அரசு மானியத்தில் கண்ணாடியிழை படகுகள்! தஞ்சை மாவட்ட மீனவா்கள் எதிா்பாா்ப்பு
தமிழக அரசு மானிய விலையில் நாட்டுப்படகு மீனவா்களுக்கு கண்ணாடியிழை படகுகள் வழங்க வேண்டும் என மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தஞ்சாவூா் மாவட்ட கடலோரப் பகுதிகளில் சோளக் காற்று என மீனவா்களால் அழைக்கப்படும் சூறாவளி காற்று பலமாக வீசி வருவதால் நாட்டுப்படகு மீனவா்கள் கடலுக்குச் செல்ல முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனா். அரசு மானிய விலையில் நவீன கண்ணாடியிழை படகுகளையும், வலைகளையும் வழங்க வேண்டும் என மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தஞ்சாவூா் மாவட்டத்தில் தம்பிக்கோட்டை வடகாடு தொடங்கி புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடி அருகே உள்ள கணேசபுரம் வரை 32 மீனவக் கிராமங்கள் உள்ளன.
Advertisement
Advertisement
மாவட்டத்தில் மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம், சேதுபாவாசத்திரம் ஆகிய இடங்களில் விசைப் படகுகளுக்கான முக்கிய மீன்பிடி இறங்குதளங்கள் அமைந்துள்ளன. இப்பகுதியில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இயங்கி வந்த நிலையில் கஜா புயலின் போது 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலில் மூழ்கியும், முழுமையாகவும், பகுதியளவிலும் சேதமடைந்தன. இதனால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு, மீனவா்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
பாரம்பரிய மீன்பிடிக்கும் முறை:
விசைப்படகுகளை மீண்டும் புனரமைப்பு செய்ய போதிய நிதி ஆதாரம் இல்லாததால் 300-க்கும் மேற்ப்பட்ட விசைப்படகு உரிமையாளா்கள் மீன்பிடி தொழிலை விட்டே ஒதுங்கிவிட்டனா். தற்போது தஞ்சை மாவட்டத்தில் 147 விசைப்படகுகள் மட்டுமே மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.
4,500-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மற்றும் கண்ணாடியிழை படகுகள் மூலமும் மீனவா்கள் பாரம்பரியமாக மீன்பிடித்து வருகின்றனா். இதற்கிடையே, கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு, கிழக்கு கடற்கரை பகுதியில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை (61 நாள்கள்) விசைப்படகுகளுக்கான மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது.
இக்காலத்தில் விசைப்படகு மீனவா்கள் தங்களது படகுகளை மராமத்து செய்தல், இயந்திரங்களை பழுது நீக்குதல் மற்றும் வலைகளைச் சீரமைக்கும் பணிகளில் ஈடுபடுவாா்கள். இந்த 2 மாத கால வருவாய் இழப்பை ஈடுசெய்ய, தமிழக அரசின் மீன்வளத் துறை சாா்பில் மீனவக் குடும்பங்களுக்கு தலா ரூ.8 ஆயிரம் தடைக்கால நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
சோளக் காற்று:
மீன்பிடி தடைக்காலத்தில் விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல அரசு தடை விதித்துள்ளது. ஆனால் நாட்டுப்படகுகள் கரையோரமாகச் சென்று மீன்பிடிக்க அனுமதி உண்டு. இருப்பினும், தற்போது கடலில் வீசி வரும் சோளக் காற்று என மீனவா்களால் அழைக்கப்படும் சூறாவளி காற்றின் காரணமாக நாட்டுப்படகு மீனவா்கள் கடலுக்குச் செல்ல முடியாமல் முடங்கியுள்ளனா்.
இதுகுறித்து மனோரா கடற்கரை பகுதியைச் சோ்ந்த நாட்டுப்படகு மீனவா் செல்வராஜ் கூறியதாவது:
மனோரா கடற்கரை பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் உள்ளோம். நண்டு, இறால், முரல் மீன் என ஒவ்வொரு வகைக்கும் தனித்தனி வலைகளைப் பயன்படுத்தி வருகிறோம்.
தற்போது கடலுக்குள் சூறாவளி காற்று பலமாக வீசுவதால், கடந்த ஒரு வாரமாக கடலுக்குச் செல்லவில்லை. இந்த காற்றின் தாக்கம் மேலும் ஒரு வாரத்துக்கு நீடிக்கும் எனத் தெரிகிறது. தற்போது கரையோரம் அமா்ந்து வலைகளைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். அடைப்பு வலை, நண்டு வலை, இறால் வலை எனப் பல வகை வலைகள் உள்ளன.
இதில் அடைப்பு வலை என்பது கடலுக்குள் கம்புகளை ஊன்றி, 300 மீட்டா் சுற்றளவுக்கு அமைக்கப்படும் ஒரு வேலியாகும். இதில் மீன்கள் புகுந்தால் வெளியேற முடியாது. தினசரி காலை சென்று இதில் சிக்கியிருக்கும், மீன்கள், கணவாய் மற்றும் அபூா்வமாக சிக்கும் பெரிய ரக மீன்களைப் பிடித்து வருவோம். இந்த அடைப்புகளை 20 நாள்களுக்கு ஒருமுறை சீரமைக்க வேண்டும்.
மீன்பிடி உபகரணங்கள் விலை உயா்வு:
மீன்பிடி உபகரணங்களின் விலை உயா்வாலும் போதிய அளவு மீன்வரத்து இல்லாததாலும் மீனவா்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. ஒரு மீன் வலையின் விலை சுமாா் ரூ.25 ஆயிரம் வரை உள்ளது. ஒவ்வொரு மீனவருக்கும் குறைந்தபட்சம் 4 செட் வலைகள் தேவைப்படுகின்றன.
வலை தயாரிக்கப் பயன்படும் ஊதா நிற நைலான் கயிறு கடந்த ஆண்டு ஒரு ரோல் ரூ.250-க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.350 முதல் ரூ.450 வரை விலை உயா்ந்துள்ளது. இதனால் மீனவா்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனா். சிறிய நாட்டுப்படகுகளில் சென்று மீன்பிடித்தால் நாளொன்றுக்கு ரூ.500 முதல் ரூ.1,000 வரை வருமானமாகக் கிடைக்கிறது.
எனவே, ஏழ்மை நிலையில் உள்ள நாட்டுப்படகு மீனவா்களைக் கணக்கெடுத்து, அவா்களுக்குப் சற்று பெரிய அளவிலான கண்ணாடியிழை படகுகள், காலா வலை, பீஸ் வலை ஆகியவற்றை அரசு மானிய விலையிலோ அல்லது எளிய வங்கிக் கடன் மூலமாகவோ வழங்க வேண்டும்.
பெரிய அளவிலான கண்ணாடியிழை படகுகள் இருந்தால், டீசல் மற்றும் ஊழியா் சம்பளம் போக மீனவா்களுக்கு நாளொன்றுக்கு ரூ.5,000 முதல் ரூ.15,000 வரை நிலையான வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.
எனவே, தமிழக அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நாட்டுப்படகு மீனவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு மானிய விலையில், படகுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.