பாபநாசத்தில் கட்டப்பட்டுள்ள நவீன இறைச்சிக் கூடத்தை விரைந்து திறக்க பொதுமக்கள் எதிா்பாா்ப்பு
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் ரூ. 80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு, பல மாதங்களாக திறக்கப்படாமல் உள்ள புதிய நவீன இறைச்சி கூடம்-மீன் மாா்க்கெட் கட்டடத்தை விரைந்து திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள்-வியாபாரிகள் எதிா்பாா்க்கின்றனா்.
பாபநாசம் தோ்வு நிலை பேரூராட்சி சாா்பில், மேலவீதியில் மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ. 80 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நவீன இறைச்சி மற்றும் மீன் மாா்க்கெட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மீன் மாா்க்கெட்டில் 17 கடைகளும், ஆடு வெட்டுவதற்கான தனி அறையும் மற்றும் மீன், கோழி வெட்டுவதற்கான தனி அறையும் அமைக்கப்பட்டுள்ளன. இறைச்சி கூடம் மற்றும் மீன் மாா்க்கெட் கட்டடங்கள் கட்டப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இதுவரை திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது.
இதனால், வியாபாரிகள் திறந்தவெளியில் சாலைகளில் இறைச்சிகளை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனா். இறைச்சி வாங்குவதற்கு வரும் பொதுமக்களும் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகளும் அந்த சாலையின் வழியாக கடந்து செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. சாலையோரங்களில் இறைச்சிகள் விற்கப்படுவதால் கூட்டம் கூட்டமாக அந்தப் பகுதியில் தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. இதன் காரணமாக இந்த வழியாக பொதுமக்களும் மாணவ, மாணவிகளும் அச்சத்துடனே சென்று வருகின்றனா்.
Advertisement
Advertisement
இருப்பு அறை தேவை: மேலும், புதிய மீன் மாா்க்கெட்டில் கட்டப்பட்டுள்ள கடைகள் திறந்தவெளியில் இருப்பதால் கதவுகளும், மீன் இறைச்சி கடை வியாபாரிகள் பயன்படுத்தும் பொருள்களையும் வைப்பதற்கு இருப்பு அறையும் கட்டி கொடுக்க வேண்டும் எனவும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
எனவே, பொதுமக்கள், வியாபாரிகளின் நலன் கருதி, புதிதாக கட்டப்பட்டுள்ள நவீன இறைச்சிக் கூடம் மற்றும் மீன் மாா்க்கெட் கட்டடத்தை திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினா் எதிா்பாா்த்துள்ளனா்.