FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தலைக்கவசம் அணிவது கட்டாயமெனில் சாலை விதிகளையும் தீவிரப்படுத்த வேண்டும்

தமிழகத்தில் இருசக்கர வாகனங்களில் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என தீவிரம் காட்டும் காவல்துறையினர் சாலை 

30 ஜனவரி 2024, 10:08 pm IST
பகிர்:

தமிழகத்தில் இருசக்கர வாகனங்களில் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என தீவிரம் காட்டும் காவல்துறையினர் சாலை விதிகளை முறைப்படுத்தும் நடவடிக்கையை உறுதி செய்ய வேண்டும் என வாகனஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.
இரு சக்கர வாகனத்தில் செல்வோர் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற உத்தரவையடுத்து காவல்துறையினரின் சோதனையின்போது சில அசம்பாவித சம்பங்களால் உயிரிழப்பு ஏற்பட்டது.  இது பொதுமக்கள் மட்டுமின்றி வாகன ஓட்டிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. 
இதனால் கெடுபிடி ஓய்ந்திருந்தநிலையில் தற்போது இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்வோரும்  கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின்உத்தரவால் இப்பிரச்னை மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.இதையடுத்து
 கடந்த சில நாள்களாக திருச்சி உள்ளிட்ட பெருநகரங்களில் போலீஸாரின் கெடுபிடி அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
வெளிநாடுகளில் உள்ள சில சட்ட திட்டங்களை இங்கு நடைமுறைப்படுத்த நினைப்பது அர்த்தமற்றது. சாலைப் போக்குவரத்து விதிகளை மிகவும் கடுமையாக பின்பற்றும் நாடுகளில் தலைக்கவசம் குறித்து கட்டுப்பாட்டை நடைமுறைப் படுத்துவது ஏற்கக் கூடியது. ஆனால் சாலைகளே சரியாக இல்லை,  சாலை விதிகள் காற்றில் பறக்கின்றன. இந்நிலையில் தலைக்கவசத்துக்கு மட்டும் ஏன் இந்த கெடுபிடி ? என்ற கேள்வி அனைவரிடமும் எழுகின்றது. 
தரமான சாலைகளை முதலில் அமைக்க வேண்டும். ஒரு வழி இரு வழிப்பாதைகளை முறைப்படுத்த வேண்டும்.  அதிவேகம்,  அதிகச்சுமை, தரமற்ற வாகனங்கள்,  ஒரு வழிப்பாதையில் எதிராக செல்லுதல்,  தடைசெய்யப்பட்ட இடங்களில் வாகனம் நிறுத்துதல், அதிக மது போதையில் வாகனம் ஓட்டுதல்  உள்ளிட்ட குறிப்பிட்ட சில காரணங்களால்தான் சாலை விபத்துக்கள் அதிகளவில் ஏற்படுகின்றன. குறிப்பிட்ட இந்த விதிமீறல்களால் அவர்களைவிட மற்றவர்கள்தான் அதிகம் பாதிக்கின்றனர். ஆனால் தலைக்கவசம் அணியாததால் விதிமீறுவோர் (அதாவது தலைக்கவசம் அணியாதவர்) மட்டுமே உயிரிழக்கிறார்.
 இந்நிலையில், அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தும் விதிமீறல்களை கண்டுகொள்ளாமல், தலைக்கவசம் அணிவதில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்து சாமானியர்களை மிகவும் பாதிக்கின்றது.
இது குறித்து நுகர்வோர் மற்றும் சேவை சங்கங்களின் தலைவர் எம். சேகரன் கூறுகையில், 
தலைக்கவசம் என்பது பாதுகாப்பானதுதான். அதை அணிந்து செல்வதில் தவறில்லை. அதே நேரம் அதைவிட  முக்கியமான பல்வேறு பிரச்னைகள் உள்ளன. குறிப்பாக நீதித்துறையின் அனைத்து உத்தரவுகளும் பின்பற்றப்பட வேண்டும். 

வாகனஓட்டிகள் வலியுறுத்தல்
சமூக ஆர்வலர் ஏ. வீரையா :  தலைக்கவசம் அணியாவிட்டால் பாதிப்பு எனக்குத்தான். என் உயிர் மீது எனக்கு அக்கறையுள்ளது. எனவே எனது உயிரை என்னால் பாதுக்காக முடியும். நான் இறந்துபோனால் அரசு ஏதாவது எனக்கு இழப்பீடு தருவதானால் அதில் அர்த்தமுள்ளது. 
தலையில் அறுவைச் சிகிச்சை செய்தவர்கள், தலையில் கட்டி போன்ற உபாதைகள் உள்ளவர்கள் தலைக்கவசம் அணிய முடியாது.  இது குறித்து நீதிமன்றம் மறு சீராய்வு செய்து உத்தரவிட வேண்டும் .
மக்கள் சக்தி இயக்க மாநில ஆலோசகர் கே.சி. நீலமேகம் : பின்னால் அமர்பவரும் தலைக்கவசம் என்ற நடைமுறையால், பிறருக்கு லிப்ட் கொடுத்து உதவ முடியாது. வெளியூரிலிருந்து வரும் உறவினர்கள் நண்பர்களை ஏற்றிச்செல்ல முடியாது.  ஓட்டுபவர் தலைக்கவசம் வைத்திருப்பதே சிரமம், இதில் மற்றொருவருக்கும் வைத்துக்கொள்வது இயலாத காரியம். பொதுவாகவே நகர்புறங்களுக்குள் தலைக்கவசம் அணிவதில் விலக்கு ஏற்படுத்தி, நெடுஞ்சாலைகளில் செல்வோரை அணியவைப்பது ஏற்றது.
 போக்குவரத்து குளறுபடி :  திருச்சியில் போக்குவரத்து குளறுபடி அதிகளவில் உள்ளது. பாலப்பணிகள் நடைபெறுவதால், ஒருவழிப்பாதை என்பது கிடையாது. பல இடங்களில் ஒரு வழிப்பாதை, இருவழிப்பாதை குறித்து வெளியூர் நபர்கள் அறிய முடியாது. வெளியூர்களுக்கு செல்லும் வகையில் முறையான திசைகாட்டும் பலகைகள் இல்லை. ஆக்கிரமிப்புகள், ஆம்னி பேருந்துகள் நிறுத்தம் போன்றவைகளால் எப்போதும் போக்குவரத்து நெருக்கடி உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு வரையில் போக்குவரத்து நெருக்கடி நீடிக்கும் என்பது வழக்கமாகி விட்டது. இந்நிலையில் தலைக்கவசத்தில் மட்டுமே தீவிர கவனம் செலுத்துவதை பொதுமக்கள் ஏற்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments