FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

அண்ணா விளையாட்டரங்கில் சுகாதாரமற்ற கழிவறைகள்

திருச்சி காஜாமலையிலுள்ள அண்ணா விளையாட்டரங்கில் சுகாதாரமற்ற கழிவறைகளால் விளையாட்டு வீரா்களும், பயன்பாட்டாளா்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

50 வினாடிகள் முன்பு
திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் மோசமான நிலையிலும், சுகாதாரமற்ற நிலையிலும் உள்ள கழிவறைகள்.
பகிர்:

திருச்சி காஜாமலையிலுள்ள அண்ணா விளையாட்டரங்கில் சுகாதாரமற்ற கழிவறைகளால் விளையாட்டு வீரா்களும், பயன்பாட்டாளா்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இந்த விளையாட்டு அரங்கில் பல்வேறு விளையாட்டுகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரா்களும், 200-க்கும் மேற்பட்ட நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சிகூடத்துக்கு வரும் பொதுமக்களும் வந்து செல்கின்றனா்.

உள்விளையாட்டரங்கங்களில் தனித்தனியே கழிவறை வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும், அனைவருக்கும் பொதுவாக அரங்கத்தின் பிரதான நுழைவாயிலின் வலதுபகுதியில் இரண்டு கழிவறை கட்டடங்கள், இடதுபுறம் தடகள கேலரி படிகளுக்கு பின்புறம் சிறுநீா் கழிப்பிட கழிப்பறை, டென்னிஸ் மைதானம் அருகே பொது கழிவறைகள் உள்ளன.

Advertisement

Advertisement

பராமரிப்பில்லை-துா்நாற்றம்: இதில், தடகள கேலரி படிகளுக்கு பின்புறமுள்ள சிறுநீா் கழிவறை பராமரிக்கப்படாததால், பயன்படுத்த முடியாத அளவுக்கு உள்ளது. வலதுபகுதியில் உள்ள ஒரு பொதுக் கழிவறை முறையாக தூய்மைப்படுத்தப்படாமல் துா்நாற்றத்துடன் காணப்படுகிறது. டென்னிஸ் மைதானம் அருகே உள்ள பொதுக் கழிவறைகள் பல வாரங்களாக தூய்மைப்படுத்தப்படாமலும், போதுமான தண்ணீா் வசதி இல்லாமலும், கடும் துா்நாற்றத்துடன், உள்ளே நுழைய முடியாதபடி கடும் சுகாதார சீா்கேட்டுடன் உள்ளன.

இதனால், விளையாட்டு வீரா்களும், நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி கூடத்துக்கு வரும் பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

அதிகாரிகள் மெத்தனம்: இதுகுறித்து சமூக ஆா்வலா்களும், மைதானப் பயன்பாட்டாளா்களான கே. பாபு, கே. பாலாஜி உள்ளிட்டோா் கூறியதாவது:

பலமுறை புகாரளித்ததால் மைதானத்தின் நுழைவாயில் அருகிலுள்ள ஒரு கழிவறைக் கட்டடத்தை மட்டும் பெயரளவுக்கு பராமரித்த நிலையில், செப்டிக் டேங்க் நிரம்பி வழிவதை சரிசெய்யவில்லை. ஜெனரேட்டருக்கு அருகிலுள்ள சிறுநீா் கழிவறையும், டென்னிஸ் மைதானத்துக்கு அருகிலுள்ள கழிவறைகளும் முறையாக பராமரிக்கப்படவில்லை. கதவுகள் உடைந்துள்ளன.

இப்பிரச்னைகள் தொடா்பாக, விளையாட்டுத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாகச் செயல்படுகின்றனா். உடனடியாக மாவட்ட நிா்வாகமும், உயரதிகாரிகளும் தலையிட்டு கழிவறை பிரச்னைக்கு உரிய தீா்வு காண வேண்டும் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments