உள் கட்டமைப்புகளை மேம்படுத்தினால் ரயில்வேக்கு கூடுதல் வருவாய் வாய்ப்பு
ரயில்வே துறை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இருப்பதால் தென்மாவட்டங்களில் சரக்கு போக்குவரத்து
ரயில்வே துறை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இருப்பதால் தென்மாவட்டங்களில் சரக்கு போக்குவரத்து மூலம் அதிக வருவாய் கிடைக்க வாய்ப்பு உருவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ரயில்வேயின் வருவாயில் சரக்குப் போக்குவரத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதில், துறைமுகங்களிலிருந்து ஏற்றுமதி, இறக்குமதிக்கு பொருள்கள் கொண்டு செல்லப்படுவதன் மூலம் கிடைக்கும் வருவாய் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், நாடு முழுவதிலும் 23 துறைமுகங்கள் ரயில்பாதையுடன் இணைக்கப்பட்டு அவற்றின் வழியாக சரக்குப் போக்குவரத்து நடக்கின்றன. இதில் அரபிக் கடலோரக்கரையில் 10 துறை முகங்கள், வங்காள விரிகுடாவில் 13 துறைமுகங்கள் குறிப்பிடத்தக்கவையாகும். இந்தியாவில் மொத்தமுள்ள 7, 516.6 கி.மீ. நீளமுடைய கடற்கரை பகுதிகளில் 12 பெரிய மற்றும் 200 சிறிய துறைமுகங்கள் உள்ளன. சர்வதேச நாடுகளிலிருந்து கொண்டு வரப்படும் பொருள்கள் மற்றும் ஏற்றுமதியாகும் பொருள்கள் என நாட்டின் 95 சதவீத வர்த்தகங்கள் இவற்றின் மூலமாகவே நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் 4 துறைமுகங்கள்: தமிழகத்தில் தூத்துக்குடி வ.உ.சி, காரைக்கால் மார்க், சென்னை, எண்ணூர் காமராஜர் துறைமுகங்கள் ரயில்பாதையுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதில் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் ஆண்டுக்கு 365 லட்சம் டன் சரக்கு கையாள்வதில், 6 லட்சம் டன் சரக்குகள் ரயில் வேகன்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுகின்றன. அதேபோல, காரைக்கால் மார்க் துறைமுகத்தில் கையாளப்படும் 91 லட்சம் டன்னில், 54 லட்சம் டன் சரக்கு, சென்னை துறைமுகத்தில் கையாளப்படும் 502 லட்சம் டன் சரக்குகளில், 54 லட்சம் டன் சரக்கு, எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் கையாளப்படும் 300 லட்சம் டன் சரக்குகளில் 29 லட்சம் சரக்குகள் ரயில் வேகன்களில் கொண்டு செல்லப்படுகின்றன.
இவற்றில் ரசாயன உரங்கள், நிலக்கரி, சுண்ணாம்புக்கல் உள்ளிட்டவை கொண்டு செல்லப்படுகின்றன. துறைமுகங்களில் கையாளப்படும் சரக்குகளில் குறைந்த அளவு சரக்குகள் தான் ரயில் மூலம் கொண்டு செல்லப்படுவது இதன் மூலம் உறுதியாகின்றன. இதனால் ரயில்வே துறைக்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டு வருகிறது. எனவே, வருவாயை அதிகரிக்க அதிகளவு சரக்குகளை ரயில்களில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு ரயில்வே துறையில் உள்ள குறைகள் களையப்பட்டு புதிய வேகன்கள், வழித்தடம், இயந்திர மயமாக்கல், உள்ளிட்ட பல்வேறு உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். அதனை செய்தால் ரயில்வே துறைக்கு பலமடங்கு வருவாய் நிரந்தரமாக கிடைக்க வாய்ப்புள்ளது என்பது ஊர்ஜிதமாகிறது.
போக்குவரத்து, வருவாய் அதிகரிக்க வாய்ப்பு : தற்போதைய சூழலில் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து சரக்குப் போக்குவரத்து அதிகரிக்க வாய்ப்புகள் நிலவி வருகின்றன. அவற்றை முறையாக பயன்படுத்தும் நிலையில், ரயில்வே வாரியம் தனது வருவாயை உறுதி செய்ய முடியும்.
குறிப்பாக, தென்மாவட்டப் பகுதிகளில் சுமார் 4,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் அனல் மின்சார நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவற்றுக்கு நிலக்கரி தேவை அதிகரிக்கும். பொதுவாக நிலக்கரி இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து தூத்துக்குடிக்கு இறக்குமதியாகின்றன. அவற்றை கொண்டு செல்ல ரயில் சரக்குப் போக்குவரத்தை பயன்படுத்தும் வகையில், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி அதிகளவில் ரயில் வேகன்களை உற்பத்தி செய்து சரக்குப் போக்குவரத்துக்கு பயன்படுத்தினால் ரயில்வே துறைக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் தக்ஷிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் தொழிற்சங்க துணைப் பொதுச்செயலாளர் மனோகரன் கூறுகையில், தூத்துக்குடி துறைமுகத்தில் 70,000 கோடியில் 3 கட்டமாக விரிவாக்கப் பணிகள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டப் பணிகள் ரூ.13, 775 கோடியில் நடந்து வருகிறது. இதன்மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் சுமார் 350 லட்சம் டன் நிலக்கரியை இந்த துறைமுகம் கூடுதலாக கையாள இருக்கிறது. அவற்றை ரயில்வே துறை சாதமாக்க உள் கட்டமைப்புகளை மேம்படுத்துவது அவசியம். குறிப்பாக, பெற மீளவிட்டான் - தூத்துக்குடி இடையே மின்மயமாக்கப்பட்ட இரட்டை வழி ஏற்படுத்த வேண்டும்.
முயல் தீவிற்கு ரயில் இணைப்பு ஏற்படுத்த வேண்டும். கடற்கரை நிலப்பரப்பை இணைக்க ஏதுவாக மீளவிட்டான் - மேல்மருதூர் இடையே புதிய ரயில் பாதை, கோஸ்டல் எனர்ஜி மற்றும் ஹின்ட் பாரத் நிறுவனங்கள் மேற்கொள்ளவுள்ள திட்டங்களுக்கு கிளைப்பாதை, தூத்துக்குடி துறைமுகத்தில் ரயில் வேகன்களில் நிலக்கரியை லோடு ஏற்றுவதற்கு கன்வேயர் பெல்ட் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை ரயில்வே மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.