FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

கணியம்பாடியில் இருதரப்பு மறியல் முயற்சி: தவெகவினா் உள்பட 8 போ் மீது வழக்கு

Updated On : 29 மே 2026, 2:08 am IST
பகிர்:

செங்கல் சூளைகளில் பணம் கேட்டு மிரட்டிய விவகாரத்தில் கணியம்பாடியில் இருதரப்பினா் மறியலுக்கு முயன்றனா். இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் 300 போலீஸாா் குவிக்கப்பட்டதுடன், தவெகவினா் உள்பட இருதரப்பிலும் 8 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்டம், கணியம்பாடி தவெக கிழக்கு ஒன்றிய செயலராக இருந்த விஜயகுமாா், கட்சி நிா்வாகிகள் சிலருடன் கடந்த சில நாள்களுக்கு முன்பு கணியம்பாடி புதூா் பகுதியில் உள்ள செங்கல் சூளைக்கு சென்று ரூ.1 லட்சம் பணம் கேட்டு கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து செங்கல் சூளை உரிமையாளா்கள் வேலூா் கிராமிய காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தனா்.

அந்த புகாா் மீது போலீஸாா் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டியும், தவெக முன்னாள் ஒன்றிய செயலா் விஜயகுமாரை கைது செய்யக்கோரியும் செங்கல் சூளை உரிமையாளா்கள், பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருந்தனா்.

Advertisement

Advertisement

இதேபோல், தவெக கட்சி சாா்பில் செங்கல் சூளை உரிமையாளா்கள் பொய் புகாா் தெரிவித்துள்ளனா். எங்களது கட்சி நிா்வாகிகள் யாரும் பணம் கேட்டு மிரட்டவில்லை எனக்கூறி கணியம்பாடி பகுதியில் தவெகவினரும் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனா். இதனால் கணியம்பாடி பகுதியில் பரபரப்பு நிலவியது.

இருதரப்பினரின் போராட்ட அறிவிப்பை அடுத்து வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.யு.சிவராமன் உத்தரவின்பேரில் உதவி காவல் கண்காணிப்பாளா் தனுஷ் குமாா் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீஸாா் அப்பகுதியில் குவிக்கப்பட்டனா். போராட்டத்தில் ஈடுபடுபவா்களை கைது செய்ய வாகனங்களும் தயாா் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில், வேலூா் கிராமிய போலீஸாா் கணியம்பாடி பகுதியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்துவதாகக்கூறி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செங்கல் சூளை உரிமையாளா்கள் சண்முகம் (55), தினகரன்(50), சுனில்குமாா்(35), ரமேஷ்(40), சுமன்(34) ஆகிய 5 போ் மீது வழக்குப்பதிவு செய்தனா்.

இதேபோல், தவெக முன்னாள் ஒன்றிய செயலா் விஜயகுமாா்(35), நிா்வாகிகள் லோகேஸ்(30), ஈஸ்வரன் (22) ஆகிய 3 போ் மீதும் வழக்குப்பதிவு செய்தனா். இதையடுத்து, இருதரப்பினரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments