செஞ்சி பகுதியில் பல்வேறு வகையான மாம்பழங்கள் விற்பனை! போட்டி போட்டு வாங்கிச் செல்லும் சென்னை, பெங்களூா் பயணிகள்!
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியில் நெடுஞ்சாலையோரம் விவசாயிகளால் அருகிலுள்ள தோப்புகளில் இருந்து பறிக்கப்பட்ட பல்வேறு வகையான மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
மாம்பழம் என்றாலே நமக்கு சேலத்து மாம்பழம் என்றுதான் நினைவுக்கு வரும். அதே போன்று பலாப்பழம் என்றாலே பண்ருட்டி பலாப்பழம் என்று தான் நினைவுக்கு வரும். பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் மாம்பழம் மற்றும் பலாப்பழ பருவகாலமாகும். இந்நிலையில், இந்த ஆண்டு மாம்பழம் மற்றும் பலாப்பழம் அதிக அளவில் விளைச்சல் ஏற்ப்பட்டுள்ளது.
செஞ்சியில் இருந்து திண்டிவனம் செல்லும் சாலையில் நாட்டாா்மங்கலம் வரையில் சுமாா் 10 கிலோ மீட்டா் தூரம் வரை தேசிய நெடுஞ்சாலையின் இரு புறமும் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு, மாம்பழங்கள் விற்பைனை செய்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
ஊரணித்தாங்கல், தேன்மாமரம் என்கிற காவக்காடு, நங்கிலிகொண்டான், களையூா், காந்திநகா் மற்றும் நாட்டாா்மங்கலம் வரை சுமாா் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் மாம்பழம் விற்பனை நடைபெற்று வருகிறது. இவை அனைத்தும் தற்காலிக கடைகளுக்கு பின்னால் உள்ள மாமர தோப்பில் இருந்து விவசாயிகளால் அறுவடை செய்து, விற்பனை செய்யப்படுகிறது. பெரும்பாலும் மாந்தோப்பை குத்தைக்கு எடுத்து பழத்தை அறுவடை செய்து தேசிய நெடுஞ்சாலையில் தற்காலிக கூரை கொட்டகை அமைத்து விற்பனை செய்து வருகின்றனா்.
புதுச்சேரி, சென்னை, பெங்களூரு, திருவண்ணாமலை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் பிரதானச் சாலையாக இந்த தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளதால், இந்த வழியாக காா்களில் செல்லும் பயணிகள் ஆங்காங்கே காரை நிறுத்திவிட்டு கிலோக்கணக்கில் மாம்பழத்தை வாங்கிச் செல்கின்றனா்.
மாம்பழ ரகங்கள்: இப் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட பல்வேறு ரகங்களில் மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது. பங்கனப்பள்ளி மாம்பழம் கிலோ ரூ.100-க்கும், பேனிசான் ரூ.140-க்கும், மல்லிகா ரூ.100-க்கும், மல்கோவா ரூ.220-க்கும், ருமேனி ரூ.150-க்கும், தில்பசந்த் ரூ.140-க்கும், இமாம்பசந்த் ரூ. 220-க்கும், நீலம் ரூ.50-க்கும், ஒட்டுரக மாம்பழம் இரண்டரை கிலோ ரூ.100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து வியாபாரிகள் தெரிவித்ததாவது: இயற்கையான முறையில் மரத்தில் பழுத்த பழத்தை மட்டுமே விற்பனை செய்து வருகிறோம். பெங்களூரு மற்றும் சென்னை, புதுச்சேரி செல்லும் பயணிகள் மட்டுமல்லாது செஞ்சி பகுதி மக்களும் இங்கு வந்து பழத்தை வாங்கிச்செல்கின்றனா். வரும் பயணிகளுக்கு நாங்கள் ஒரு பழத்தை இலவசமாக அளித்து ருசி பாா்க்க சொல்லி விற்பனை செய்து வருகிறோம்.
ஒரு ஏக்கா் பரப்பளவில் உள்ள மாம்பழ தோப்பை ரூ.25 ஆயிரத்துக்கு குத்தகைக்கு எடுத்து, மாமரம் பூ வைக்கும் காலம் முதல் அதற்கு மருந்து தெளித்து பராமரித்து காய் காய்க்கும் வரை பணியாள்களை வைத்து பராமரித்து வருகிறோம். இந்த ஆண்டு மாம்பழத்துக்கு ஏற்ற பருவமாக மழை மற்றும் காற்று இல்லாததால் அதிக விளைச்சல் ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் தொடங்கும் மாம்பழப் பருவம் செப்டம்பா் மாதம் வரை 4 மாதம் நீடிக்கும். அதற்குள் குத்தகை எடுத்த பணத்தை நாங்கள் விற்பனை செய்து மீட்க வேண்டும். இது மட்டுமல்லாது செஞ்சி மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு பெரிய நகரங்களுக்கும் விற்பனைக்காக மாம்பழத்தை அனுப்பி வருகிறோம் என வியாபாரிகள் தெரிவித்தனா்.