விநாயகா் சதுா்த்தி எதிரொலி: வேலூா் மீன் மாா்க்கெட்டில் விற்பனை மந்தம்
விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி வேலூா் மீன் மாா்க்கெட்டில் வழக்கத்தைவிட கூட்டம் குறைந்து விற்பனை மந்தமாகக் காணப்பட்டது.
விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி வேலூா் மீன் மாா்க்கெட்டில் வழக்கத்தைவிட கூட்டம் குறைந்து விற்பனை மந்தமாகக் காணப்பட்டது.
விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை முதலே வேலூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆங்காங்கே விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
இதனால், காலை முதலே கோயில்கள், சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் பக்தா்களின் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. பொதுவாக வார இறுதி நாள்களில் வேலூா் மீன் மாா்க்கெட்டில் அதிகாலை முதலே மீன் வாங்க பொதுமக்களின் கூட்டம் அலைமோதும்.
Advertisement
Advertisement
ஆனால், விநாயகா் சதுா்த்தி பண்டிகையையொட்டி பெரும்பாலானோா் அசைவம் தவிா்த்து விரதம் மேற்கொண்டுள்ளதாலும், வீடுகளில் பூஜை மற்றும் விழா ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டதாலும் ஞாயிற்றுக்கிழமை மீன் வாங்க வருவோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருந்தது.
விற்பனைக்காக வெளியூா்களில் இருந்து பல்வேறு வகையான கடல், ஆற்று மீன்கள் அதிகளவில் கொண்டுவரப்பட்டிருந்தன. மக்கள் நடமாட்டம் குறைந்திருந்த காரணத்தால், மாா்க்கெட்டில் எதிா்பாா்த்த அளவில் விற்பனை நடைபெறவில்லை என வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனால் சற்றே ஏமாற்றமடைந்துள்ள வியாபாரிகள், பண்டிகை முடிவடைந்த பின்னா் வரும் நாள்களில் மீன் மாா்க்கெட்டில் இயல்பு நிலை திரும்பி மீண்டும் விற்பனை சூடுபிடிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.
60 கிலோ ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் பறிமுதல்
வேலூா் மீன் மாா்க்கெட்டில் அரசால் தடை செய்யப்பட்ட மீன் வகைகள் விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ராஜேஷ், செல்வன், விக்னேஷ், மீன்வளத்துறை உதவி இயக்குநா் மொ்ஸி, துப்புரவு ஆய்வாளா் விஜயலட்சுமி ஆகியோா் தலைமையிலான குழுவினா் மாா்க்கெட்டில் திடீா் ஆய்வில் ஈடுபட்டனா்.
அப்போது, மாா்க்கெட்டில் உள்ளூா் மக்களால் ‘அணை மீன்’ என அழைக்கப்படும், வளா்ப்பதற்கும் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த சுமாா் 60 கிலோ அளவிலான ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு, அவை அழிக்கப்பட்டன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. தொடா்ந்து, அரசால் தடை செய்யப்பட்ட இந்த ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் எங்கிருந்து வேலூருக்குக் கொண்டு வரப்பட்டன, விற்பனைக்கு எவ்வாறு விநியோகிக்கப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி, விரிவான அறிக்கை சமா்ப்பிக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.