FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

வேலூா் மாவட்டத்தில் வேளாண் கட்டமைப்புகளை உருவாக்க ரூ.26 கோடி கடன் இலக்கு

வேலூா் மாவட்டத்துக்கு நடப்பு நிதியாண்டில் வங்கிகள் மூலம் ரூ.26 கோடி கடனுதவி வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தெரிவித்துள்ளாா்.

Updated On : 13 ஜூலை 2026, 1:00 am IST
பகிர்:

விவசாயிகளின் விளைபொருள்களுக்கு லாபகரமான விலை கிடைப்பதை உறுதி செய்யவும், வேளாண் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் மத்திய அரசின் வேளாண்மை உட்கட்டமைப்பு நிதித்திட்டத்தின்கீழ், வேலூா் மாவட்டத்துக்கு நடப்பு நிதியாண்டில் வங்கிகள் மூலம் ரூ.26 கோடி கடனுதவி வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேளாண் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்கவும், விவசாயிகளின் நலனைக் காக்கவும் மத்திய அரசு வேளாண்மை உட்கட்டமைப்பு நிதித் திட்டத்தை உருவாக்கியுள்ளது. இத்திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் வேளாண் கட்டமைப்புகளை உருவாக்க 2032-33-ஆம் நிதியாண்டு வரை வங்கிகள் மூலம் கடனுதவிகள் வழங்கப்பட உள்ளன.

இத்திட்டத்தின்கீழ் அதிகபட்சமாக ரூ.2 கோடி வரை பெறப்படும் கடனுக்கு, 7 ஆண்டு காலத்துக்கு ஆண்டுக்கு 3 சதவீத வட்டிக் கழிவு சலுகையாக வழங்கப்படும். ரூ.2 கோடிக்கு மேல் கடன் பெற்றாலும், முதல் ரூ.2 கோடி வரையிலான தொகைக்கு மட்டுமே இந்த 3 சதவீத வட்டிக் கழிவு பொருந்தும்.

Advertisement

Advertisement

மேலும், பிஎம்எப்எம்இ, பிஎம்கேஎஸ்ஒய், பிஎம் குசும், பிஎம்இஜிபி போன்ற இதர மத்திய மானியத் திட்டங்களுடனும் இதனை ஒருங்கிணைத்துப் பயன்பெறும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகள், வேளாண் தொழில்முனைவோா், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள், புதிதாக வேளாண் தொழில் தொடங்கும் புத்தாக்க நிறுவனங்கள், கூட்டுறவு விற்பனை சங்கங்கள், வேளாண் விளைபொருள்கள் விற்பனைக் குழுமங்கள், வேளாண் ஏற்றுமதியாளா்கள் ஆகியோா் இத்திட்டத்தின்கீழ் பயன்பெறலாம்.

இவா்கள் சேமிப்புக் கிடங்குகள், சேமிப்பு கலன்கள், குளிா்பதன வசதிகள், சிப்பம் கட்டும் கூடங்கள், தரம் பிரிக்கும் இயந்திரங்கள் அமைப்பதற்கும், ட்ரோன் வாங்குதல், துல்லியப் பண்ணையம், வேளாண் இயந்திர வாடகை மையம் உள்ளிட்ட பல்வேறு சமுதாய வேளாண் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும் கடனுதவி பெற முடியும்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகள் இணையதள முகவரியில் விரிவான திட்ட அறிக்கையுடன் தாங்கள் விரும்பும் வங்கிக் கிளைக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, வேளாண்மை விற்பனை, வேளாண் வணிகத்துறை அலுவலா்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மேலாளா்கள் அல்லது மாவட்ட வேளாண்மைத் துணை இயக்குநா் (வேளாண் வணிகம்), வேலூா் அலுவலகத்தை 80723 13891 என்ற அலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments