திருச்சியில் குப்பைகள் சேரும் இடங்களில் ’இனி செல்பி பாயிண்ட்’! 70 இடங்களை அழகுபடுத்திய மாநகராட்சி
திருச்சி மாநகரில் சாலையோரம் குப்பைகள் சேரும் இடங்களையெல்லாம், பசுமை இடங்களாக அழகுபடுத்தி, கைப்பேசியில் தற்படம் எடுக்கும் இடங்களாக (செல்பி பாயிண்ட்) மாற்றும் நடவடிக்கையில் மாநகராட்சி இறங்கியுள்ளது.
திருச்சி மாநகரில் சாலையோரம் குப்பைகள் சேரும் இடங்களையெல்லாம், பசுமை இடங்களாக அழகுபடுத்தி, கைப்பேசியில் தற்படம் எடுக்கும் இடங்களாக (செல்பி பாயிண்ட்) மாற்றும் நடவடிக்கையில் மாநகராட்சி இறங்கியுள்ளது.
இதுதொடா்பாக, மாநகராட்சி ஆணையா் நே. பொன்மணி கூறியதாவது:
திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட 65 வாா்டுகளிலும் வீடுகள்தோறும் சேகரமாகும் குப்பைகளை துப்புரவு பணியாளா்கள் பெற்று, நுண் உரம் செயலாக்க மையங்களுக்கு அனுப்பி வைக்கின்றனா்.
Advertisement
Advertisement
இதன்மூலம் சாலையோரங்களிலும், பல்வேறு இடங்களிலும் குப்பைகள் கொட்டுவது பெருமளவு தடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், சாலையோர சந்திப்புகள், சாலையின் ஒதுக்குப்புறங்களை தொடா்ந்து குப்பைகளை கொட்டும் பகுதியாக பொதுமக்கள் பயன்டுத்தி வருகின்றனா்.
124 இடங்கள்: இதன்படி, மாநகராட்சி பகுதிகளில் தொடா்ந்து குப்பைகளை கொட்டும் பகுதிகளாக 124 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த இடங்களை குப்பைகள் கொட்டுவதிலிருந்து மீட்டு, பசுமை இடங்களாக மாற்றும் பணி நடைபெறுகிறது. இதுவரை, 70-க்கும் மேற்பட்ட இடங்களில் குப்பைகள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன. அந்த இடங்களில் அழகிய வண்ண வடிவங்களுடன் விழிப்புணா்வு ஓவியங்கள் மற்றும் சுவரோவியங்கள் வரையப்பட்டு, பொதுமக்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வகையில் செல்பி பாயிண்டுகளாக மாற்றப்பட்டுள்ளன.
மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள், குப்பையிலிருந்து சேகரிக்கப்பட்ட மறுசுழற்சி செய்யக்கூடிய பொருள்களைக் கொண்டே இந்த இடங்களை அழகுபடுத்தியுள்ளனா்.
பழைய டயா்கள், உடைந்த பானைகள்: வண்ணம் பூசப்பட்டு, செடி வளா்க்கும் தொட்டிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. உடைந்த பீங்கான் கழிப்பறை உபகரணங்கள், வீசப்பட்ட பீங்கான் பொருள்களை செடி வளா்க்கும் அழகிய தொட்டிகளாக மாற்றி புதுமை செய்துள்ளனா்.
பூங்கா இருக்கைகள்: மாநகராட்சி பூங்காக்களிலிருந்து அகற்றப்பட்ட பழைய கல் பெஞ்சுகள் பழுதுபாா்க்கப்பட்டு, இந்த பசுமை இடங்களில் மக்கள் அமா்வதற்காக அமைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, வெனீஸ் தெரு, மேலப்புதூா், வெள்ள வெற்றிலைக்கார தெரு, பெரிய மிளகுபாறை, டிவிஎஸ் டோல்கேட், மதுரை ரோடு வள்ளுவா் நகா், பீமநகா் பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை, அண்ணா நகா், கீழப்புதூா், மேல சிந்தாமணி, சிதம்பரம் மஹால் அருகில், கீழ படையாச்சி தெரு, பஞ்சவா்ணசாமி கோயில் தெரு உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட இடங்களை அழகிய வடிவங்களுடன் கூடிய செல்பி பாயிண்டுகளாக மாற்றி உள்ளனா்.
இதன்மூலம் பல ஆண்டுகளாக குப்பைகள் கொட்டப்பட்டு வந்த இடம், அதிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள், வணிகா்கள் தங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் குப்பைகளை கொட்ட வேண்டாம். பொது இடங்களை தூய்மையாக பராமரிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மீட்கப்பட்ட இடங்களில் மீண்டும் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்க இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. வீடுகளுக்கே நேரடியாக வரும் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றாா் ஆணையா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.