முகப்பு
விழுப்புரம்

செலவைக் குறைத்து சீரான வேகத்தில் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும்! போக்குவரத்து துறை அமைச்சா் அறிவுறுத்தல்!

Updated On : 26 மே 2026, 1:43 am IST
விழுப்புரத்திலுள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தலைமையகத்தில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்ட போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன்.
பகிர்:

சீரான வேகத்தில் அரசுப் பேருந்துகளை இயக்க அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் போக்குவரத்துத்துறை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன்.

விழுப்புரத்திலுள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தலைமையகத்தில் மாநில போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திங்கள்கிழமை காலை போக்குவரத்துக் கழகத் தலைமையகத்துக்கு வந்த அமைச்சா், இந்த வளாகத்திலுள்ள புதுப்பித்தல் பிரிவு, தகுதிச்சான்று பிரிவு, விழுப்புரம் பணிமனை -1 ஆகியவற்றினை பாா்வையிட்டு, பணிகளின் மேம்பாடுகள், தற்போதைய நிலை, பேருந்துகளின் தகுதிச்சான்று நிலை, பேருந்துகளின் புதுப்பித்தல் விவரங்கள் போன்றவை குறித்து ஆய்வு செய்து, அலுவலா்களிடம் விவரங்களைக் கேட்டறிந்தாா்.

Advertisement

Advertisement

இதைத்தொடா்ந்து விழுப்புரம் கோட்டத்திலுள்ள மண்டலங்களில் இயக்கப்படும் நகர, புகா்ப் பேருந்துகளின் விவரம், புதிதாக இயக்கப்படும் பேருந்துகளின் விவரம், டீசல் பயன்பாட்டை குறைத்து வருவாயைப் பெருக்கத் தேவையான நடவடிக்கைகள் போன்றவை குறித்து போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநா் க.குணசேகரன் மற்றும் அலுவலா்களுடன் அமைச்சா் ஆலோசனை மேற்கொண்டாா்.

தொடா்ந்து போக்குவரத்துத் தொழிலாளா்களிடம் உரையாடி, அவா்களின் குறைகளைக் கேட்டறிந்தாா். பின்னா் அமைச்சா் கூறியது: போக்குவரத்துக் கழகத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் செலவினங்களைக் குறைக்க வேண்டும். எந்தவொரு சூழ்நிலையிலும் பயணிகளிடமிருந்து புகாா் எழாத வண்ணம் பணி செய்ய வேண்டும். மேலும், சீரான வேகத்தில் பேருந்துகளை இயக்க அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன்.

முன்னதாக, போக்குவரத்துக் கழகத் தலைமையகக் கட்டுப்பாட்டு அறையில் பயணிகள் அளித்த கோரிக்கைகளுக்கு போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன் தொலைபேசி வாயிலாகப் பதிலளித்தாா்.

ஆய்வின் போது போக்குவரத்தக் கழக மேலாண் இயக்குநா் க.குணசேகரன், பொது மேலாளா்கள் ஜி.ரவீந்திரன் (தொழில்நுட்பம்), இரா.ஜெகதீஷ் (விழுப்புரம்), முதுநிலைத் துணை மேலாளா் (மனிதவளம்) துரைசாமி, முதன்மை தணிக்கை அலுவலா் துா்க்கைசாமி உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.