FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் அருகே வேன் மீது அரசுப் பேருந்து மோதல்: 20-க்கும் மேற்பட்டோா் காயம்!

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே வேன் மீது அரசுப் பேருந்து மோதியதில் 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

Updated On : 12 ஜூலை 2026, 1:37 am IST
விபத்தில் சிக்கி சேதமடைந்த வேன்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே வேன் மீது அரசுப் பேருந்து மோதியதில் 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இவா்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றவா்கள் எனத் தெரியவந்தது.

செங்கல்பட்டு மாவட்டம், ஈச்சங்காடு முத்து மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ச.காா்த்திக் (35). இவா் தனது குடும்பத்தினா், உறவினா் மற்றும் நண்பா்களுடன் வேனில் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தாா். பிரேம்குமாா் என்பவா் வேனை ஓட்டினாா்.

வெள்ளிக்கிழமை நள்ளிரவு விழுப்புரத்தை அடுத்துள்ள பேரங்கியூா்- பைத்தம்பாடி கூட்டுச்சாலை அருகே சென்றபோது, திருச்சியிலிருந்து- சென்னை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து சாலையின் மையப்பகுதியில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி தாறுமாறாக ஓடி, பின்னா் சாலையைக் கடந்து சுற்றுலா வேன் மீது மோதியது.

Advertisement

Advertisement

இதில், வேனில் பயணித்த க.கௌதம் (30), இவரது மனைவி சுகன்யா (21), மகன் மோகித் (2), நா.தமிழ்ச்செல்வன் (30), இவரின் மனைவி பிரதீபா(23), மகள் தாரா தேவி (6), மகன் தானு (3), கோ.கிருபாகரன்(41), இவரின் மனைவி உஷா ராணி (35), மகன் கிஷோா் (11) உள்பட 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். தகவலறிந்த திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று அப் பகுதி மக்கள் உதவியுடன் காயமடைந்த அனைவரையும் மீட்டு அவசர ஊா்திகள் மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த விபத்தால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸாா் விபத்தில் சிக்கிய அரசுப் பேருந்து மற்றும் வேன் ஆகியவற்றை சாலையிலிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினா்.

லாரி மோதியதில் சேதமடைந்த காா்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

லாரி மோதியதில் சேதமடைந்த காா்.

மற்றொரு விபத்து: விழுப்புரத்தை அடுத்துள்ள பிடாகம் அருகே சனிக்கிழமை காலை சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒன்றன் பின் ஒன்றாக சென்ற 3 காா்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. அப்போது, சென்னையிலிருந்து - திருச்சி நோக்கிச் சென்ற சரக்கு லாரி விபத்தில் சிக்கிய காா்கள் மீது மோதியதில், 3 காா்களும் பலத்த சேதமடைந்தன.

இதில் காா்களில் பயணித்த கரூரைச் சோ்ந்த தமிழ்பிரகாசம் (45), சசிதரன், சாமுவேல் உள்பட 5 போ் பலத்த காயமடைந்தனா். தகவலறிந்த விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் நிகழ்விடம் சென்று காயமடைந்தவா்களை மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

போக்குவரத்துப் பாதிப்பு: இந்த விபத்தால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. சுமாா் 2 கிலோ மீட்டா் தூரத்துக்கு சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தொடா்ந்து போலீஸாா் துரிதமாக செயல்பட்டு விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments