பேருந்து நிறுத்த நிழற்குடையில் நிறுத்தப்படும் தனியார் வாகனங்கள்!
கடலூரில் பேருந்து நிறுத்தத்தில் தனியார் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடலூரில் பேருந்து நிறுத்தத்தில் தனியார் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மாவட்டத் தலைநகரான கடலூரில் உள்ள முக்கியமான பேருந்து நிறுத்தம் தலைமை தபால் நிலைய பேருந்து நிறுத்தமாகும். பேருந்து நிலையத்திலிருந்து விழுப்புரம், சென்னை, புதுச்சேரி செல்லும் அனைத்துப் பேருந்துகளும் இந்தப் பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றிச்செல்வது வழக்கம். மேலும், பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்குச் செல்லவும் இந்தப் பேருந்து நிறுத்தத்தையே பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும். எனவே, எப்போதும் பயணிகள் கூட்டத்துடனே காணப்படும். எனவே, பயணிகளின் வசதிக்காக பேருந்துகள் உள்ளே வந்துச் செல்லும் வசதியுடன் கூடிய பேருந்து நிறுத்தம் சாலையோரமாக அமைக்கப்பட்டது.
ஆனால், பேருந்துகள் பேருந்து நிறுத்த நிழற்குடைக்குள் வராமல் சாலையிலேயே நின்று பயணிகளை ஏற்றி இறக்கி வருகின்றன. இதனால், சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
பேருந்துகள் வராததால் பொதுமக்களும் பேருந்து நிறுத்த நிழற்குடைக்கு வெளியிலேயே நிற்கத் தொடங்கினர். இதனால், அந்தப் பகுதியில் கடை வைத்திருப்போர், கடைக்கு வந்துச் செல்வோர் தங்களது இருசக்கரம், நான்கு சக்கர வாகனங்களை நிறுத்திச் செல்லும் இடமாக பேருந்து நிறுத்தம் மாறி விட்டது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மாவட்ட காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இதுபோன்ற ஆக்கிரமிப்புகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.