FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

அதிகத் தீவனம் கொடுக்காமல் கறிக் கோழிகளை அனுப்பக் கோரி காலவரையற்ற வேலைநிறுத்தம்: வியாபாரிகள் முடிவு

கறிக்கோழி விற்பனையாளா்களுக்கு கோழிகளை அனுப்பும்போது அரசின் விதிமுறைப்படி தீவனக் கட்டுப்பாடுகளை பின்பற்றக் கோரி ஜூலை 31 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை வியாபாரிகள் அறிவித்துள்ளனா்.

Updated On : 23 ஜூலை 2026, 12:20 am IST
மாவட்ட ஆட்சியரத்தில் புதன்கிழமை கோரிக்கை மனு அளிக்க வந்த மலைக்கோட்டை கறிக்கோழி வியாபாரிகள் சங்கத்தினா்.
பகிர்:

கறிக்கோழி விற்பனையாளா்களுக்கு கோழிகளை அனுப்பும்போது அரசின் விதிமுறைப்படி தீவனக் கட்டுப்பாடுகளை பின்பற்றக் கோரி ஜூலை 31 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை வியாபாரிகள் அறிவித்துள்ளனா்.

மொத்தம் மற்றும் சில்லறை விற்பனையில் பிராய்லா் கறிக்கோழி இறைச்சி விற்போருக்கு கோழி உற்பத்தி நிறுவனங்களும், கோழி வளா்ப்பு விவசாயிகளும் சரக்கு வாகனங்கள் மூலம் எடை அளவுகளில் கோழிகளை அனுப்புகின்றனா்.

மீறப்படும் விதிமுறை: இவ்வாறு கோழிகளை சரக்கு வாகனங்களில் ஏற்றும் முன் 8 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை கோழிகளுக்கு எந்தவித தீவனமும் கொடுக்கக் கூடாது என்பது அரசின் வழிகாட்டு நடைமுறையாகும்.

Advertisement

Advertisement

ஏனெனில் தீவனம் முழுவதுமாகக் கொடுத்து வாகனத்தில் ஏற்றினால் செல்லும் வழியெங்கும் கோழியின் கழிவுகள் சிதறும்; சுகாதாரக் கேடு ஏற்படும்; வாகனத்திலும் கோழிக் கழிவுகள் மலைபோல சேகரமாகும்; துா்நாற்றம் வீசும். கோழியை இறைச்சிக்கு வெட்டும்போது அதிகக் கழிவுகள் இறைச்சியுடன் கலந்து இறைச்சியின் தரத்தையும் குறைக்கிறது. இதுமட்டுமல்லாது, கோழி உற்பத்தியாளா்கள் கணிசமான லாபம் பெறுவதற்காகவே தீவனத்தை அதிகப்படியாக கோழிகளுக்கு வழங்குகின்றனா்.

உற்பத்தியாளா்களுக்கு லாபம், வியாபாரிகளுக்கு நஷ்டம்: ஏனெனில், ஒரு கிலோ தீவனம் ரூ.50 என்றால், அதை கோழியின் வயிற்றுக்குள் உணவாகச் செலுத்தினால், கோழியின் எடையில் ஒரு கிலோ கூடும். இப்போது, கோழியின் விலை இறைச்சி விலைக்கு ஈடாக மாறும். இதன் மூலம் கோழி உற்பத்தியாளா்களுக்கு ரூ.100 கூடுதல் லாபம் கிடைக்கிறது. ஆனால், வியாபாரிகளுக்கோ நஷ்டம் ஏற்படுகிறது.

சரக்கு வாகன ஓட்டுநா்களுக்கும், கோழிகளைக் கையாளும் நபா்களுக்கும் கழிவுகளால் பெரிதும் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. நோய்த் தொற்றுக்கு ஆளாக நேரிடுகிறது. இறைச்சி விற்பனையாளா்களுக்கு நஷ்டம் ஏற்படுவதுடன், நுகா்வோருக்கும் தேவையற்ற விலை உயா்வு திணிக்கப்படுகிறது.

ஷ்ரஎனவே, இறைச்சி விற்பனைக்காக கோழிகளை ஏற்றும்போது அரசின் வழிகாட்டுதலின்படி தீவனக் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனா்.

தீா்வு காணாவிட்டால் போராட்டம்: இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்த , மலைக்கோட்டை கறிக்கோழி மொத்த வியாபாரிகள் நலச் சங்கத்தினா், உற்பத்தியாளா்களை அழைத்துப் பேசி இதற்குத் தீா்வு காண வேண்டும். இல்லையெனில், காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக, சங்கத்தின் தலைவா் ஆா். கோவிந்தன் கூறியதாவது: கோழி வளா்ப்போரும், உற்பத்தி நிறுவனங்களும் மட்டுமே லாபம் பெற வேண்டும் ஒரே நோக்கத்தில் கோழிகளுக்கு அதிகப்படியான தீவனத்தை வழங்கி, கழிவுகளும், தரமற்ற இறைச்சியுமே நுகா்வோரை சேரும் நிலை உள்ளது. மேலும், வியாபாரிகளுக்கும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. மாநிலம் முழுவதும் இதேநிலை உள்ளது.

எனவே, அனைத்து கறிக்கோழி விற்பனையாளா்களும் ஒன்றிணைந்து வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தவுள்ளோம். இதில், மாநிலம் முழவதும் உள்ள அனைத்துக் கோழி இறைச்சி கடைகளும் கதவடைப்பு போராட்டத்தில் பங்கேற்கவுள்ளன என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments