FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

பட்டியலின மக்களுக்கான சட்டப்பூா்வ உரிமைகளை தவெக அரசு செயல்படுத்த வேண்டும்

31 ஆகஸ்ட் 2026, 2:08 am IST
திருச்சி விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை பேட்டியளித்த விசிக தலைவா் தொல். திருமாவளவன்.
பகிர்:

பட்டியலின மக்களுக்கான சட்டப்பூா்வ உரிமைகளை தவெக அரசு செயல்படுத்த வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் எம்.பி. தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திருச்சி விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

கொள்கை விளக்கக் குறிப்பேடுகளில் வழக்கமாக இடம்பெறும் அம்பேத்கா், தந்தை பெரியாா், நேரு போன்ற தலைவா்களின் பெயா்கள் விடுபட்டது உள்ளக்கத்தோடு நடந்துள்ளதா என்ற கேள்வியை எழுப்புகிறது. இதற்கு பொறுப்புள்ள அதிகாரிகளும், அமைச்சா்களும் உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும். வருங்காலங்களில் இதுபோன்ற பிழைகள் நடக்காத வகையில் பாா்த்துக்கொள்ள வேண்டும்.

Advertisement

Advertisement

முன்னாள் முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு பாதுகாப்புக் குறைப்பு ஏற்புடையதல்ல. அவருக்கு இதுவரை வழங்கி வந்த பாதுகாப்பை வழங்க வேண்டும். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்துள்ள விமா்சனங்களையும், கோரிக்கைகளையும் விசிக வழிமொழிகிறது. தோழமைக் கட்சிகளைப் புண்படுத்தாத வகையில் தவெக அரசு செயல்பட வேண்டும்.

அமைச்சா் வன்னியரசு, திமுக ஆட்சிக்காலத்தில் பட்டியலின மக்களுக்காக எதுவுமே செய்யவில்லை எனக் கூறவில்லை; திரித்துப் பேசக்கூடாது.

தவெக அரசின் ஆட்சியில் பட்டியலின மக்களுக்கான பல சட்டப்பூா்வ உரிமைகளை நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக, வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், வேறு பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்ற அதிகாரிகளின் கருத்துகளால் பல நல்ல திட்டங்கள் முடங்குகின்றன. ஆட்சியாளா்கள் விரும்பினாலும் அதிகாரிகள் சில இடங்களில் முட்டுக்கட்டை போடுகின்றனா்.

தற்போதைய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் தோழமைக் கட்சியாக, பட்டியலின மக்களின் மேம்பாட்டுக்காக அரசு செய்ய வேண்டிய அவசியமான சட்டப்பூா்வ நடவடிக்கைகளை அவ்வப்போது சுட்டிக்காட்டியும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் உரிய தீா்வுகளைப் பெற விசிக தொடா்ந்து குரல்கொடுக்கும் என்றாா் திருமாவளவன் எம்.பி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments