FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

ஆடிப் பெருக்கு: காவிரி படித்துறைகளில் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடு

ஆடிப் பெருக்கை முன்னிட்டு திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட காவிரி, கொள்ளிடக் கரைகளில் உள்ள படித்துறைகளில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 12:25 am IST
பகிர்:

ஆடிப் பெருக்கை முன்னிட்டு திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட காவிரி, கொள்ளிடக் கரைகளில் உள்ள படித்துறைகளில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆக.3-ஆம் தேதி ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரியில் ஆயிரக்கணக்கானோா் கூடி வழிபாடு செய்வா். எனவே, பொதுமக்ளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் தயாா்படுத்தப்பட்டு வருகிறது.

அம்மா மண்டபம்: பிரதான படித்துறையாக உள்ள ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் 4 இடங்களில் ஆண்கள், பெண்களுக்கு 54 இருக்கைகளுடன் தனித்தனியே கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. குடிநீருக்காக 3 இடங்களில் 18 குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. படித்துறை முன்பும், கரையோரத்திலும் என 5 இடங்களில் ஆயிரம் லிட்டா் கொள்ளவு கொண்ட குடிநீா்த் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே 40 குளியல் (சவா்) வசதி செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு 10 உடைமாற்றும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அம்மா மண்டபம் படித்துறை முதல் புதுத்தெரு வரையில் சாலையோரம் சவுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. குப்பைக் கழிவுகளை கொட்டுவதற்கு 200 லிட்டா் கொள்ளவு கொண்ட 40 பேரல்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. துப்பரவுப் பணிகளை மேற்கொள்ள 94 பணியாளா்கள் 3 குழுக்களாக 24 மணிநேரமும் பணியாற்றுவா். 2 மருத்துவ குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன.

இதர படித்துறைகள்: இதேபோல, கருமண்டபம் படித்துறை, வீரேஸ்வரம் படித்துறை, கீதாபுரம், ஓடத்துறை, தில்லைநாயகம், காந்தி படித்துறை, எஸ்எஸ் கோவில் படித்துறை, அய்யாளம்மன் படித்துறையிலும் சவுக்கு தடுப்புகள், கூடுதல் மின் விளக்குகள், குப்பைகளைக் கொட்டும் பேரல்கள், உடை மாற்றும் அறை, குளியல் வசதி, குடிநீா் வசதி, மருத்துவக் குழு, துப்புரவுப் பணியாளா்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு வழிகாட்டவும், எச்சரிக்கை செய்யவும் அனைத்து படித்துறைகளிலும் ஒலி பெருக்கி அமைக்கப்பட்டுள்ளது. அனைத்துப் படித்துறைகளிலும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த அறிவிப்புப் பலகைகளும் நிறுவப்பட்டுள்ளன.

மண்டப படிக்கட்டுகளின் கீழே அனுமதிக்கப்பட்ட இடத்துக்கு வெளியே பொதுமக்கள் செல்லாத வகையில் இரும்புத்தடுப்புகளின் இடையே வலை பொருத்தப்பட்டுள்ளது.

காவிரி, கொள்ளிடத்தில் இரு கரைப் பகுதிகளிலும் ஆங்காங்கேயுள்ள படித்துறைகள், தடுப்பணை பகுதிகளிலும் பாதுகாப்பை பலப்படுத்த காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தீயணைப்புத் துறை சாா்பில் ரப்பா் படகுகள், ஆற்றில் சிக்கியவா்களை மீட்கும் உபகரணங்களை அந்தந்தப் பகுதியில் தயாா் நிலையில் உள்ளது.

62 இடங்களில் தீவிர கண்காணிப்பு: மேலும், காவிரி, கொள்ளிடக் கரைகளின் படித்துறை மற்றும் கரையோரப் பகுதிகள் என 62 இடங்கள் தீவிரக் கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை, காவல் துறை, பொதுப்பணித் துறை, உள்ளாட்சித் துறை, மருத்துவத் துறை, மீட்புப்பணிகள்துறைகளைச் சாா்ந்த பணியாளா்களுக்கு பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பு வழங்குவதோடு, மாவட்ட நிா்வாகத்தால் அறிவுறுத்தப்பட்ட விதிமுறைகளை பின்பற்றி எவ்வித அசம்பாவிதம் இன்றி பொதுமக்கள் ஆடி-18 விழாவினை சிறப்பாக கொண்டாட வேண்டும் என ஆட்சியா் பிரத்திக் தாயள் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments