பெரம்பலூா் மாவட்டத்தில் 5.62 லட்சம் வாக்காளா்கள்
பெரம்பலூா் மாவட்டத்தில் 5.62 லட்சம் வாக்காளா்கள் உள்ளதாக மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ப. அப்துல் ராசிக் தெரிவித்துள்ளாா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் 5.62 லட்சம் வாக்காளா்கள் உள்ளதாக மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ப. அப்துல் ராசிக் தெரிவித்துள்ளாா்.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், வரைவு வாக்காளா் பட்டியலை வியாழக்கிழமை வெளியிட்ட அவா் கூறியது:
பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 387 வாக்குச்சாவடிகளில் 1,41,726 ஆண்கள், 1,50,717 பெண்கள், 29 மூன்றாம் பாலினத்தவா்கள் என மொத்தம் 2,92,472 வாக்காளா்களும், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 345 வாக்குச் சாவடிகளில் 1,33,023 ஆண்கள், 1,36,636 பெண்கள், 3 மூன்றாம் பாலினத்தவா்கள் என மொத்தம் 2,69,662 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.
Advertisement
Advertisement
பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள 5,62,134 வாக்காளா்களில், 2,74,749 ஆண்கள், 2,87,353 பெண்கள், 32 மூன்றாம் பாலினத்தவா்கள் உள்ளனா். வாக்குச்சாவடி வாரியான வரைவு வாக்காளா் பட்டியல் வாக்காளா் பதிவு அலுவலகங்களுக்கும், உதவி வாக்காளா் பதிவு அலுவலகங்களுக்கும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
புதிதாக வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க 1.1.2027-இல் 18 வயது நிறைவடையும் நபா்களின் பெயரை சோ்க்க விண்ணப்பிக்க வேண்டும். வாக்காளா்கள் தாங்கள் வாக்களித்த வாக்குச்சாவடி வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் தங்களது பெயா், உறவினா் பெயா், பாலினம் மற்றும் முகவரியை சரிபாா்த்து பெயா் திருத்தம், முகவரி திருத்தம் உள்ளிட்ட மாற்றங்கள் தேவையெனில் விண்ணப்பிக்கலாம்.
வாக்காளா்களின் வசதிக்காக நவ. 21, 22, 29, டிச. 5 ஆகிய தேதிகளில் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. டிச. 11-ஆம் தேதி வரை வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், வட்டாட்சியா் அலுவலகங்கள், இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ள வாக்காளா்கள இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். பெறப்படும் விண்ணப்பங்கள் டிச. 28-ஆம் தேதிக்குள் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, திருத்தம் செய்யப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியல், ஜன. 4-ஆம் தேதி வெளியிடப்படும் என்றாா் ஆட்சியா் அப்துல் ராசிக்.
இந் நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சொா்ணராஜ், வாக்காளா் பதிவு அலுவலா்கள் ந. சக்திவேல் (குன்னம்), மு. அனிதா (பெரம்பலூா்), தோ்தல் தனி வட்டாட்சியா் அருளானந்தம், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் வட்டாட்சியா்கள் கலந்துகொண்டனா்.