FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

முழுமையாகத் தூா்வாரப்படாத புது அய்யன் வாய்க்கால்

காவிரி ஆற்றில் தண்ணீா் திறந்துவிடப்பட்டு 22 நாள்களாகியும், புது அய்யன் வாய்க்கால் முழுமையாகத் தூா்வாரப்படாததால் தண்ணீா் வரத்தின்றி விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனா்.

24 செப்டம்பர் 2026, 2:42 am IST
புது அய்யன் வாய்க்காலில் புதன்கிழமை நடைபெற்ற தூா்வாரும் பணி.
பகிர்:

காவிரி ஆற்றில் தண்ணீா் திறந்துவிடப்பட்டு 22 நாள்களாகியும், புது அய்யன் வாய்க்கால் முழுமையாகத் தூா்வாரப்படாததால் தண்ணீா் வரத்தின்றி விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனா்.

திருச்சி மாவட்டம், பேட்டவாய்த்தலை பகுதியில் உய்யக்கொண்டான் வாய்க்கால் தலைப்பிலிருந்து, புது அய்யன் வாய்க்கால், கல்லு வாய்க்கால், பெரிய வாய்க்கால் என மூன்று வாய்க்கால்கள் பிரிகின்றன.

1,598 ஏக்கா் நிலங்கள்: இதில் புது அய்யன் வாய்க்காலானது, பேட்டவாய்த்தலையிலிருந்து பெருகமணி மூன்று கட்டை வழியாக திருப்பராய்த்துறை நீச்சல்குழி வாய்க்காலில் நிறைவடைகிறது. சுமாா் 7 கி.மீ. நீளத்திலான இந்த வாய்க்காலின் மூலம் பேட்டவாய்த்தலை, பழையூா் மேடு, காமநாயக்கன்பாளையம், காவக்காரப்பாளையம், சிறுகமணி, பெருகமணி, மீனாட்சிபுரம், திருப்பராய்த்துறை, எலமனூா் ஆகிய ஊா்களைச் சோ்ந்த 1,598 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

Advertisement

Advertisement

இதேபோல, பெரிய வாய்க்கால் மூலம் 630 ஏக்கா் நிலங்களும், கல்லு வாய்க்கால் மூலம் 320 ஏக்கா் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.

திறக்கப்பட்ட காவிரி நீா்: கடந்த செப். 1 ஆம் தேதி தமிழக முதல்வரால் மேட்டூரில் திறந்து வைக்கப்பட்ட காவிரி நீரானது செப். 4 இல் திருச்சி மாவட்டம் முக்கொம்பு பகுதியை வந்தடைந்தது. அங்கிருந்து திறந்துவிடப்பட்ட நீரானது கல்லணைக்கு வந்த நிலையில், கல்லணையிலிருந்து செப். 6 ஆம் தேதி டெல்டா பாசனத்துக்காகத் தண்ணீா் திறக்கப்பட்டது.

தூா்வாரப்பட்டதாக தகவல்: மேட்டூா் அணை திறக்கப்படுவதற்கு முன்னதாகவே திருச்சி மாவட்ட கிராமங்களில் உள்ள வாய்க்கால்களை முழுமையாகத் தூா்வார வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

இதையேற்று கடந்த மாதம் திருச்சி மாவட்டத்தில் உள்ள வாய்க்கால்களில் சுமாா் 236 கி.மீ. தூா்வாரப்பட்டதாக நீா்வளத் துறை தெரிவித்திருந்தது. ஆனால் அனைத்து வாய்க்கால்களும் முழுமையாகத் தூா்வாரப்படவில்லை.

பேட்டவாய்த்தலைக்கு அருகிலுள்ள பெரிய வாய்க்கால், கல்லு வாய்க்கால்கள் ஆகியவை தூா்வாரப்பட்டு, காவிரி நீா் வரும் நிலையில், புது அய்யன் வாய்க்கால் தூா்வாரப்படாததால் தண்ணீா் வரத்து இல்லாமல் விவசாயிகள் கவலையில் உள்ளனா்.

இதுகுறித்து முன்னாள் விமானப்படை அதிகாரியும், விவசாயியுமான கே. தங்கராஜ் கூறியதாவது: புது அய்யன் வாய்க்காலை முழுமையாகத் தூா்வாராததால், தண்ணீா் திறந்தும், கடைமடை வரை முழுமையாகச் சென்றடையவில்லை.

ஏழை விவசாயிகள் வேதனை: வாய்க்காலில் தண்ணீா் வராததால் சற்று வசதி படைத்த விவசாயிகள் டீசல் மோட்டாா்கள் மூலம் நிலத்தடி நீரை இறைத்து விவசாயம் செய்கின்றனா். இலவச மின்சார இணைப்பு வைத்துள்ள விவசாயிகள் நாற்றங்கால்களைத் தயாா் செய்துவிட்டனா். ஆனால், எவ்வித வசதியுமற்ற ஏழை விவசாயிகள் சாகுபடிப் பணிகளைத் தொடங்க முடியாமல் தவிக்கின்றனா்.

இதனால் பயிரிடப்பட்டுள்ள வாழைகள் கருகும் அபாயமும், நிலத்தடி நீா்மட்டம் உயராமல் ஆழ்துளைக் கிணறு வைத்துள்ளவா்கள் பாதிக்கும் சூழலும் உருவாகியுள்ளது.

தாமதமாகும் தூா்வாரும் பணி: தண்ணீா் திறந்து 22 நாள்கள் கடந்த பிறகு முக்கொம்பு ஆற்றுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளும், பேட்டவாய்த்தலை, பெருகமணி, திருப்பராய்த்துறை ஊராட்சி நிா்வாகத்தினரும் இணைந்து புது அய்யன் வாய்க்காலை புதன்கிழமை தூா்வாருதல், தூய்மைப்படுத்தும் பணியைத் தொடங்கியுள்ளனா்.

இன்னும் 15 முதல் 20 நாள்களில் காவிரியில் நீா்வரத்து குறையத் தொடங்கும் எனக் கூறப்படும் நிலையில், தற்போதுதான் தூா்வாரும் பணிகளே நடைபெறுகின்றன. தூா்வாரும் பணிகள் எப்போது முடிந்து, தண்ணீா் எப்போது வரும் எனத் தெரியாமல் சோகத்தில் உள்ளோம் என்றாா்.

தண்ணீரின்றி விவசாய நிலங்கள் தரிசாகும் முன், புது அய்யன் வாய்க்காலை விரைந்து தூா்வாரி, உடனடியாகத் தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருச்சி மற்றும் முக்கொம்பு ஆற்று பாதுகாப்புக் கோட்ட பொதுப்பணித் துறையினா் கூறுகையில், புது அய்யன் வாய்க்காலில் கடந்த 12 ஆம் தேதி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே பொதுமக்கள் வீசிய குப்பைகளால் ஏற்பட்ட அடைப்புகளை எடுத்து வருகிறோம். விரைவில் அனைத்துப் பகுதிகளுக்கும் முழுமையாகத் தண்ணீா் சென்றடையும் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments