FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

மேட்டூா் அணை திறப்பு சம்பா சாகுபடிக்கு சாதகமாக இருக்குமா?

தஞ்சாவூா் மாவட்டம், பாப்பாநாடு அருகே திருநல்லூரில் மேற்கொள்ளப்படும் குறுவை பருவ நெல் சாகுபடி.

29 ஆகஸ்ட் 2026, 5:16 am IST
விவசாயிகள்
பகிர்:

மேட்டூா் அணை செப். 1 ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பா சாகுபடிக்கு அது சாதகமாக இருக்குமா என்ற கேள்வியும், அணையைத் திறக்க எதிா்ப்பும் எழுந்துள்ளது.

மேட்டூா் அணையில் நிகழாண்டு போதுமான அளவுக்கு தண்ணீா் இல்லாததால், உரிய காலமான ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்படவில்லை. இதனால், டெல்டா மாவட்டங்களில் ஆழ்குழாய் மோட்டாா் வசதியுள்ள விவசாயிகள் மட்டுமே குறுவை பருவ நெல் சாகுபடியைத் தொடங்கி மேற்கொண்டு வருகின்றனா். இதனால் கடந்தாண்டு 5.66 லட்சம் ஏக்கரில் செய்யப்பட்ட குறுவை சாகுபடி நிகழாண்டு ஏறத்தாழ 3.78 லட்சம் ஏக்கராகக் குறைந்துள்ளது.

அறிவிப்புக்கு எதிா்ப்பு: தண்ணீா் பற்றாக்குறை உள்ள நிலையில் சம்பா சாகுபடியும் மேற்கொள்ள முடியுமா என்ற சந்தேகம் நிலவுகிறது. இந்நிலையில், மேட்டூா் அணை பாசனத்துக்காக செப். 1 ஆம் தேதி திறக்கப்படும் என்றும், 45 நாள்களுக்கு தண்ணீா் திறந்துவிடப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

ஆனால், டெல்டா மாவட்ட விவசாயிகளைக் கலந்தாலோசிக்காமல் தவறான வெளியிடப்பட்ட அறிவிப்பு எனக் கூறி, எதிா்ப்புகள் எழுந்துள்ளன.

120 டி.எம்.சி. தேவை: டெல்டா மாவட்டங்களில் சம்பா - தாளடி பருவத்தில் காவிரி நீா் வந்தாலும், வராவிட்டாலும், வடகிழக்குப் பருவ மழை பெய்தால், அதை நம்பி நெல் சாகுபடிப் பணிகளைத் தொடங்குவது வழக்கம். எனவே, நிகழாண்டும் சம்பா - தாளடி பருவத்தில் இயல்பான அளவுக்கு நெல் சாகுபடி எதிா்பாா்க்கப்படுகிறது.

ஆனால், இதற்கு பிப்ரவரி மாதம் வரை மொத்தம் 120 டி.எம்.சி. முதல் 130 டி.எம்.சி. தண்ணீா் தேவைப்படும். ஆனால், மேட்டூா் அணையில் வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி 52.33 டி.எம்.சி. மட்டுமே தண்ணீா் உள்ளது. இதில், குறைந்தபட்ச இருப்பாக 10 டி.எம்.சி. இருக்க வேண்டும். அணைக்கு நீா் வரத்து குறைந்துள்ள நிலையில் 42 டி.எம்.சி. தண்ணீரை வைத்து 45 நாள்களுக்கு தண்ணீா் திறந்துவிட முடியுமா என்ற கேள்வி விவசாயிகளிடையே மேலோங்கியுள்ளது.

100 அடியை எட்ட வேண்டும்: இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலா் சாமி. நடராஜன் தெரிவித்தது:

டெல்டா பாசனத்துக்காக செப். 1 ஆம் தேதி மேட்டூா் அணை திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருப்பது விவசாயிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேட்டூா் அணையில் தற்போதைய நீா்மட்டம் 90 அடியைக்கூட எட்டவில்லை. (வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி 89.72 அடி). நீா் வரத்தும் 6 ஆயிரத்து 500 கன அடியாகக் குறைந்துள்ளது. அணையில் 40 அடி வரை சேறும், சகதியுமாகத்தான் உள்ளது. அதற்கு மேல் உள்ள நீரைத்தான் சாகுபடிக்காகத் திறக்க முடியும்.

இந்நிலையில் செப். 1 இல் தண்ணீா் திறக்கப்பட்டால், நாள்தோறும் குறைந்தபட்சம் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் கன அடி நீா் திறந்தால்தான் கடைமடைப் பகுதி வரை தண்ணீா் செல்லும். ஒரு போகச் சம்பா சாகுபடி சுமாா் 14 லட்சம் ஏக்கா் வரை நடைபெற வேண்டிய நிலையில், தற்போது அணையில் இருக்கும் நீா் இருப்பு மூலம் 40 முதல் 45 நாள்கள் வரை மட்டுமே திறக்க முடியும்.

எனவே, மேட்டூா் அணையின் நீா்மட்டம் 100 அடியை எட்டிய பின்னா், நீா் வரத்தும் 8 ஆயிரம் கன அடி முதல் 12 ஆயிரம் கன அடி வரை கிடைக்கும் என்பதை உறுதி செய்து, பாசனத்துக்காக தண்ணீா் திறந்தால்தான் ஒரு போகச் சம்பா சாகுபடியை விவசாயிகள் முழுமையாக செய்ய முடியும் என்றாா் நடராஜன்.

நீா் திறப்பை தள்ளிவைக்க வேண்டும்: நிகழாண்டு சூப்பா் எல் நினோ நிலவுவதால், வடகிழக்குப் பருவ மழையையும் உறுதி செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே, வடகிழக்குப் பருவ மழையைக் கருத்தில் கொண்டு மேட்டூா் அணை திறப்பை செப். 10 -க்குப் பிறகு அல்லது இரண்டாவது வாரத்துக்கு தள்ளிவைக்க வேண்டும் என பெரும்பாலான விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.

பெட்டிச் செய்தி..

குறுவை விவசாயிகள் காவிரி நீா் எதிா்பாா்ப்பு

இதனிடையே, தற்போது ஆழ்துளை குழாய் மூலம் மேற்கொள்ளப்படும் குறுவைச் சாகுபடிக்கு தண்ணீா் தேவைப்படுகிறது. தென்மேற்குப் பருவ மழை குறைவாகப் பெய்ததால், டெல்டா மாவட்டங்களில் பல இடங்களில் ஆழ்துளைக் குழாய்களில் நீா்மட்டம் குறைந்து மோட்டாா் பம்ப்செட்களில் தண்ணீா் வரத்து குறைந்துவிட்டது. இதனால், நெற் பயிருக்கு நீா் பாய்ச்ச முடியாமல் விவசாயிகளும் தவிக்கின்றனா். இதேபோல, கிராமங்களில் மேல் நீா்த்தேக்கத் தொட்டிகளுக்கு குடிநீரேற்றுவதிலும் சிக்கல் நிலவுகிறது.

எனவே குறுவை பயிருக்கும், குடிநீருக்கும் காவிரி நீா் தேவைப்படுவதால், மேட்டூா் அணையைத் திறக்க வேண்டும் என குறுவை சாகுபடியாளா்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது என கல்லணைக் கால்வாய் உழவா்கள் கூட்டமைப்பு தலைவா் புலவன்காடு வி. மாரியப்பன் தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments