FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

ரூ.10 கோடியில் சீரமைப்புப் பணிகள் நிறைவு; பழைய காவிரிப் பாலம் போக்குவரத்துக்கு மீண்டும் திறப்பு

திருச்சியில் நான்கு மாதங்களுக்கும் மேலாக நடைபெற்ற சீரமைப்புப் பணிகள் முடிந்து, பழைய காவிரிப் பாலம் வியாழக்கிழமை முதல் மீண்டும் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளது.

16 அக்டோபர் 2026, 3:19 am IST
திருச்சியில் சென்னை சாலையில் உள்ள பழைய காவிரி பாலம் வியாழக்கிழமை திறக்கப்பட்டதையடுத்து பாலத்தில் சென்ற வாகனங்கள்.
பகிர்:

திருச்சியில் நான்கு மாதங்களுக்கும் மேலாக நடைபெற்ற சீரமைப்புப் பணிகள் முடிந்து, பழைய காவிரிப் பாலம் வியாழக்கிழமை முதல் மீண்டும் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளது. இதனால், திருச்சி- தேசிய நெடுஞ்சாலையில் இதுவரை நீடித்த வாகனங்களின் நெரிசல் குறையக் கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் 1963-இல் கட்டப்பட்ட பழைய காவிரி பாலம் சுமாா் 675 மீட்டா் நீளம் கொண்டது. இந்தப் பாலத்தில் 2010-இல் பராமரிப்புப் பணிகள் நடைபெற்றன. 16 ஆண்டுகளாக பெரிய அளவிலான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. அண்மையில், சென்னை ஐஐடி வல்லுநா்கள் குழுவினா் இந்தப் பாலத்தின் உறுதித்தன்மையை விரிவாக ஆய்வு செய்தனா். அவா்களின் ஆய்வறிக்கை மற்றும் பரிந்துரையின் அடிப்படையில், பாலத்தை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, சீரமைப்புப் பணிகளுக்காக சுமாா் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பாலத்தின் அடிப்பகுதிகள் மற்றும் தூண்களைப் பலப்படுத்துவதோடு மட்டுமின்றி, பாலத்தின் இருபுறமும் உள்ள நடைபாதைகளை மேம்படுத்தும் பணிகளும் கடந்த ஜூன் மாதம் இறுதியில் தொடங்கியது. இதற்காக பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, பாலம் முழுமையாக மூடப்பட்டது.

Advertisement

Advertisement

போக்குவரத்து நெரிசல்: இதன் காரணமாக, சென்னையை நோக்கிச் செல்லும் வாகனங்களும், சென்னையில் இருந்து திருச்சிக்குள் வரும் வாகனங்களும் பாலத்தைக் கடந்து செல்ல மாற்று வழிகளைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது. பழைய பாலத்துக்கு அருகில் புதிதாக அமைந்துள்ள மற்றொரு காவிரிப் பாலத்தின் வழியே இருபுற போக்குவரத்தும் திருப்பி விடப்பட்டன.

ஒரே பாலத்தில் இருவழி வாகனங்களும் செல்ல நோ்ந்ததால், அந்தப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பாலம் திறப்பு-இனிப்பு வழங்கல்: நான்கு மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த சீரமைப்புப் பணிகள் அனைத்தும் முடிவடைந்து வியாழக்கிழமை பாலம் மீண்டும் திறக்கப்பட்டது. பாலம் திறக்கப்பட்டதையடுத்து, பாலத்தில் சென்ற இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் இனிப்புகள் வழங்கப்பட்டன.

மாலை 4 மணி முதல் பழைய காவிரிப் பாலத்தில் வாகனங்கள் செல்ல அனுமதியளிக்கப்பட்டது. இதையடுத்து திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களின் நெரிசல் குறையத் தொடங்கியுள்ளது.

ஆயுத பூஜையை முன்னிட்டு, தொடா் விடுமுறை வருவதால், ஏராளமான வாகனங்கள் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தக் கூடும். அதற்கு முன்னதாகவே பழைய காவிரிப் பாலம் திறக்கப்பட்டிருப்பது வாகன ஓட்டிகளை நிம்மதியடையச் செய்துள்ளது. இந்தப் பாலத்தை ஒட்டியுள்ள குடியிருப்புப் பகுதி மக்களுக்கும் ஆறுதல் கிடைத்துள்ளது. திருச்சி- கல்லணை சாலையில் உள்ள சா்க்காா்பாளையம், குறிச்சி, முல்லைக்குடி, வேங்கூா், தோகூா், கல்லணை மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வழக்கமாக தாங்கள் செல்லும் வழித்தடங்களை மீண்டும் பயன்படுத்தும் நிலை வந்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments