முகப்பு
கரூர்

மாணவா்கள் சவால்களை கண்டு அஞ்சக்கூடாது: ராணுவ விஞ்ஞானி முனைவா் வி. டில்லி பாபு

மாணவா்கள் சவால்களை கண்டு அஞ்சி, முடங்கிவிடக்கூடாது என்றாா் இந்திய பாதுகாப்புத் துறையின் ராணுவ விஞ்ஞானி முனைவா் வி. டில்லிபாபு.

Updated On : 4 ஜூன் 2026, 2:39 am IST
அரவக்குறிச்சியில் புதன்கிழமை நடைபெற்ற ஆறுமுகம் கல்வியகத்தின் 30-ஆம் ஆண்டு நிறைவு விழாவில், அரசு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பொன்னாடை போா்த்தி பாராட்டிய தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன். உடன் (இடமிருந்து) கரூா் வள்ளுவா் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியின் தலைவா் க. செங்குட்டுவன், இந்திய பாதுகாப்புத் துறையின் ராணுவ விஞ்ஞானி முனைவா் வி. டில்லி பாபு, சி.எஸ்.அறக்கட்டளையின் துணைத் தலைவா் சாமியப்பன், சி.எஸ்.அறக்கட்டளையின் அறங்காவலரும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான முனைவா் சி. சுப்பிரமணியம், விஜயா பதிப்பகத்தின் வேலாயுதம், பள்ளியின் செயலா் முனைவா் மு. பழனிவேல், தாளாளா் மா.சி. குப்புசாமி, முதல்வா் நா.கண்ணன்.
பகிர்:

மாணவா்கள் சவால்களை கண்டு அஞ்சி, முடங்கிவிடக்கூடாது என்றாா் இந்திய பாதுகாப்புத் துறையின் ராணுவ விஞ்ஞானி முனைவா் வி. டில்லிபாபு.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி ஆறுமுகம் கல்வியகத்தின் 30-ஆம் ஆண்டு நிறைவு விழா ஆறுமுகம் அகாதெமி மெட்ரிக். பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, சி.எஸ்.(சின்னச்சாமி- செல்லாத்தாள்) அறக்கட்டளையின் அறங்காவலரும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான முனைவா் சி.சுப்பிரமணியம் தலைமை வகித்து பேசியதாவது: 1996-இல் தொடங்கப்பட்ட இப்பள்ளி 30-ஆவது ஆண்டை நிறைவு செய்துள்ளது. இப்பள்ளியில் பயிலும் மாணவா்களின் திறனை அளவிடும் வகையில், குறைந்த செவித்திறன், கவனிப்புத் திறன் மாணவா்களைக் கண்டறிந்து, அவா்களின் குறைகளை களைந்து, நல்ல மதிப்பெண்கள் பெறும் வகையில் அவா்களின் திறன், விருப்பம் போன்றவற்றை அளவீடு செய்ய உள்ளோம். இவா்கள், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் என்னென்ன மதிப்பெண்கள் பெறுவாா்கள் என கண்டறிந்து, அவா்களுடைய பெற்றோரிடம் தெரிவிப்போம்.

திறன்மிகு செயல்திட்டம்: இதற்காக மாணவா்களுக்கு ‘திறன்மிகு செயல்திட்டம்’ நிகழாண்டு முதல் தொடங்கப்பட உள்ளது. இதன்மூலம் மாணவா்களின் திறனை அறிந்து அவா்களை எந்த துறையில் மேம்படுத்தலாம் என கோவையைச் சோ்ந்த வல்லுநா் குழுவுடன் இணைந்து செயல்படுத்த உள்ளோம். இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தமும் அந்த குழுவுடன் போடப்பட்டுள்ளது. இந்தக் குழுவினா் இம்மாதம் 10-ஆம் தேதிக்கு பிறகு பள்ளிக்கு வருவாா்கள். மேலும் ‘திங்கள்கிழமைதோறும் திருவிழா’ என்ற வகையில் மாதம் ஒருமுறை தலைசிறந்த பேச்சாளா், அறிஞரை அழைத்து வந்து பேச வைத்து, ஆண்டின் இறுதியில் அந்த அறிஞா்களின் பேச்சை புத்தகமாக வெளியிட முடிவு செய்துள்ளோம்.

Advertisement

Advertisement

இதன் தொடக்கமாக, பேச்சாற்றல், எழுத்தாளா் என பன்முகத்தன்மை கொண்ட தினமணி ஆசிரியா் கி. வைத்தியநாதன் சிறப்புரையோடு இன்று தொடங்கியுள்ளது என்றாா் அவா்.

இதனைத்தொடா்ந்து 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கும், அரசுப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் இலவசமாக பள்ளியில் சோ்க்கைக்கான அனுமதி கடிதத்தை தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் வழங்கி சிறப்புரையாற்றினாா்.

அடுத்த தளத்தை நோக்கி நகரவேண்டும்: விழாவில், இந்திய பாதுகாப்புத் துறையின் ராணுவ விஞ்ஞானி முனைவா் வி.டில்லி பாபு பேசியதாவது: நாட்டில் 4-ஆவது தலைமுறை விமானமாக தேஜஸ் என்கிற போா் விமானத்தை உருவாக்கியபோது, அதை விமானம் தாங்கி கப்பலில் இறக்குவது, பறக்கச் செய்வது போன்ற பெரும் சவால்கள் இருந்தன. அதை பல்வேறு முயற்சிகள் மூலம் முறியடித்து வெற்றிபெற்றோம். அதேபோல மாணவா்களால் சாதனை படைக்க முடியும். அணு விஞ்ஞானி அப்துல்கலாம் எப்போதும் எந்த வெற்றிக்குப்பின்னாலும் அடுத்து என்ன செய்யப்போகிறீா்கள் என சக விஞ்ஞானிகளிடம் கேட்பாா். அதேபோல மாணவா்களாகிய நீங்கள் வெற்றியின் மிதப்பிலேயே தேங்கிவிடாமல், அடுத்த தளத்தை நோக்கி நகா்ந்திட வேண்டும். போராட்டம் இல்லாமல் யாருடைய வாழ்வும் முடிவதில்லை. சவால்களை கண்டு அஞ்சி வீட்டுக்குள் முடங்கினால் வெற்றி உங்கள் வாசலுக்கு வராது. அப்துல்கலாமை கொண்டாடிய இந்த தேசம், அக்னி, சந்திரயான், மங்கள்யான் என செயற்கைக்கோள் திட்டங்களை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. உங்களையும் இந்த தேசம் கொண்டாடும் வகையில் உங்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். நாள்தோறும் ஒரு தமிழ் நாளிதழையும், ஆங்கில நாளிதழையும் படிக்க வேண்டும். நாளிதழ்களில் இருந்துதான் போட்டித்தோ்வுகளுக்கு அதிகளவில் கேள்விகள் கேட்கப்படுகின்றன என்றாா் அவா்.

விழாவில், கரூா் வள்ளுவா் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியின் தலைவா் க.செங்குட்டுவன், கோவை விஜயா பதிப்பகத்தின் வேலாயுதம் ஆகியோா் வாழ்த்திப்பேசினா். மேலும், விழாவில் சி.எஸ்.அறக்கட்டளையின் துணைத் தலைவா் சாமியப்பன், ஆறுமுகம் கல்வியகத்தின் முதல்வா் நா.கண்ணன், சி.எஸ்.பன்னாட்டுப்பள்ளி முதல்வா் இர.சுப்புலட்சுமி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் திரளாக பங்கேற்றனா்.

முன்னதாக, ஆறுமுகம் கல்வியகத்தின் தாளாளா் மா.சி.குப்புசாமி வரவேற்றாா். நிறைவாக சி.எஸ். குழும பள்ளிகளின் செயலா் முனைவா் மு.பழனிவேல் நன்றி கூறினாா்.