வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கார் என்ற அறிவிப்பை முதல்வர் திரும்பப்பெற வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளது பற்றி...
வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் தனது சொந்த செலவில் வாங்கித் தரலாம் என டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
மேலும், அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கார் என்ற அறிவிப்பை முதல்வர் விஜய் திரும்பப்பெற வேண்டும் என அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் புதன்கிழமை (ஆக. 19) வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக டிடிவி தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
Advertisement
Advertisement
தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் அரசு சார்பில் வாகனமும், ஓட்டுநரும், வாகனப் பராமரிப்புக்காக மாதந்தோறும் ரூ. 75 ஆயிரமும், உதவியாளருக்கு ரூ. 25 ஆயிரமும் வழங்கப்படும் என்ற முதல்வர் ஜோசப் விஜய்யின் அறிவிப்பு “கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது” போன்ற செயலாகும்.
சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களில் பெரும்பாலானோர் ஏற்கெனவே சொந்தமாக வாகனம் வைத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு கூடுதலாக அரசு சார்பில் கார் வழங்குவதும், மாதந்தோறும் ரூ. 75 ஆயிரம் வாகனப் பராமரிப்புத் தொகையாக வழங்குவதும் அரசுக்கு அவசியமற்ற கூடுதல் செலவாகவே பார்க்க வேண்டியுள்ளது.
தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளாக இருந்து, தவெக சார்பில் போட்டியிட்டு முதன்முறையாக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சில உறுப்பினர்களுக்கு கார் வழங்க வேண்டும் என்றால், முதல்வர் ஜோசப் விஜய் தனது சொந்த செலவிலோ அல்லது கட்சி செலவிலோ வழங்கலாமே என்ற கேள்விதான் தற்போது அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.
தமிழக அரசின் கஜானா காலியாக இருப்பதாகவும், சுமார் ரூ.13 லட்சம் கோடி கடனில் இருப்பதாகவும் வெள்ளை அறிக்கை வெளியிட்டதோடு, நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி, “விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்தல், அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ. 2,500 வழங்குதல், ஆண்டுக்கு ஆறு இலவச சிலிண்டர்கள் வழங்குதல், அனைத்து மகளிருக்கும் இலவசப் பேருந்துப் பயணம் வழங்குதல்” எனத் தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுக்கும் தவெக அரசுக்கு, அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் வாகனங்கள் வாங்குவதற்கு மட்டும் நிதி எங்கிருந்து வந்தது?
“மக்கள் வரிப்பணத்திலிருந்து ஒரு பைசா கூடத் தொட மாட்டேன்; தொட்டவர்களையும் விடமாட்டேன்” என வீரவசனம் பேசிய முதல்வர், தற்போது அதே மக்களின் வரிப்பணத்திலிருந்து பல நூறு கோடி ரூபாய் செலவில் வாகனங்களை வாங்கி வீணடிப்பது எந்த வகையில் நியாயமாகும்?
எனவே, தனது துறையின் உச்சத்தை விட்டுவிட்டு, மக்களுக்குச் சேவை செய்வதற்காக அரசியலுக்கு வந்ததாகக் கூறும் முதல்வர் ஜோசப் விஜய், வாகனம் இல்லாத சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு தனது சொந்த செலவிலோ அல்லது கட்சி செலவிலோ வாங்கித் தர வேண்டுமே தவிர, சட்டப்பேரவை உறுப்பினர்களைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு, “கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது” போல் அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்கப்படும் என்ற தனது அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
TTV Dhinakaran has remarked that the Chief Minister could purchase vehicles for MLAs who do not own one, using his own personal funds.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.