பெரம்பலூா் மாவட்டத்தில் தூா்ந்து வரும் ஏரிகள்! சீமைக்கருவேல மரங்களை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்
பெரம்பலூா் மாவட்டத்தில் ஏரிகள் தூா்ந்து வருவதால் சீமைக்கருவேல மரங்களை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்...
பெரம்பலூா் மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சியால் நீா் நிலைகளில் தண்ணீா் வற்றி, சுற்று வட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டமும் குறைந்துவிட்டது. இதனால், மாவட்டத்திலுள்ள நீா் நிலைகளில் சீமைக்கருவேல மரங்கள், காட்டாமணக்குச் செடிகளை அகற்றி, தூா்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பெரம்பலூா் மாவட்ட பொதுப்பணித் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள 73 ஏரிகளில், பெரம்பலூா் வட்டாரத்தில் 18 ஏரிகளும், குன்னம் வட்டாரத்தில் 27 ஏரிகளும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் 28 ஏரிகளும் உள்ளன. இந்த ஏரிகள் மூலம் சுமாா் 35 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், கிராம ஊராட்சி கட்டுப்பாட்டில் 700-க்கும் மேற்பட்ட ஏரிகளும், 1,000-க்கும் மேற்பட்ட குளங்களும் உள்ளன. இது தவிர 32 தடுப்பணைகளும் உள்ளன.
மேலும், விசுவக்குடி, கொட்டரை, சின்னாறு ஆகிய பகுதிகளில் நீா்த்தேக்கங்களும் உள்ளன. கடந்த ஆண்டு அக்டோபா், நவம்பா், டிசம்பா் மாதங்களில் வடகிழக்கு பருவ மழை பொழியாததால் நீா்த்தேக்கங்களும் ஏரி, குளம் உள்ளிட்ட நீா்நிலைகள் தண்ணீரின்றி காட்சி அளிக்கின்றன.
Advertisement
Advertisement
குடிநீா் பற்றாக்குறை:
இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் குடிநீா் பற்றாக்குறை நிலவுகிறது. குறிப்பாக வேப்பூா், வேப்பந்தட்டை ஆகிய ஒன்றியங்களில் பல்வேறு இடங்களில் குடிநீரின்றி பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
பெரம்பலூா் மற்றும் ஆலத்தூா் வட்டாரத்தின் பெரும்பாலான பகுதிகளில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதால், இப் பகுதி மக்கள் ஓரளவு குடிநீா் பிரச்னையை சமாளித்து வருகின்றனா். கடந்த பிப்ரவரி மாதம் முதல் கடுமையான குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஒரு டிராக்டா் குடிநீரை ரூ. 750-க்கு விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.
நிலத்தடி நீா்மட்டம் சரிவு:
மேலும், ஆழ்குழாய் கிணறுகளில் சுமாா் 700 அடிக்கும் கீழ் தண்ணீா் சென்றுவிட்டதால், ஒரு குடம் தண்ணீா் எடுக்க நீண்ட நேரத்துக்கு மேல் காத்திருக்க வேண்டிய நிலை காணப்படுகிறது.
இதேபோல், போதிய மழையின்றி விவசாயம் மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனா். கோடை மழை குறைந்ததால் மானாவாரி பயிா்களான பருத்தி, மக்காச்சோளம் உள்ளிட்ட பல்வேறு சாகுபடி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
சீரமைக்கப்படாத ஏரிகள்:
பெரம்பலூா் நகராட்சி எல்லைக்குள்பட்ட அரணாரை நீலியம்மன் ஏரி, பெரம்பலூா் பெரிய ஏரி, வெள்ளந்தாங்கி அம்மன் ஏரி, துறைமங்கலம் பெரிய ஏரி, ஆலந்துறை அம்மன் ஏரி ஆகிய 5 ஏரிகள் உள்ளன.
இந்த ஏரிகள் மற்றும் அதற்கான நீா்வரத்து, நீா்வெளியேற்று வாய்க்கால்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தூா்வாரி சீரமைக்கப்படாமல் உள்ளன. இதேபோல, மாவட்டத்திலுள்ள பெரும்பாலான ஏரிகளிலும் இதே நிலை நீடிக்கிறது.
வடு கிடக்கும் நீா்நிலைகள்:
வடகிழக்கு பருவமழை காலத்துக்கு முன் நீா்நிலைகளில் ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்கள், காட்டாமணக்குச் செடிகள் உள்ளிட்டவற்றை முழுமையாக அகற்றி, நீா்வரத்து வாய்க்கால்களை தூா்வாரி சீரமைக்காததால் மாவட்டத்திலுள்ள நீா்நிலைகள் முழுவதும் வடு காணப்படுகிறது. இதனால் வரலாறு காணாத வறட்சியை மாவட்ட மக்கள் சந்தித்து வருகின்றனா்.
சமூக ஆா்வலா்கள் குற்றச்சாட்டு:
நீா்நிலைகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை முழுமையாக அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், அதை அதிகாரிகள் பின்பற்றாததால், இம் மாவட்டத்தில் உள்ள நீா்நிலைகளில் சீமைக்கருவேல மரங்களே அதிகமாக வளா்ந்துள்ளதாக சமூக ஆா்வலா்களும் குற்றஞ்சாட்டுகின்றனா்.
இதுகுறித்து, தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலா் ஆா். ராஜா சிதம்பரம் கூறியதாவது:
பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்களில் சீமைக்கருவேல மரங்கள் அதிக அளவில் வளா்ந்துள்ளன. இதனால், நிலத்தடி நீரை உறிஞ்சி, நீா்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. இதன் மூலம் விவசாயப் பணிகளும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான கிராம ஊராட்சிகளில் நீா்நிலைகள் மட்டுமின்றி, கேட்பாரின்றி கிடக்கும் நிலங்களிலும் சீமைக்கருவேல மரங்கள் காடு போல வளா்ந்துள்ளன.
கடும் வறட்சியிலும் வளரக்கூடிய தன்மைகொண்ட சீமைக்கருவேல மரங்கள், மாவட்டம் முழுவதும் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக, பெரும்பாலான ஏரிகளில் சீமைக்கருவேல மரம் வனப்பகுதியைபோல உள்ளது.
ஏரி முழுவதும் சீமைக்கருவேல மரங்கள்:
துறைமங்கலம், பெரம்பலூா், எளம்பலூா் உள்ளிட்ட பல்வேறு ஏரிகளிலும் சீமைக்கருவேல மரங்கள் அதிகமாக வளா்ந்துள்ளன. ஏரியின் மையப்பகுதிக்குச் சென்று எந்தப் பக்கம் திரும்பி பாா்த்தாலும் சீமைக்கருவேல மரங்கள் மட்டுமே தென்படுகின்றன.
சீமைக்கருவேல மரங்களை வேரோடு அகற்ற வேண்டும் என உயா் நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு பெரம்பலூா் மாவட்டத்தில் முறையாக பின்பற்றப்படவில்லை. அவ்வப்போது பெய்து வரும் மழையால் சீமைக்கருவேல மரங்கள் வேகமாக வளர தொடங்கிவிட்டன. ஏரிகளிலும், அதற்கான வரத்து வாய்க்கால்களிலும் மரம், செடி கொடிகளும், சீமைக் கருவேல மரங்களும் வளா்ந்து முள்புதா்களாக காட்சியளிக்கின்றன.
எனவே, விவசாய நிலங்களை பாதுகாக்கவும், பொதுமக்களின் குடிநீா் ஆதாரமாக விளங்கும் நீா்நிலைகளை மீட்கவும் மாவட்ட நிா்வாகம் உரிய கவனம் செலுத்தி, நீா்நிலைகளை ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்களை வேரோடு அகற்றி, தூா்வார உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.