FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

காவிரி, அமராவதியில் வெள்ளப்பெருக்கு: ஆற்றங்கரையோரம் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

காவிரி, அமராவதி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரூர் மாவட்டத்தில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

30 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:

காவிரி, அமராவதி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரூர் மாவட்டத்தில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 
மேலும் 5 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு சமுதாயக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 
சேலம் மாவட்டம் மேட்டூர் அணை, திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணை ஆகியவற்றில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், கரூர் மாவட்டத்தில் தவிட்டுப்பாளையம், மல்லம்பாளையம் உள்ளிட்ட ஆற்றங்கரையோரப் பகுதிகளில் ஆட்சியர் த. அன்பழகன் புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: 
மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு சுமார் 1.40 லட்சம் கன அடி அளவிலான நீர் திறக்கப்பட்டுள்ளது. அமராவதி அணையிலிருந்து சுமார் 15,000 கன அடி, பவானி சாகர் அணையிலிருந்து சுமார் 30,000 கன அடி என மொத்தம் சுமார் 2 லட்சம் கனஅடி ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்பட்டு கரூர் மாவட்டத்தை வந்தடையும் சூழல் உள்ளது. 
எனவே, வருவாய்த் துறையினர், ஊரக வளர்ச்சித் துறையினர், காவல் துறையினர் மற்றும் பொதுப்பணித் துறையினர் எந்தெந்த இடங்களில் பாதிப்பு ஏற்படலாம் என கணிக்கப்பட்ட இடங்களில் 24 மணிநேரமும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், ஆற்றங்கரையோரம் உள்ள தவிட்டுப்பாளையம், கட்டிப்பாளையம் பகுதியில் 5 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 
அவர்களுக்குத் தேவையான உணவு, இருப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து கரையோரப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டும், தண்டோரா, ஒலிபெருக்கி மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. எனவே, காவிரி மற்றும் அமராவதி ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் மேடான பகுதிகளுக்குச் செல்ல அறிவுறுத்தப்படுகின்றார்கள். ஆற்றுப்பகுதிகளில் குளிக்கவோ, வேடிக்கை பார்க்கச் செல்லவோ, செல்பி  எடுக்கவோ கூடாது. மேலும், அவசரத் தகவல்கள் தெரிவிக்க 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியை தொடர்புகொள்ளலாம் என்றார். 
ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.கவிதா, வருவாய் கோட்டாட்சியர் கு.சரவணமூர்த்தி, பொதுப்பணித் துறை உதவி பொறியாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments