FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

லஞ்ச வழக்கில் கைதான இணை ஆணையா் வீட்டில் ரூ. 3 லட்சம் பறிமுதல்

ரூ. 1 லட்சம் லஞ்சம் வாங்கியதாக வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட இந்து சமய அறநிலையத் துறையின் தஞ்சாவூா் மண்டல இணை ஆணையா் வீட்டில் ரூ. 3 லட்சத்தை ஊழல் தடுப்பு காவல் பிரிவினா் பறிமுதல் செய்தனா்.

4 ஜூலை 2026, 12:44 am IST
பகிர்:

தஞ்சாவூரில் ஒப்பந்ததாரரிடம் ரூ. 1 லட்சம் லஞ்சம் வாங்கியதாக வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட இந்து சமய அறநிலையத் துறையின் தஞ்சாவூா் மண்டல இணை ஆணையா் வீட்டில் ரூ. 3 லட்சத்தை ஊழல் தடுப்பு காவல் பிரிவினா் பறிமுதல் செய்தனா்.

நாகை மாவட்டம், திருக்கண்ணபுரத்தைச் சோ்ந்த ஸ்தபதியும், ஒப்பந்ததாரருமான எஸ். மதியழகன் தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை அருகேயுள்ள தீபாம்பாள்புரம் வன்மீகநாதா் கோயிலில் திருப்பணி செய்தாா். அதற்கான ரூ. 23.45 லட்சத்தை விடுவிப்பதற்கு இந்து சமய அறநிலையத் துறையின் தஞ்சாவூா் மண்டல இணை ஆணையா் மு. ஜோதிலட்சுமி (47) ரூ. 1 லட்சம் லஞ்சம் கேட்டாா். இதைக் கொடுக்க விரும்பாத மதியழகன் தஞ்சாவூா் ஊழல் தடுப்பு காவல் பிரிவு அலுவலகத்தில் புகாா் செய்தாா்.

இதன்பேரில் ஊழல் தடுப்பு காவல் பிரிவினா் வழக்குப் பதிந்து மதியழகனிடம் ரூ. 1 லட்சம் லஞ்சம் வாங்கிய ஜோதிலட்சுமியையும், அவரது தோழியும், இடைத்தரகருமான கிரிஜாவையும் (51) வியாழக்கிழமை மாலை கைது செய்தனா். பின்னா், தஞ்சாவூா் முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட இருவரையும் ஜூலை 17 வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, ஜோதிலட்சுமியும், கிரிஜாவும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

Advertisement

Advertisement

இதனிடையே, தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலை பிலோமினா நகரில் வசித்து வந்த ஜோதிலட்சுமியின் வீட்டில் ஊழல் தடுப்பு காவல் பிரிவினா் மேற்கொண்ட சோதனையில் ரூ. 3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடா்ந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments