நோயில்லாத நாடுதான் வளர்ச்சியடைந்த நாடாகமுடியும்
நோயில்லாதநாடுதான் வளர்ச்சியடைந்த நாடாக முடியும் என்றார் திருச்சி கள விளம்பர அலுவலர் தேவி பத்மநாபன்.
நோயில்லாதநாடுதான் வளர்ச்சியடைந்த நாடாக முடியும் என்றார் திருச்சி கள விளம்பர அலுவலர் தேவி பத்மநாபன்.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், கள விளம்பரத்துறை அலுவலகம் சார்பில் உலகத்தாய்பால் வாரம், பிரதமரின் பேறுகால பாதுகாப்புத் திட்டம், பேறுகால நிதியுதவித் திட்டம், இந்திர தனுஷ் இயக்கம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி மாவட்டம், முத்தரசநல்லூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று, மேலும் அவர் பேசியது:
உலகளவில் ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில், கடந்த 1992 முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 1 முதல் 7 ஆம் தேதி வரை தாய்ப்பால் வார விழா நடத்தப்படுகிறது. தாய்ப்பால் உயிரின் அடிப்படை என்பதே கருப்பொருளாகக் கொண்டு நிகழாண்டில் தாய்பால் வார விழா நடத்தப்படுகிறது. ஒரு நாடு வல்லரசாகுவதற்கு பொருளாதாரம், ராணுவ வளர்ச்சி மட்டும் போதாது. வருமுன் காப்போம் என்ற அடிப்படையில், நோயைத் தடுப்பதற்கு தாய்ப்பால் அவசியமானது. பிறந்த குழந்தைக்கு தொடர்ந்து 2 ஆண்டுகள் வரை தாய்ப்பாலை தாய் புகட்டுவது அவசியமானதாகும். நோயில்லாதநாடுதான் வளர்ச்சியடைந்த நாடாக முடியும் என்றார் அவர்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் கீதா பேசியது: தாய்- சேய் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. கர்ப்பிணிப் பெண்களுக்கு பேறுகால உதவித்தொகையை மாநில அரசு வழங்கி வருகிறது. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு அம்மா பேறுகாலப் பரிசுப் பெட்டகத்தை அரசு வழங்கி வருகிறது என்றார்.
கள விளம்பர உதவியாளர் ரவீந்திரன் பேசியது: பெண் குழந்தையின் நலனுக்காக மத்திய அரசு பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைக்கு கல்வி கற்பிப்போம் என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது. ஆண்- பெண் விகிதம் இடைவெளியை நீக்குவதற்காக செல்வமகள் சேமிப்புத் திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தி வருகின்றன என்றார். கிராம செவிலியர் சூசைமேரி, மேற்பார்வையாளர் தேவமணி உள்ளிட்டோர் தாய்ப்பால் கொடுப்பதன் அவசியத்தை எடுத்துரைத்தனர். ஆரோக்கிய குழந்தைகளுக்கும், வினாடி வினாவில் வெற்றி பெற்ற தாய்மார்களுக்கும் விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.