தஞ்சாவூர் மாவட்டத்தில் 78,000 இலவச எரிவாயு இணைப்பு
பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா விரிவாக்க திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் 78,000 இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா விரிவாக்க திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் 78,000 இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் சிட்கோ வளாகத்தில் இத்திட்டத்தின் கீழ் புதிய இணைப்புகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்ற இந்தியன் ஆயில் நிறுவன விற்பனை அலுவலர் ஜெ. ரோஷிணி, பாரத் பெட்ரோலியம் நிறுவன விற்பனை அலுவலர் ஷிவஅகர்வால் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்வோருக்காக கொண்டு வரப்பட்ட பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, ஆதிதிராவிடர்களுக்கும், பழங்குடியினருக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டது.
புகையில்லா இந்தியாவை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத் தற்போது இத்திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி பெண்களின் பெயரில் ஏழைகளுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் மத்திய அரசின் இலவச அரிசி (அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்) பெறுவோருக்கும் புதிய இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கப்படுகின்றன.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பாரத் கேஸ், இந்தியன் ஆயில் நிறுவனம், ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தைச் சார்ந்த 39 முகவர்கள் மூலம் 78,079 பேருக்கு இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, டிச. 28-ம் தேதி நிலவரப்படி, மாவட்டத்தில் 72.77 சதவீதம் பேருக்குக் கிடைத்துள்ளது. தகுதியான குடும்பத்துக்கு இலவச இணைப்புகள் வழங்கப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் அந்தந்தப் பகுதியில் உள்ள சமையல் எரிவாயு முகவர்களை அணுகி இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம் என்றனர்.
இந்நிகழ்ச்சிக்கு சமையல் எரிவாயு விற்பனை முகவர்கள் சுமதி, சேதுக்கரசி, அம்பிகாபதி ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், தஞ்சாவூர், திருவையாறு, கும்பகோணம், சுவாமிமலை, பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள சமையல் எரிவாயு முகவர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.