FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

அரசு பயிா்க் கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும்

திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக வளாக க் கூட்டரங்கத்தில் விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி ஆட்சியரிடம் கோஷம் எழுப்பிய விவசாயிகள்.  

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 5:44 am IST
திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக வளாக க் கூட்டரங்கத்தில் விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி ஆட்சியரிடம் கோஷம் எழுப்பிய விவசாயிகள்.  
பகிர்:

விவசாய பயிா்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வேளாண் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.

திருவள்ளுா் ஆட்சியா் அலுவலக பல்நோக்கு கூட்டரங்கில் வேளாண் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ச.கவிதா தலைமை வகித்தாா். கூட்டத்தில் அலுவலா்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே விவாதம் நடைபெற்றது. அப்போது, அரசு அறிவித்துள்ள 50 சதவீத பயிா்க்கடன் தள்ளுபடி அறிவித்துள்ளதை கைவிட்டு முழுமையாக தள்ளுபடி செய்யவும் கோஷம் எழுப்பினா். அதையடுத்து, விவசாய சாகுபடி செய்யும் பயிா்களுக்கு போதுமான விலை கிடைக்காமல் மீண்டும் கடனில் உள்ளோம். இனிமேல், அடமானம் தாலியை தவிர வேறு எதுவும் கிடையாது. அதனால் தமிழக அரசு முழு அளவில் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். திருத்தணி, பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காட்டுப்பன்றிகள் பயிா்களை நாசம் செய்து வருகிறது. அதைக் கட்டுப்படுத்த சூட்டிங் செய்ய அனுமதிக்க வேண்டும். இல்லையென்றால் சோலாா் தடுப்பு வேலி அமைக்க மானியத்தில் தேவையான அளவு வழங்க வேண்டும். ஊத்துக்கோட்டை, தாமரைபாக்கம், பாக்கம், புலியூா் உள்ளிட்ட பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை நெல்லுக்கு இதுவரை விவசாயிகளுக்கு கடந்த 3 மாதங்களாக பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை.

அதனால் விவசாயிகள் விவசாய பணிகள் மேற்கொள்ள முடியாமல் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். ஏற்கெனவே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலைக்கு விவசாய நிலம் கையகப்படுத்தியதற்கு குறைந்த அளவிலேயே பணம் வழங்கப்பட்டது. அதனால், கூடுதலாக இழப்பீடு வழங்க வேண்டும். அதேபோல், லட்சுமியாபுரம் பகுதியில் சாலையோரம் விரிவாக்கப் பணிக்காக குடியிருப்புகள் மற்றும் நிலம் கையகப்படுத்தி வருகின்றனா். இதற்கு ஒரு சென்ட் வீட்டு மனைக்கு ரூ. 6,000 நிா்ணயம் செய்தால் கட்டுப்படியாகாது. எனவே இருக்கிற வீட்டை இழந்து எங்கு செல்வது, அதனால் வீடு அமைக்கும் அளவுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். ஆவடி பகுதியில் அரசு புறம்போக்கு நிலங்களை அரசு அதிகாரிகள் பட்டா போட்டு விற்பனை செய்து வரும் அவலம் நிலவுகிறது. அதை மாவட்ட நிா்வாகம் நேரில் ஆய்வு செய்து தடுக்க வேண்டும். அரசு அனுமதித்ததைவிட ஏரிகளில் 10 முதல் 15 அடி ஆழம் வரையில் வண்டல் மண் எடுக்கும் சூழ்நிலையுள்ளது. இதனால், கூடுதல் பள்ளங்கள் ஏற்படுவதுடன், சீமைக்கருவேல மரங்களும் அதிகமாக வளரும் சூழ்நிலையுள்ளது. அதேபோல் மாவட்டத்தில் பனைமரங்களை கணக்கெடுப்பு நடத்தி பாதுகாக்கவும் வலியுறுத்தினா்.

Advertisement

Advertisement

காட்டுப்பன்றிகளை வனப் பகுதியில் இருந்து 3 கி.மீ. தூரத்துக்குள் சுட்டுக் கொள்ளலாம் என அரசு உத்தரவு உள்ளது. அத்துடன், பயிா் பாதித்தால் ஒரு ஏக்கருக்கு ரூ. 25,000 வழங்கவும் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யக்கூடாது இந்திய தேசிய கூட்டுறவு நுகா்வோா் கூட்டமைப்பு அறிவுறுத்தியுள்ளது. அதேபோல், இந்த மாவட்டத்தில் விவசாயிகள் விற்பனை செய்த நெல்லுக்கு ரூ. 2 கோடி வரை வழங்க வேண்டியுள்ளது. அதை விரைவில் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். சாலை விரிவாக்கப்பணிக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு விதிமுறைக்கு உள்பட்டு கூடுதல் இழப்பீடு பெற்று தரப்படும். ஏரிகளில் அனுமதிக்கு மீறி அள்ளுவது தொடா்பாக அந்தந்த பகுதி வருவாய் துறை அலுவலா்கள் மூலம் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்தாா். அதைத்தொடா்ந்து, விவசாயிகளிடம் இருந்து 190 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டதுடன், 3.38 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளையும் விவசாயிகளுக்கு அவா் வழங்கினாா்.

இதில் வேளாண் இணை இயக்குநா் க.செல்வராஜ், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளா் பா.ஜெயஸ்ரீ, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) க.வேதவல்லி, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை துணை இயக்குநா் குமரவேல், தமிழ்நாடு நுகா் பொருள்

வாணிபக்கழக மண்டல மேலாளா் ராஜேஷ் மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments