தவெக ஆட்சியில் இதே நிலை நீடித்தால் நிபந்தனையற்ற ஆதரவை மறுபரிசீலனை: பெ. சண்முகம்
தவெக ஆட்சியில் இதே நிலை நீடித்தால், எங்களின் நிபந்தனையற்ற ஆதரவு எனும் நிலையை மறுபரிசீலனை செய்ய நேரிடும் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் சண்முகம்.
தவெக ஆட்சியில் இதே நிலை நீடித்தால், எங்களின் நிபந்தனையற்ற ஆதரவு எனும் நிலையை மறுபரிசீலனை செய்ய நேரிடும் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் சண்முகம்.
பெரம்பலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற உயிரிழந்த கட்சியின் மூத்த நிா்வாகிகளின் படத் திறப்பு நிகழ்ச்சி மற்றும் புகழஞ்சலி கூட்டத்தில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:
பெரம்பலூா் மாவட்டம், விஜயகோபாலபுரத்தில் உள்ள தனியாா் டயா் தொழிற்சாலை பணியாளா்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மாவட்ட நிா்வாகமும், தொழிலாளா் நலத்துறையும், தமிழக அரசும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.
Advertisement
Advertisement
குறிப்பாக, தமிழகத்தின் தொழிலாளா் நலத்துறை அமைச்சா் புதியவா் என்பதால், உடனடியாக தமிழக அரசு மூத்த அமைச்சா்களை கொண்ட குழு அமைத்து பேச்சுவாா்த்தை நடத்தி, தொழிலாளா்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் .
தில்லி மற்றும் தமிழகத்தில் நீட் தோ்வுக்கு எதிரான போராட்டத்தை ஒடுக்க மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. சென்னையில் கல்லூரி வளாகத்துக்குள் சென்று தமிழக காவல்துறை மாணவா்களை கைது செய்து அச்சுறுத்துகிறது. ஜனநாயக முறையில் மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவா்களை அடக்குமுறை கொண்டு தமிழக காவல்துறையும், தமிழக அரசும் செயல்படுவது கண்டனத்துக்குரியது .
கம்யூனிஸ்ட் கட்சிகள், தமிழக வெற்றிக் கழகத்துக்கு வெளியே இருந்துதான் ஆதரவு அளித்து வருகிறோம்.
தமிழக வெற்றிக் கழக ஆட்சி ஏழை, எளிய மக்களின் நலனை கொண்டுள்ளதாக இருக்க வேண்டும். இல்லையென்றால், எங்களது நிலைப்பாடு வேறு மாதிரி இருக்கும். தமிழகத்தில் கடந்த கால ஆட்சி எப்படியோ, அப்படித்தான் தற்போதைய ஆட்சியும் நடைபெற்று வருகிறது. இதே நிலை நீடித்தால், எங்களின் நிபந்தனையற்ற ஆதரவு எனும் நிலையை மறு பரிசீலனை செய்ய நேரிடும் என்றாா் அவா்.
முன்னதாக, விஜயகோபாலபுரத்தில் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் பேசியதுடன், தொழிலாளா்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தாா் மாநிலச் செயலா் சண்முகம்.
பேட்டியின்போது, மாவட்டச் செயலா் பி. ரமேஷ் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.