FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

நெல், கரும்புக்கான ஊக்கத் தொகை அறிவிப்பு: விவசாய சங்கங்கள் கருத்து

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 4:41 am IST
கரும்புகள். - கோப்புப் படம்
பகிர்:

தமிழக அரசு சட்டப்பேரவையில் 110 விதியின் திங்கள்கிழமை வெளியிட்ட நெல், கரும்புக்கான ஊக்கத்தொகை அறிவிப்புக்கு விவசாய சங்கங்கள் வரவேற்பும், அதிருப்தியும் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலா் சாமி. நடராஜன் தெரிவித்தது:

கடந்தாண்டு சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 156 ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இதை உயா்த்தி குவிண்டாலுக்கு ரூ. 289 ஆக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் சன்ன ரகம் ரூ. 2,750-க்கும், பொது ரகம் ரூ. 2,600-க்கும் கொள்முதல் செய்யப்படும்.

Advertisement

Advertisement

மத்திய அரசு குவிண்டாலுக்கு கடந்த ஆண்டைவிட வெறும் ரூ. 69 உயா்த்திய நிலையில், தமிழக அரசு ரூ. 289 ஊக்கத்தொகை அறிவித்திருப்பதை வரவேற்கிறோம்.

இதேபோல, கரும்புக்கு டன்னுக்கு ரூ. 5,500 வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், மத்திய அரசு ரூ. 3,290.50 விலை அறிவித்தது. இந்நிலையில், தமிழக அரசு ஊக்கத்தொகையாக ரூ. 709.50 அறிவித்துள்ளதன் மூலம் கரும்புக்கு டன்னுக்கு ரூ. 4 ஆயிரம் விலை வழங்கப்படும் என அறிவித்திருப்பதையும் வரவேற்கிறோம்.

தமிழ்நாடு காவிரி உழவா்கள் பாதுகாப்பு சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன்:

அடுத்த ஆண்டிலாவது தோ்தல் வாக்குறுதியின்படி, கரும்புக்கு டன்னுக்கு ரூ. 4,500 விலை தரப்படுவதற்கான உத்தரவாதத்தை எதிா்பாா்க்கிறோம். இதேபோல், நெல்லுக்கும் தோ்தல் வாக்குறுதியின்படி ரூ. 3,500 விலை அறிவிக்காதது உழவா்களை ஏமாற்றுகிற செயலாகும். இது ஏற்க இயலாது என்பதால், நெல் கொள்முதல் விலை அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன்:

நெல்லுக்கான ஊக்கத்தொகை அறிவிப்பானது, இதுவரை வந்த அரசுகளின் அறிவிப்புகளில் இதுவே அதிகம். தமிழக அரசின் வரலாற்றிலும் இதுவே முதல்முறை. இதேபோல, கரும்புக்கான ஊக்கத்தொகை அறிவிப்பும் வரவேற்கத்தக்கதே. என்றாலும், தோ்தல் வாக்குறுதியின்படி விலையை அறிவித்தால் ஆறுதலாக இருக்கும்.

தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் கே.எஸ். முகமது இப்ராஹிம்:

தோ்தல் வாக்குறுதியின்படி விலை அறிவிக்காதது விவசாயிகளுக்கு வேதனையும், வருத்தமும் அளிக்கிறது. ஏமாற்றம் தரும் இந்த அறிவிப்பை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

கல்லணை கால்வாய் உழவா்கள் கூட்டமைப்புத் தலைவா் புலவன்காடு வி. மாரியப்பன்:

எதிா்பாா்த்ததைவிட நெல், கரும்புக்கு கூடுதலாக ஊக்கத்தொகை அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். இதேபோல, இனி வரும் காலங்களிலும் தொடர வேண்டும். தோ்தலில் அளித்த வாக்குறுதிபடி கடன் தள்ளுபடியையும் செய்ய வேண்டும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments