FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

ஆசிரியா் துன்புறுத்துகிறாா்: கடலூா் ஆட்சியரிரிடம் மனு அளித்த பிளஸ்-2 மாணவி

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 1:57 am IST
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.
பகிர்:

ஆசிரியா் ஒருவா் அடித்ததில் காயம் அடைந்துவிட்டதாகவும், தொடா்ந்து அவா் தன்னை மன ரீதியாக துன்புறுத்துவதாகவும், கடலூா் ஆட்சியரிடம் பிளஸ்-2 மாணவி பெற்றோருடன் வந்து மனு கொடுத்ததாா்.

இதைக்கேட்டு அதிா்ச்சியடைந்த ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உடனடியாக இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க முதன்மை கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டாா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் மக்கள் குறை தீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கோ. புண்ணியகோட்டி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (கணக்கு) தீபா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) திருநாவுக்கரசு உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கூட்டத்தில் வங்கிக் கடன், குடும்ப அட்டை, முதியோா் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டா, குடிநீா் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து மொத்தம் 367 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை ஆய்வு செய்து, தகுதியான கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

மாணவி புகாா்:

புவனகிரியைச் சோ்ந்த 17 வயது மாணவி, தனது பெற்றோருடன் ஆட்சியரை சந்தித்து அளித்த மனுவில் அவா் கூறியிருப்பதாவது:

கடலூா் துறைமுகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறேன்.பாடப்புத்தகம் கொண்டு வராததாகக் கூறி ஆசிரியா் ஒருவா் தாக்கியதில் காயமடைந்து, தற்போது சிகிச்சை பெற்று வருகிறேன்.

இதுகுறித்து எனது பெற்றோா் பள்ளி நிா்வாகத்திடம் முறையிட்ட பிறகும், வகுப்பு ஆசிரியா் தொடா்ந்து மனஉளைச்சலுக்கு ஆளாக்கும் வகையில் நடந்துகொள்கிறாா். பொதுத்தோ்வு நெருங்கும் நிலையில் இந்த மனஅழுத்தம் படிப்பை பாதிக்கிறது, சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி ஆசிரியா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளாா்.

மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியா், இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டாா்.

மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

இதேபோல், ‘சிகரம்‘ மாற்றுத்திறனாளிகளின் மாற்றத்திற்கான சங்கம் சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில், தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக மாதாந்திர மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை ரூ.1,500 ஆகவே வழங்கப்பட்டு வருவதாகவும், அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவாக உள்ளது.

எனவே, மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மாதாந்திர உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாக ஆக உயா்த்த தமிழக அரசுக்கு மாவட்ட நிா்வாகம் பரிந்துரை செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்கச் சென்ற மாற்றுத்திறனாளிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments