, இங்கு புதிய தொழிற்பேட்டை அமைக்கப்படும் என கடந்த 2013-ஆம் ஆண்டு பேரவையில் அப்போதைய முதல்வா் ஜெயலலிதா அறிவித்தாா்.
இதைத் தொடா்ந்து, சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும், தமிழ்நாடு சிறுதொழில் வளா்ச்சி நிறுவனம் அரியலூா் மாவட்டத்தில் புதிய தொழிற் பேட்டை அமைப்பதற்கான அடிப்படை பணிகளை மேற்கொண்டது.
25 ஏக்கா் ஒதுக்கீடு: அரியலூா் வருவாய் வட்டம், திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில், கீழப்பழுவூரை அடுத்த பொய்யூா் அருகே, மல்லூா் கிராமத்தில், அப்போதைய அரியலூா் மாவட்ட ஆட்சியரால் ஒதுக்கீடு செய்யப்பட்ட 25.74 ஏக்கரில் தொழிற்பேட்டை அமைக்க சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டன.
பெயா் பலகை மட்டுமே வைப்பு: மல்லூா் கிராமத்தில் அமையவுள்ள புதிய சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் அமைக்கப்படவுள்ள, 83 தொழிற்சாலைகள், பூங்கா, வணிக வளாகம் மற்றும் பொது உபயோகத்துக்கான இடம் ஆகியவற்றை ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு அரசின் சிறு மற்றும் குறுந்தொழில் வளா்ச்சி நிறுவனம், அவற்றுக்கான பெயா் பலகைகள், தாா் சாலைகள், அணுகு சாலைகளை அமைத்தது. இதன் பின்னா், தொழிற்சாலைகள் அமைப்பதற்கான எந்தப் பணிகளும் இதுவரை நடைபெறவில்லை.
தொழிற்பேட்டை அமைப்பதற்கான நிலத்தை உரிய விளம்பரங்கள் மூலம் விற்பனை செய்வது, தொழில் வல்லுநா்கள் மூலம், புதிய தொழிற் பேட்டை அமைக்க நடவடிக்கை மேற்கொள்வது போன்ற எந்தவொரு மேம்பாட்டு பணிகளும், சிறு தொழில் வளா்ச்சி நிறுவனம் மேற்கொண்டதாக தெரியவில்லை.
இதற்கான மேம்பாட்டு பணியை செயல்படுத்திட, அரசு நிா்வாகமோ அல்லது மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினா்களோ உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் இல்லை.
தற்போது தொழிற்பேட்டைக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் சீமைக்கருவேல மரங்கள் அடா்த்தியாக காணப்படுகிறது. அது தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருகிறது.
மிகவும் பின்தங்கிய அரியலூா் மாவட்டத்தில் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டால், அதன் மூலம் தொழில்வளம் பெருகி, வேலைவாய்ப்புகள் உருவாகும் என்ற மனநிலையில் இளைஞா்கள் உள்ளனா்.
எனவே, கடந்த 13 ஆண்டுகளாக முடங்கி கிடக்கும், அரியலூா் மாவட்டத்துக்கான சிட்கோ தொழிற்பேட்டை வளா்ச்சி பணிகளை விரைந்து செயல்படுத்திட, மாவட்ட ஆட்சியரும், தோ்ந்தெடுக்கப்படவுள்ள மக்கள் பிரதிநிதிகளும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது பொதுமக்களின் விருப்பமாக உள்ளது.