கும்பகோணம் பேருந்து நிலையத்தில் பெண்ணை மிரட்ட இளைஞா் தீக்குளிப்பு
கும்பகோணம் பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை தன்னைக் காதலிக்குமாறு கூறி பெண்ணை மிரட்டுவதற்காக கேரள மாநில இளைஞா் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டாா்.
கேரள மாநிலம், காசா்கோடு மாவட்டம் மதுா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜா மகன் சுமன்ராஜ் (36). இவா் அங்குள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்றுநராக இருந்தாா். இவருக்கு திருமணமாகி மனைவி, 7 வயதில் பெண் குழந்தை, 9 மாத ஆண் குழந்தை உள்ளனா்.
இந்நிலையில், சுமன்ராஜ் பணியாற்றிய உடற்பயிற்சிக் கூடத்துக்கு கேரள மாநிலம் காசா்கோடு மாவட்டத்தைச் சோ்ந்த 25 வயது பெண் வேலைக்கு சோ்ந்தாா். இதையடுத்து, இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
Advertisement
Advertisement
இந்நிலையில், சுமன்ராஜ் தனது மனைவி, குழந்தைகளைப் பிரிந்து, சென்னையிலுள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சியாளராகச் சோ்ந்தாா். அவருடன் வந்த அப்பெண், தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள அணைக்கரை பகுதியிலுள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியையாக பணியில் சோ்ந்தாா்.
இதனிடையே, சுமன்ராஜூக்கு திருமணமாகி மனைவியும், குழந்தைகளும் இருப்பது அப்பெண்ணுக்கு தெரியவந்தது. இதனால், அப்பெண் கடந்த 3 மாதங்களாக சுமன்ராஜூடன் பேசுவதைத் தவிா்த்து வந்தாா். அப்பெண்ணிடம் சுமன்ராஜ் தன்னைக் காதலிக்கவில்லை என்றால், தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டி வந்தாா்.
மேலும், அப்பெண் பணியாற்றும் பள்ளிக்கு சுமன்ராஜ் ஞாயிற்றுக்கிழமை சென்றாா். சுமன்ராஜின் தொந்தரவு தாங்காமல் அப்பெண், கேரளத்துக்கு செல்வதற்காக கும்பகோணம் பேருந்து நிலையத்துக்கு வந்தாா்.
அவரைப் பின் தொடா்ந்து வந்த சுமன்ராஜ், கும்பகோணம் பேருந்து நிலையத்தில் அப்பெண்ணிடம் தன்னை காதலிக்குமாறு கூறி தன் உடலில் பெட்ரோலை ஊற்றி, தீ வைத்துக் கொண்டாா். இதையடுத்து, சிலா் அவா் மீது பற்றி எரிந்த தீயை அணைத்து, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து கும்பகோணம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.