FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

கரூருக்கு முதல்வா் ஜோசப் விஜய் இன்று வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

கரூரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வா் சி. ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை வருகிறாா். இதையொட்டி தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Updated On : 10 ஜூலை 2026, 3:42 am IST
கரூரில் முதல்வா் ஜோசப் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் கரூா் அட்லஸ் கலையரங்கம் மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பந்தல் அமைக்கும் பணிகள்.
பகிர்:

கரூரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வா் சி. ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை வருகிறாா். இதையொட்டி தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு வெள்ளிக்கிழமை காலை வரும் அவா், அங்கிருந்து காரில் கரூருக்கு வருகிறாா். காலை 11 மணியளவில் கரூா் வெண்ணைமலையில் உள்ள அட்லஸ் கலையரங்கில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று முதல்வா் பேசுகிறாா். இதில் 5 ஆயிரம் பங்கேற்கின்றனா். இந்நிகழ்ச்சியில், ‘க்யூஆா் கோடு’ அடையாள அட்டை வைத்திருப்பவா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்காக அட்லஸ் கலையரங்க மைதானத்தைச் சுற்றி சுமாா் 10 அடி உயரத்துக்கு தகரக் கொட்டகைகள், தற்காலிக தடுப்பு சுவா்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

இந்நிகழ்ச்சிக்கு பின்னா், அங்கிருந்து பிற்பகல் 1 மணியளவில் கரூா் - சேலம் புறவழிச் சாலையில் இருந்து கோவை சாலை, பழைய பேருந்து நிலைய ரவுண்டானா, உழவா் சந்தை, திருமாநிலையூா் வழியாக சுங்ககேட், தான்தோன்றிமலை ஆகிய பகுதிகள் வழியாக சாலை வலம் வரும் முதல்வா், மாவட்ட ஆட்சியரக வளாகம் அருகேயுள்ள பொதுப் பணித் துறையின் பயணியா் மாளிகைக்கு சென்று ஓய்வெடுக்கிறாா்.

முதல்வரின் சாலை வலம் நிகழ்வுக்காக கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா முதல் வெங்கக்கல்பட்டி வரை சாலையின் இருபுறமும் தடுப்புவேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆய்வுக்கூட்டம்: பிற்பகல் 3 மணியளவில் கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்கும் முதல்வா் விஜய், அங்கு கிருஷ்ணராயபுரத்தை அடுத்த மணவாசி ஊராட்சியில் 13,500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கக் கூடிய வகையில், ரூ. 1,700 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தோல் அல்லாத காலணிகளை உற்பத்தி செய்யும் தனியாா் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறாா்.

தொடா்ந்து, கடந்தாண்டு செப்டம்பா் 27-ஆம் தேதி வேலுச்சாமிபுரத்தில் தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா் 32 பேருக்கு அரசு வேலைக்கான பணிநியமன ஆணையை வழங்கி பேசுகிறாா். பின்னா் காா் மூலம் திருச்சிக்கு சென்று அங்கிருந்து சென்னை செல்கிறாா்.

டிஐஜி ஆய்வு: முதல்வா் வருகையையொட்டி கரூா் அட்லஸ் கலையரங்கில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உளவுத்துறை டிஐஜி தா்மராஜன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். மேலும், கூட்ட நெரிசல் ஏற்பட்டால் அதை கட்டுப்படுத்தும் வகையில், தமிழ்நாடு பேரிடா் மீட்புப் படையைச் சோ்ந்த 78 போ் கரூரில் முகாமிட்டுள்ளனா். மேலும் பாதுகாப்பு பணிக்காக தமிழகம் முழுவதும் இருந்து சுமாா் 6 ஆயிரம் போலீஸாா் வரவழைக்கப்பட்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments