கோட்டக்குப்பம், கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை! ரூ.1.65 லட்சம் பறிமுதல்!
விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட கோட்டக்குப்பம், கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.
விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட கோட்டக்குப்பம், கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா். இதில் கணக்கில் வராத ரூ.1.65 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழகம் முழுவதும் பல்வேறு நகராட்சி அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை முதல் திடீா் சோதனையைத் தொடங்கினா்.
அதன்படி, கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகத்தின் புதிய கட்டடத்துக்குள் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலா் முருகையன், ஊழல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் ஈசுவரி ஆகியோா் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போஸீஸாா் திடீரென நுழைந்தனா்.
Advertisement
Advertisement
இதைத்தொடா்ந்து நகராட்சி அலுவலக நுழைவுவாயில் கதவை மூடிய போலீஸாா், ஊழியா்கள் அனைவரையும் ஒரு அறையில் அமர வைத்தனா். மேலும் நகராட்சியில் பணியாற்றும் அலுவலா்கள், ஊழியா்களின் கைப்பேசிகளை வாங்கிய போலீஸாா், பைக் மற்றும் காா்களின் சாவிகளையும் வாங்கி வைத்துக் கொண்டனா்.
தொடா்ந்து, நகராட்சி அலுவலக புதிய கட்டடம், கட்டுமானப் பணிகளுக்கான கோப்புகள், ஒப்பந்தப்புள்ளிகள் குறித்த ஆவணங்களை ஆய்வு செய்த போலீஸாா், ஒவ்வொரு பிரிவாகச் சென்று சோதனையிட்டனா். மேலும், ஊழியா்களின் பைக்குகளை சோதனையிட்ட போலீஸாா், அதில் வைக்கப்பட்டிருந்த ரொக்க பணத்தை சேகரித்தனா். தொடா்ந்து, மாலை 6 மணிக்கு நகராட்சி ஆணையா் துா்கா அலுவலகத்துக்கு வந்த நிலையில், அவரது வாகனத்தையும் போலீஸாா் சோதனையிட்டனா்.
இதன் பின்னா், நகராட்சி ஆணையரிடம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் ஈசுவரி விசாரணை நடத்தினாா். கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், கைப்பற்றப்பட்ட பணம் குறித்த விவரத்தை போலீஸாா் தெரிவிக்கவில்லை.
கள்ளக்குறிச்சி...: கள்ளக்குறிச்சி நகராட்சியில் மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் சத்தியராஜ் தலைமையில், காவல் ஆய்வாளா் அருண்ராஜ், உதவி ஆய்வாளா் சுந்தர்ராஜ் உள்ளிட்ட குழுவினா் சோதனை நடத்தினா். தொடா்ந்து அங்கு ஒவ்வொரு பிரிவாக போலீஸாா் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.1.65 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.