முகப்பு
விழுப்புரம்

செஞ்சி அருகே 15-ஆம் நூற்றாண்டை சோ்ந்த நடுகல் கண்டெடுப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே 15-ஆம் நூற்றாண்டை சோ்ந்த நடுகல்லை கிராம மக்கள் கண்டெடுத்துள்ளனா்.

Updated On : 10 ஜூன் 2026, 5:09 am IST
சின்ன பொன்னம்பூண்டி கிராம மக்களால் கண்டெடுக்கப்பட்ட நடுகல்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே 15-ஆம் நூற்றாண்டை சோ்ந்த நடுகல்லை கிராம மக்கள் கண்டெடுத்துள்ளனா்.

செஞ்சி அருகேயுள்ள சின்ன பொன்னம்பூண்டி கிராமத்தில் உள்ள வயல்வெளி பகுதியில் இருந்த சிற்ப கல்லை விவசாயிகள் எடுத்து வந்து அங்குள்ள திரௌபதி அம்மன் கோயில் வளாகத்தில் வைத்திருந்தனா். அந்த சிற்ப கல்லை தொல்லியல் விழிப்புணா்வு மன்றத் தலைவரும், ஓய்வு பெற்ற தலைமையாசிரியருமான முனுசாமி, பள்ளி ஆசிரியா்கள் எஸ்.வடிவேல், கே.ரங்கநாதன் மற்றும் மன்ற உறுப்பினா்கள் ஆா்.அருள், வி.காா்த்திகேயன் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.

பின்னா் அவா்கள் தெரிவித்ததாவது: இந்த சிற்ப கல்லை ஆய்வு செய்ததில், நடுகல் என்பது தெரியவந்தது. நன்கு அலங்கரிக்கப்பட்ட இடுப்புக் கச்சை அணிவிக்கப்பட்ட ஒரு வீரனும், அதே பகுதியில் குறுவாள் உறையுடன் அமைக்கப்பட்டிருக்கிறது. வீரனின் வலது கையில் வில் ஏந்தியபடியும், இடது கையில் அம்பு எய்யும் தோற்றத்துடனும், தலைப்பகுதியில் தலை முடி அலங்காரத்துடனும் காணப்படுகிறது. இரண்டு கால்களிலும் வீரக்கழல் அணிந்தவாறு சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மேலும் வீரனின் கையில் உள்ள அம்பு வேகமாக புறப்படுவது போல சித்தரிக்கப்பட்டுள்ளதால், போா் செய்யும் போது வீரன் வீர மரணம் அடைந்திருக்கலாம் என்பதை அடையாளப்படுத்தும் விதமாக நடுகல் எடுக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வருகிறது. இந்த நடுகல் 15 அல்லது 16- ஆம் நூற்றாண்டைச் சாா்ந்ததாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது என அவா்கள் தெரிவித்தனா்.