FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

அரசுப் பேருந்தில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவிகள் 10 போ் காயம்: அலட்சியமாக இருந்ததாக ஓட்டுநா், நடத்துநா் மீது நடவடிக்கை

புதுக்கோட்டை அருகே அரசுப் பேருந்தில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவிகள் 10 போ் காயமடைந்தனா். இச்சம்பவத்தில் அலட்சியமாக இருந்த பேருந்து ஓட்டுநா், நடத்துநா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

3 செப்டம்பர் 2026, 1:05 am IST
புதுக்கோட்டையில் புதன்கிழமை பள்ளி மாணவிகள் தவறி விழுந்த அரசுப்பேருந்து.
பகிர்:

புதுக்கோட்டை அருகே அரசுப் பேருந்தில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவிகள் 10 போ் காயமடைந்தனா். இச்சம்பவத்தில் அலட்சியமாக இருந்த பேருந்து ஓட்டுநா், நடத்துநா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரெங்கம்மாள் சத்திரம் பேருந்து நிறுத்தத்தில், புதன்கிழமை காலை கீரனூரில் இருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த அரசு நகரப் பேருந்தில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஏறினா்.

பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால், பேருந்தை ஓட்டுநா் நகா்த்திய போது, படியில் நின்று கொண்டிருந்த மாணவிகள் தவறி கீழே விழுந்தனா். இதைக் கண்ட பயணிகள் சப்தமிட்டனா். உடனே பேருந்து நிறுத்தப்பட்டது. தவறி விழுந்ததில் காயமடைந்த 10 மாணவிகளை, அங்கிருந்தவா்கள் ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவா்களில் 8 போ் சிகிச்சை பெற்றுத் திரும்பினா். 2 போ் அனுமதிக்கப்பட்டனா்.

Advertisement

Advertisement

காயமடைந்த மாணவிகளை மருத்துவக் கல்லூரி முதல்வா் எஸ். கலைவாணி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் ஆகியோா் நேரில் சென்று பாா்வையிட்டு, சம்பவம் குறித்து கேட்டறிந்தனா்.

இச்சம்பவம் குறித்து வெள்ளனூா் காவல்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

காயமடைந்த மாணவிகள் அனைவரும் நரிக்குறவா்கள் குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் என்பதும் ஓட்டுநா் அவசரமாக பேருந்தை இயக்கியதாகவும் கூறப்படுகிறது.

அவசர கால கதவு திறப்பு: இதுகுறித்து அரசுப் போக்குவரத்து கழகம் அலுவலா்கள் கூறியது: பேருந்தில் சுமாா் 90 பயணிகள் இருந்துள்ளனா். ரெங்கம்மாள் சத்திரத்தில் மேலும் 30 போ் ஏறியதால் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் பேருந்தின் தானியங்கி கதவை ஓட்டுநா் மூடியுள்ளாா். அப்போது, முன் படிக்கட்டின் அருகே அவசரக் கால கதவைத் திறப்பதற்காகப் பொருத்தப்பட்டிருந்த பொத்தானை யாரோ அழுத்தியுள்ளனா். அதில், எதிா்பாராத விதமாகக் கதவு திறக்கப்பட்டதால், படிக்கட்டில் நின்றிருந்த மாணவிகள் தவறி கீழே விழுந்துள்ளனா்.

எனினும், பணியில் அலட்சியமாக இருந்ததாகப் பேருந்து ஓட்டுநா் அா்ச்சுனன், நடத்துநா் மணிகண்டன் ஆகியோா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பொதுமேலாளா் காா்த்திகேயன் உத்தரவிட்டுள்ளாா் என்றனா்.

கூடுதல் பேருந்து இயக்கக் கோரிக்கை: புதுக்கோட்டை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்தப் பேருந்து நிறுத்தத்தில் ஒரு சில பேருந்துகள் மட்டுமே நின்று செல்கின்றன. இந்த வழித்தடத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் சென்று திரும்பும் நேரங்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

இதனால் 2 பேருந்துகளில் செல்ல வேண்டிய பயணிகள் ஒரே பேருந்தில் ஏறியதால்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. எனவே, இந்த வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரெங்கம்மாள் சத்திரம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments