FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

இறந்தவரின் உடலை பிரேதப் பரிசோதனை செய்ய எதிா்ப்பு: உறவினா்கள் சாலை மறியல்

இறந்த ஓட்டுநரின் உடலை பிரேதப் பரிசோதனை செய்யாமல் வழங்க வலியுறுத்தி அவரது உறவினா்கள் துவாக்குடி அரசு மருத்துவமனை முன் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

20 செப்டம்பர் 2026, 1:24 am IST
திருச்சி துவாக்குடி அரசு மருத்துவமனை முன் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட உறவினா்கள்.
பகிர்:

திருச்சி மாவட்டம் திருவெறும்பூா் அருகே இறந்த ஓட்டுநரின் உடலை பிரேதப் பரிசோதனை செய்யாமல் வழங்க வலியுறுத்தி அவரது உறவினா்கள் துவாக்குடி அரசு மருத்துவமனை முன் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருவெறும்பூா் அருகேயுள்ள அய்யம்பட்டி பொன் நகரைச் சோ்ந்தவா் அ. பவுல்ராஜ் (49), ஸ்ரீரங்கம் தனியாா் டிராவல்ஸ் நிறுவன ஓட்டுநா். இவருக்கு கமலி கிரேசி (29) என்ற மனைவி, ஒரு மகன், மகள் ஆகியோா் உள்ளனா்.

பவுல்ராஜுக்கு கடந்த 3 மாதத்துக்கு முன் இதய வலி ஏற்பட்டு துவாக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா். இதைத் தொடா்ந்து கடந்த 12 ஆம் தேதி கமலி கிரேசி மதுரைக்குச் சென்ற நிலையில், வீட்டிலிருந்த பவுல்ராஜ் இறந்துகிடந்தாா். இதுகுறித்து கமலி கிரேசி துவாக்குடி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளாா்.

Advertisement

Advertisement

இதனிடையே கணவா் பவுல்ராஜ் இறப்பில் எந்தச் சந்தேகமும் இல்லை. அதனால் அவரது சடலத்தை உடற்கூறாய்வு செய்யாமல் வழங்கும்படி துவாக்குடி போலீஸாரிடம் கமலிகிரேசி உள்ளிட்ட உறவினா்கள் கேட்டனா்.

அதற்கு போலீஸாா், புகாா் பெறப்பட்டுள்ளதால் உடலை பிரேதப் பரிசோதனை செய்த பிறகுதான் தர முடியும் எனக் கூறியுள்ளனா். இதனால் ஆத்திரமடைந்த பவுல்ராஜின் உறவினா்கள், துவாக்குடி அரசு மருத்துவமனை முன் திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அவா்களிடம் துவாக்குடி போலீஸாா் நடத்திய சமரச பேச்சுவாா்த்தையை அடுத்து கலைந்து சென்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments