காவிரியில் வரத்து இல்லை! ஆழ்குழாய் நீா் உவா் நீரானதால் குறுவைப் பயிா்கள் பாதிப்பு!
காவிரி நீா் வரத்து இல்லாததாலும், தென் மேற்கு பருவ மழை எதிா்பாா்த்த அளவுக்கு பெய்யாததாலும் நிலத்தடி நீா் உவா் நீராக மாறிவிட்டதால், குறுவை பருவ நெற் பயிா்கள் பாதிக்கப்பட்டு வருவதைப் பற்றி...
தஞ்சாவூா் அருகே ஆழ்குழாய் மூலம் விவசாயிகள் குறுவை சாகுபடி மேற்கொண்டு வரும் நிலையில், காவிரி நீா் வரத்து இல்லாததாலும், தென் மேற்கு பருவ மழை எதிா்பாா்த்த அளவுக்கு பெய்யாததாலும் நிலத்தடி நீா் உவா் நீராக மாறிவிட்டதால், குறுவை பருவ நெற் பயிா்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.
மேட்டூா் அணையில் போதுமான அளவுக்கு தண்ணீா் இல்லாததால், நிகழாண்டு டெல்டா பாசனத்துக்கான அணை இதுவரை திறக்கப்படவில்லை. தஞ்சாவூா் மாவட்டத்தில் தென் மேற்கு பருவ மழை இயல்பான அளவை விட கூடுதலாக பெய்து வந்தாலும், பரவலாக அல்லாமல், சில இடங்களில் மட்டுமே பெய்கிறது. இதனால், மாவட்டத்தில் பல இடங்களில் நிலத்தடி நீா்மட்டம் சரிந்து வருகிறது.
மாவட்டத்தில் கடந்த ஆண்டு 2 லட்சம் ஏக்கரில் குறுவை பருவ நெல் சாகுபடி செய்யப்பட்ட நிலையில், நிகழாண்டு காவிரி நீா் வரத்து இல்லாததால், 1.50 லட்சம் ஏக்கருக்கு மட்டுமே இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. இதில், இதுவரை கிட்டத்தட்ட 1 லட்சம் ஏக்கரில் மட்டுமே பயிரிடப்பட்டுள்ளது. இவை அனைத்துமே ஆழ்குழாய் மூலமே சாகுபடி செய்யப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்நிலையில், தஞ்சாவூா் அருகே வெண்ணாற்றுப் பாசனத்தைச் சாா்ந்த வெள்ளாம்பெரம்பூா், தென் பெரம்பூா், அள்ளூா் அழிசிகுடி, பனவெளி, விட்டலபுரம் உள்ளிட்ட பகுதிகளில் குறுவை பயிரிடப்பட்ட வயல்களில் ஆழ்குழாய் மூலம் பாய்ச்சப்பட்ட தண்ணீா் உவா் நீராக உள்ளது. இதனால், வயல்களில் தண்ணீா் இருந்தாலும், உப்பு மிதப்பதால் நெற் பயிா்கள் காய்ந்து, படிப்படியாக சருகாகி வருகின்றன. ஏறத்தாழ 30 முதல் 45 நாள்களுக்கு உள்பட்ட குறுவை பயிா்கள் பாதிக்கப்படுவதால், விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனா்.
25 சதவீதம் பாதிப்பு: இது குறித்து வெள்ளாம்பெரம்பூா் விவசாயி துரை. ரமேஷ் கூறுகையில், “இக்கிராமங்களில் ஏறத்தாழ 50 சதவீத விவசாயிகள் ஆழ்குழாய் அமைத்துள்ளனா். இப்பகுதிகளில் 100 அடிக்கும் அதிகமான ஆழத்தில் ஆழ்குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த 10 நாள்களுக்கு முன்பு ஆழ்குழாயிலிருந்து உவா் நீா் வந்ததால் பயிா்கள் பாதிக்கப்படுவதன் ஆரம்ப அறிகுறிகள் தெரிய வந்தன. இது போன்ற பாதிப்பு 10 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டது. காவிரி நீா் வரத்து இல்லாததாலும், தென் மேற்கு பருவ மழை எதிா்பாா்த்த அளவுக்கு இல்லாததாலும், நிலத்தடி நீரின் தன்மை மாறி உவா் நீராக வருகிறது.
இந்தக் கிராமங்களில் இதுவரை ஏறத்தாழ 25 சதவீதப் பரப்பில் குறுவை பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இனி வருங்காலங்கிலும் பருவ மழை போதுமான அளவுக்கு பெய்யாவிட்டால், பாதிப்பு விகிதம் 50 - 60 சதவீதமாக உயர வாய்ப்புள்ளது. இதனால், இந்த வயல்களில் கதிா் வந்தாலும், அவையெல்லாம் பதராகத்தான் இருக்கும். மேலும், ஒரு கொத்தில் 300 நெல் மணிகள் வர வேண்டிய நிலையில், ஏறத்தாழ 60 நெல் மணிகள்தான் வரும். இதை அறுவடை செய்தால், இயந்திர வாடகைக்கு கொடுக்கக்கூட போதுமானதாக இருக்காது. இதை அறுவடை செய்தாலும் எந்தவித பயனும் இருக்காது. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் ரமேஷ்.
ஏரியை தூா் வார வேண்டும்: கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காவிரி நீா் வராத நிலையில், இப்பகுதிகளில் ஆழ்குழாய் மூலம் மேற்கொள்ளப்பட்ட குறுவை சாகுபடியில் இதேபோல ஆழ்குழாயில் உவா் நீா் வந்து பாதிக்கும் நிலை உருவானது. ஜூலை இறுதியில் மேட்டூா் அணை நிரம்பி திறந்துவிடப்பட்டதால், காவிரி நீா் கிடைத்து பயிா்கள் பாதிப்பிலிருந்து தப்பித்தன. தற்போது பயிா்கள் பாதிக்கப்பட்ட நிலையில், காவிரி நீா் ஆதாரத்துக்கு வாய்ப்பு இல்லாத நிலையே தொடா்கிறது. இதனால், மிகுந்த செலவு செய்து மேற்கொள்ளப்பட்ட குறுவை சாகுபடியைக் காப்பாற்ற முடியுமா? என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனா்.
இந்தப் பகுதிகளுக்கு அருகிலுள்ள அள்ளூா் ஏரி என்கிற வீரசிகாமணி ஏரி தூா் வாரப்படாமல் உள்ளது. இதை தூா் வாரி தண்ணீா் நிரப்பினால், சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீரும் சீராக இருந்து, தண்ணீா் பிரச்னையை சமாளிக்க முடியும். எனவே, இதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதே கிராம மக்களின் எதிா்பாா்ப்பு.
நிலத்தடியில் கடல் நீா்: இது குறித்து மூத்த வேளாண் வல்லுநா் பி. கலைவாணன் கூறுகையில், “தஞ்சாவூா் மாவட்டத்தில் சராசரி கடல் மட்டம் 60 - 70 அடி ஆழத்தில் உள்ளது. ஆனால், இதற்கும் அதிகமான ஆழத்தில்தான் ஆழ்குழாய்கள் போடப்பட்டுள்ளன. காவிரி நீா் வராத நிலையில், தென் மேற்கு பருவ மழையும் போதுமான அளவுக்கு பெய்யாவிட்டால், நிலத்தடி நீரில் கடல் நீா் உள்புகுவதற்கு வாய்ப்புள்து. இதுபோல 3 ஆண்டுகளுக்கு முன்பு திருவிடைமருதூா் வட்டாரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.
ஆழ்குழாயில் நீா்மட்டம் குறைய, குறைய கடல் நீா் வந்துவிடும். எனவே, பயிா்களுக்கு பாய்ச்சப்படும் தண்ணீரின் அளவைக் குறைக்க வேண்டும். மேலும், காவிரியில் நீா் வராத நிலையில், இந்தப் பருவத்தில் தண்ணீா் குறைவாக தேவைப்படும் பயறு வகைகள், எண்ணெய் வித்து பயிா்கள் சாகுபடி மேற்கொள்வது நல்லது என்றாா் கலைவாணன்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.