குழந்தை பாதுகாப்பு அடிப்படை உரிமை
ஒவ்வொரு குழந்தையும் அன்புடனும் பாதுகாப்புடனும் வளர்வது அவர்களின் அடிப்படை உரிமை.
- அனந்தபத்மநாபன்
இன்றைய சமூகத்தில் கணவன்-மனைவி இருவரும் பணிபுரியும் குடும்பங்கள் அதிகரித்து வருகின்றன. அந்தச் சூழலில், குழந்தையை பகல்நேரப் பராமரிப்பு மையத்திலோ அல்லது பராமரிப்பாளரிடமோ ஒப்படைப்பது பல குடும்பங்களுக்கு தவிர்க்க முடியாத தேவையாகிவிட்டது.
ஆனால், அது வெறும் வசதிக்கான ஏற்பாடு அல்ல; தங்கள் வாழ்வின் மிகப் பெரும் பொறுப்பை மற்றொருவரிடம் நம்பிக்கையுடன் ஒப்படைக்கும் பெற்றோரின் முடிவு. அந்த நம்பிக்கையே குழந்தைப் பராமரிப்பு அமைப்பின் அடித்தளம்.
Advertisement
Advertisement
பெரும்பாலான குழந்தைப் பராமரிப்பு மையங்களும், பராமரிப்பாளர்களும் அன்புடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றுகின்றனர் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும், அண்மைக் காலங்களில் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வெளியான சில சம்பவங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை மீண்டும் எழுப்பியுள்ளன.
பெங்களூரு, புது தில்லி, நொய்டா, மும்பை உள்ளிட்ட நகரங்களிலும், ஆஸ்திரேலியா, பிரிட்டன், நியூஸிலாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் குழந்தைகள் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் வழக்குகள் விசாரணைக்கும் நீதிமன்றங்களுக்கும் சென்றுள்ளன. சிலவற்றில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளன; சில இன்னும் விசாரணையில் உள்ளன. ஒவ்வொரு வழக்கின் சட்டநிலை வேறுபட்டிருந்தாலும், குழந்தைகளின் பாதுகாப்பை தனிநபர் நல்லெண்ணத்தின் மீது மட்டும் விட்டுவிட முடியாது என்பதே அவை உணர்த்தும் செய்தி.
இதில் மிகுந்த கவலைக்குரிய அம்சம், பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் தங்களுக்கே என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த முடியாத வயதினராக இருப்பதுதான்.
பச்சிளம் குழந்தைகளால் பேச முடியாது; சிறு குழந்தைகளுக்கு நடந்ததைத் தெளிவாகச் சொல்லும் மொழித்திறனும் இருக்காது.
எனவே, குழந்தையின் நடத்தையில் ஏற்படும் சிறிய மாற்றங்களைக்கூட பெற்றோர் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். திடீர் பயம், அசாதாரண அமைதி, தூக்கக் கோளாறு, பராமரிப்பு மையத்துக்குச் செல்ல மறுப்பு போன்றவை சில நேரங்களில் கவனிக்கப்பட வேண்டிய அறிகுறிகளாக இருக்கலாம். அதேநேரத்தில், குழந்தையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முழுப் பொறுப்பையும் பெற்றோரின் விழிப்புணர்வின் மீது சுமத்துவதும் நியாயமல்ல.
கனடாவில் மேற்கொள்ளப்பட்ட நீண்டகால ஆய்வு ஒன்றில், நீண்ட நேரம் பகல்நேரப் பராமரிப்பு மையங்களில் இருந்த சில குழந்தைகளிடம் நான்கரை வயதில் சமூகத் திறன் குறைவு, அதீத சுறுசுறுப்பு, ஆக்ரோஷம் அல்லது பதற்றம் போன்ற வெளிப்புற நடத்தைச் சிக்கல்கள் சராசரியாக அதிகமாகக் காணப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், இதற்கு பகல்நேரப் பராமரிப்பே நேரடிக் காரணம் என்று அந்த ஆய்வு கூறவில்லை. பராமரிப்பின் தரம், குடும்பச் சூழல், பராமரிப்பில் தொடர்ச்சித்தன்மை, சமூகப் பொருளாதார காரணிகள் ஆகியவை குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வாளர்களே வலியுறுத்தியுள்ளனர். எனவே, இத்தகைய ஆய்வுகளை அச்சத்தை விதைப்பதாக அல்ல; தரத்தை உயர்த்த வேண்டிய தேவையை உணர்த்துவதாகவே அணுக வேண்டும்.
குழந்தைப் பராமரிப்பு மையங்களைத் தேர்ந்தெடுக்கும்போது பெற்றோர் சில அடிப்படைக் கேள்விகளை எழுப்புவது அவசியம். பணியாளர்களின் பின்னணி முறையாகச் சரிபார்க்கப்படுகிறதா? அவர்கள் எவ்வளவு காலமாக அங்கு பணியாற்றுகின்றனர்? புகார் அளிக்கும் நடைமுறை என்ன? அவசரநிலைக்கான செயல்திட்டம் உள்ளதா? இவை நம்பிக்கையின்மையின் அடையாளம் அல்ல; பொறுப்புணர்வின் வெளிப்பாடே.
அதேநேரத்தில், பராமரிப்பு நிறுவனங்கள் உரிமம் பெற்றிருப்பதில் மட்டும் திருப்தியடையக் கூடாது. பணியாளர்களுக்கான முழுமையான பின்னணி ஆய்வு, தொடர்ச்சியான பயிற்சி, குழந்தைகளுடன் பாதுகாப்பாகவும் மரியாதையுடனும் நடந்து கொள்வதற்கான தெளிவான நடைமுறைகள் ஆகியவை கட்டாயமாக இருக்க வேண்டும். பொதுப் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள், பெற்றோருக்கு தினசரி தகவல் பகிர்வு, வெளிப்படையான புகார் பரிசீலனை அமைப்பு போன்றவை நம்பிக்கையை வலுப்படுத்தும். ஆனால், எந்தத் தொழில்நுட்பமும் மனித அக்கறைக்கு மாற்றாக அமைய முடியாது.
ஒழுங்குமுறை அமைப்புகளின் பங்கும் இங்கு மிக முக்கியமானது. உரிமம் வழங்குவதுடன் நிற்காமல், திடீர் ஆய்வுகள், தரநிலைகளைத் தொடர்ந்து கண்காணித்தல், விதிமீறல்களை வெளிப்படையாகக் கையாளுதல் போன்ற நடவடிக்கைகள் உறுதியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
குழந்தைகளின் பாதுகாப்பு என்பது ஆவணங்களில் இடம்பெறும் விதிமுறை அல்ல; அன்றாட நடைமுறையாக இருக்க வேண்டிய அடிப்படைப் பொறுப்பு.
மேலும், பராமரிப்பாளர்களின் நலனையும் புறக்கணிக்க முடியாது. குறைந்த ஊதியம், நீண்ட நேர வேலை, போதிய ஓய்வின்மை, மனஅழுத்தம் ஆகியவை எந்தத் தொழிலிலும் செயல்திறனைக் குறைக்கும். அவர்களுக்கும் நியாயமான பணிநேரம், போதிய ஓய்வு, மரியாதையான பணிச்சூழல் ஆகியவை வழங்கப்படுவது குழந்தைகளின் நலனுடனும் நேரடியாகத் தொடர்புடையது.
குழந்தைப் பாதுகாப்பு என்பது ஒரு குடும்பத்தின் தனிப்பட்ட பிரச்னை அல்ல; ஒரு சமூகத்தின் நாகரிகத்தை அளவிடும் அளவுகோல். வலுவான சட்டப் பாதுகாப்பு, திறமையான கண்காணிப்பு, தொழில்முறை பராமரிப்பு, பெற்றோர்-நிறுவனம் அரசு ஆகிய மூன்றின் கூட்டுப் பொறுப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட அமைப்பை உருவாக்குவது காலத்தின் கட்டாயம்.
ஒவ்வொரு குழந்தையும் அன்புடனும் பாதுகாப்புடனும் வளர்வது அவர்களின் அடிப்படை உரிமை. அதை உறுதிசெய்வது பெற்றோரின் கடமை மட்டுமல்ல; அரசும் நிறுவனங்களும் ஒட்டுமொத்த சமூகமும் இணைந்து ஏற்க வேண்டிய தார்மீகப் பொறுப்பாகும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.