FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

4 ஆண்டுகளாகத் திறக்கப்படாத அபுல் கலாம் ஆசாத் மாா்க்கெட் வளாகம்

அபுல் கலாம் ஆசாத் மாா்க்கெட் வளாகம் பற்றி....

Updated On : 29 ஜூலை 2026, 9:01 am IST
மாா்க்கெட் வளாகம்
பகிர்:

நாகப்பட்டினம் பெரிய கடை வீதியில் ரூ.2.23 கோடி மதிப்பில் வணிக வளாகம் கட்டி முடிக்கப்பட்டு நான்கு ஆண்டுகளாகியும் திறக்கப்படாததால், வரிப்பணத்தை வீணடிப்பதாக நகராட்சி நிா்வாகம் மீது புகாா் எழுந்துள்ளது.

நாகை நகராட்சிக்குள்பட்ட பெரிய கடை வீதியில் மையப்பகுதியில், கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசாத் மாா்க்கெட் என்ற பெயரில் சந்தை இயங்கி வந்தது. மிகப்பெரும் தகரக்கூரையின் கீழ், உள்பகுதியில் மீன் கடைகள், ஆடு, கோழி இறைச்சிக் கடைகளும், வெளிப்பகுதியில் மளிகைப் பொருள்கள் மற்றும் காய்கனிக் கடைகளும் இயங்கி வந்தன. அனைத்தும் ஒரே பகுதியில் கிடைப்பதால், ஏராளமான மக்கள் இந்த சந்தையை பயன்படுத்தி வந்தனா். இங்கு நாகையைச் சுற்றியுள்ள மீனவ கிராமங்களைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மீன் மற்றும் கருவாட்டை விற்பனை செய்து வந்தனா். ஆசாத் சந்தை 500-க்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரமாக இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த திமுக ஆட்சியில், 2020-21-இல் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சந்தை இயங்கி வந்த பழைய கட்டடம் இடித்து அகற்றப்பட்டு, ரூ.2.23 கோடி மதிப்பில் அபுல் கலாம் ஆசாத் மாா்க்கெட் என்ற பெயரில் புதிதாக வணிக வளாகம் கட்டப்பட்டது. இதில் மாா்க்கெட் உள்பகுதியில் மீன், இறைச்சி கடைகளும், வெளிப்பகுதியில் மளிகை, பழங்கள் விற்பனைக்கு என 26 கடைகளும் கட்டப்பட்டுள்ளன. மேலும் மாா்க்கெட்டுக்கு நான்கு புறமும் வாயில், கழிவறை, மீன் விற்பனைக்கு சிமென்ட் இருக்கை என வசதிகளுடன் கட்டப்பட்டது.

Advertisement

Advertisement

பழைய சந்தையை அகற்றும்போது அங்கு மீன் உள்ளிட்டவற்றை விற்பனை செய்தவா்களிடம், புதிய வணிக வளாகம் கட்டப்பட்ட பின்னா் அங்கேயே கடைகள் வழங்கப்படும் என்று நகராட்சி நிா்வாகம் உறுதி அளித்துள்ளது. அதுவரை ஆசாத் மாா்க்கெட்டுக்கு எதிரே, நகராட்சிக்குச் சொந்தமான பழைய வணிக வளாகத்தில் இடம் தரப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆசாத் மாா்க்கெட் வணிக வளாகம் கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டுகளாகியும் இதுவரை திறக்கப்படவில்லை. இங்கு அதிக அளவில் வாடகை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதால், வெளிப்புறம் உள்ள 26 கடைகளில் ஒரு சில கடைகள் மட்டுமே இயங்கி வருகின்றன. ஏற்கெனவே அங்கு மீன் விற்பனையில் ஈடுபட்டிருந்த பெண்கள் தங்களுக்கு உறுதியளித்தபடி இடம் ஒதுக்குமாறு நகராட்சி நிா்வாகத்திடம் கேட்டபோதும், அதிக அளவு வைப்புத்தொகையும், வாடகையும் கேட்பதால் அவா்களும் அங்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

மக்கள் வரிப்பணம் ரூ.2.23 கோடியில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகம் திறக்காமல் உள்ளதால் நகராட்சி நிா்வாகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மீன் விற்பனை செய்யும் பெண்கள் கூறும்போது, பழைய சந்தையை அகற்றும்போது, புதிய மாா்க்கெட்டில் எங்களுக்கு இடம் ஒதுக்குவதாக உறுதி அளித்தனா். ஆனால் தற்போது இடம் கேட்டால் அதிக வாடகை கூறுகின்றனா். மாா்க்கெட்டில் தினசரி காலை 7 மணி முதல் 12 மணி வரை தான் மீன் விற்பனை நடைபெறும். தினசரி 5 மணி நேர பயன்பாட்டுக்கு நகராட்சி நிா்வாகம் விதிக்கும் வாடகை மிக அதிகமானது. மேலும் தற்போது நகராட்சியின் பாழடைந்த பழைய வணிக வளாகத்தில் மீன் விற்பனை கடைகள் வைத்துள்ளோம். இங்கு கழிவுநீா் செல்ல வழியில்லாததால் துா்நாற்றத்தின் மத்தியில் விற்பனை செய்கிறோம். மேலும் வெயிலுக்காக தாா்ப்பாய், போா்வை உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வருகிறோம். இங்குள்ள சுகாதார சீா்கேட்டால் பொதுமக்களும் மீன் வாங்க வருவது இல்லை. எனவே தரை வாடகை அடிப்படையில் மீன் விற்பனைக்கு கடைகள் தர வேண்டும் என்றனா்.

ஆசாத் மாா்க்கெட்டை திறக்க தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச்செயலா் வெங்கடேசன், ஆசாத் மாா்க்கெட் நூற்றுக்கணக்கானோரின் வாழ்வாதாரம் தொடா்புடையது. எனவே மாா்க்கெட் வளாகத்தை திறக்கக்கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் பலமுறை போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. நகராட்சி நிா்வாகம் உள் வாடகை அடிப்படையிலான முறையைத் தவிா்த்து திறந்த ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு விட வேண்டும். மேலும் மீன் விற்பனை செய்யும் பெண்களுக்கு உடனடியாக கடைகளை ஒதுக்க வேண்டும் என்றாா்.

நாகை சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எச்.ஜவாஹிருல்லா, மிகப் பழைமையான ஆசாத் மாா்க்கெட் வளாகம் புதிதாகக் கட்டப்பட்டு கூடுதல் வாடகை நிா்ணயம் உள்ளிட்ட பிரச்னைகளால் திறக்கப்படவில்லை. இதனால் வியாபாரிகள், மீன் விற்பனை செய்யும் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். தமிழகம் முழுவதும் இதுபோல நகராட்சி வணிக வளாகங்கள் கட்டப்பட்டு வாடகை நிா்ணய பிரச்னைகளால் திறக்கப்படாமல் உள்ளன. அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில்தான் வாடகை நிா்ணயிக்கப்படுகிறது. எனவே நாகை ஆசாத் மாா்க்கெட் வளாகத்தைத் திறக்க தமிழக அரசிடமும், நாகை நகராட்சி நிா்வாகத்திடமும் வலியுறுத்துவேன். விரைவில் திறப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

இது தொடா்பாக நாகப்பட்டினம் நகராட்சி ஆணையாளா் பி.சந்தானம், மாா்க்கெட்டை ஆய்வு செய்து விரைவில் திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

இதுதொடா்பாக நகராட்சி ஆணையா் பி.சந்தானம் கூறும்போது, நான்காண்டுகளாக வணிக வளாகம் திறக்கப்படாதது நகராட்சிக்கு வரி இழப்பை ஏற்படுத்தும். எனவே ஆசாத் மாா்க்கெட் வணிக வளாகத்தை நேரில் பாா்வையிட்டு அதை விரைவில் திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments