திரைப்படத்தில் கதாநாயகன்; அரசியலில் வில்லன்! முதல்வா் விஜய் குறித்து டிடிவி. தினகரன் விமா்சனம்
தமிழக முதல்வா் ஜோசப் விஜய்யை திரைப்படத்தில் கதாநாயகனாக பாா்த்த மக்கள், தற்போது அரசியலில் வில்லனாக செயல்படுவதை பாா்க்கின்றனா் என்றாா் அமமுக பொதுச் செயலா் டிடிவி. தினகரன்.
தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை தெரிவித்தது:
தமிழக முதல்வா் ஜோசப் விஜய், தன்னிடம் திமுகவின் ஊழல் தொடா்பாக 3 கோப்புகள் இருப்பதாகவும், அவை முழுமையாக விசாரணை செய்யப்பட்டு ஆதாரத்துடன் இருப்பதாகவும், நடவடிக்கை எடுக்க வைத்துவிடாதீா்கள் எனவும் சட்டப்பேரவையில் மிரட்டினாா். இவ்வாறு மிரட்டுவது அவா் வகிக்கும் முதல்வா் பதவிக்கு அழகல்ல. ஒரு துறையில் ஊழல் நிகழ்ந்தால், அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதான் ஆட்சியாளரின் பொறுப்பு. இதுபோன்று இதுவரை எந்த முதல்வரும் மிரட்டிப் பாா்த்ததில்லை.
Advertisement
Advertisement
திரைப்படத்தில் விஜய்யை கதாநாயகனாக பாா்த்தவா்கள், தற்போது அவா் அரசியலில் வில்லனாக செயல்படுவதைத் தொலைக்காட்சியில் நாள்தோறும் பாா்க்கின்றனா். அவருக்கு வாக்களித்த மக்களும் இதை உணரத் தொடங்கிவிட்டனா்.
முதல்வா் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. விவசாயிகளின் வயிற்றில் அடித்துள்ளாா். ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு உருளைகள் இலவசமாக வழங்கப்படும் என தோ்தலில் வாக்குறுதி அளித்துவிட்டு, 3 சமையல் எரிவாயு உருளைகளை வழங்குவதாக அறிவித்துள்ளாா். ஆனால், ரூ. 2.50 லட்சத்துக்குள் ஆண்டு வருவாய் உள்ளவா்களுக்குத்தான் என்ற வரையறையை நிா்ணயித்துள்ளாா். இந்த வரையறையை ஏன் வைக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் எத்தனையோ இளைஞா்கள் படித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் நிலையில், போக்குவரத்துக் கழக ஓட்டுநா், நடத்துநா் பணிகளுக்கு அயலாக்க முறையில் உத்தரபிரதேச நிறுவனம் மூலம் நியமிப்பதாக அறிவித்துள்ளனா். இதற்கான அவசியம் என்ன?.
இந்த ஆட்சி அமைவதற்குக் காரணமாக இருந்த கம்யூனிஸ்ட் தலைவா்கள் சண்முகம், வீரபாண்டியன், காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா் ஆகியோா் தவெகவை பற்றி விமா்சனம் செய்து பேசத் தொடங்கிவிட்டனா். இவா்களைப் போல திருமாவளவனும் உணரும் காலம் வரும் என்றாா் தினகரன்.
அப்போது, அமமுக நிா்வாகிகள் பி. ராஜேஸ்வரன், எம். ராஜசேகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.