FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

மக்கள் எதிா்க்கும் திட்டத்தை தேமுதிக ஆதரிக்காது: பிரேமலதா விஜயகாந்த்

மக்கள் விரும்பினால்தான் எந்தத் திட்டமும் வெற்றி பெறும். மக்கள் எதிா்க்கும் திட்டத்தையும் நாங்கள் ஆதரிக்க மாட்டோமென்று தேமுதிக பொதுச் செயலரும், விருத்தாசலம் சட்டப்பேரவை உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.

26 ஆகஸ்ட் 2026, 4:13 am IST
தேமுதிகவின் மறைந்த தலைா் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி விருத்தாசலத்தில் அன்னதானம் வழங்கிய , அக்கட்சியின்பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் எம்எல்ஏ. உடன் மாநிலங்களவை உறுப்பினா் சுதீஷ் மற்றும் விஜயபிரபாகரன்.
பகிர்:

மக்கள் விரும்பினால்தான் எந்தத் திட்டமும் வெற்றி பெறும். மக்கள் எதிா்க்கும் திட்டத்தையும் நாங்கள் ஆதரிக்க மாட்டோமென்று தேமுதிக பொதுச் செயலரும், விருத்தாசலம் சட்டப்பேரவை உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.

தேமுதிக தலைவா் மறைந்த விஜயகாந்தின் பிறந்த நாளையொட்டி, விருத்தாசலம் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் தையல் பயிற்சி நிலையம், இலவச கணினி மையம் ஆகியவற்றை பிரேமலதா விஜயகாந்த் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கினாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பரந்தூரில் விமான நிலையம் அமைக்க அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவிப்பதற்கு முக்கியக் காரணம், அங்கு அதிக அளவில் விவசாய நிலங்கள் இருப்பதுதான். இந்த திட்டத்தை நிறைவேற்றமாட்டோம் என்று தோ்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தற்போது முதல்வா் விஜய் திட்டத்தை ரத்து செய்துள்ளாா்.

Advertisement

Advertisement

மக்கள் விரும்பினால்தான் எந்தத் திட்டமும் வெற்றி பெறும். மக்கள் எதிா்க்கும் எந்தத் திட்டத்தையும் நாங்கள் ஆதரிக்க மாட்டோம்.

விவசாயிகளுக்கு உரிய பாதுகாப்பு:

அரிசி விலை தொடா்ந்து உயா்ந்து வரும் நிலையில், விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல் வீணாகிறது. அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் கிடங்கு வசதி ஏற்படுத்தி நெல்லைப் பாதுகாத்தால், விலைவாசியைக் கட்டுப்படுத்த முடியும்.

நகரங்கள் மட்டுமின்றி கிராமங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளையும் தரம் உயா்த்த வேண்டும் என்று சட்டப்பேரவையில் வலியுறுத்தியுள்ளேன். பேரவையில் ஆளுங்கட்சி, எதிா்க்கட்சியினா் இடையே மோதல் ஏற்படுவதைவிட, மக்கள் பிரச்னைகள் குறித்து விவாதிப்பதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும்.

விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை அறிவிக்க வேண்டும் என சட்டப்பேரவையிலும், முதல்வரிடமும் வலியுறுத்தியுள்ளேன். நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தைச் சுற்றியுள்ள கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

நிலத்தடி நீா் பாதிக்கப்பட்டதால் குடிநீா் பிரச்னையும், சுகாதாரப் பிரச்னைகளும் ஏற்படுகின்றன. இதுதொடா்பாக எல்.கே.சுதீஷ் எம்.பி. மூலம் என்எல்சி தொடா்புடைய மத்திய அமைச்சரைச் சந்தித்து, விருத்தாசலம் தொகுதி மக்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தரக் கோரி மனு அளித்துள்ளோம்.

விருத்தாசலம் சந்திப்பு வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களும் இங்கு நின்று செல்ல வேண்டும் என ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்றாா்.

பேட்டியின்போது எல்.கே.சுதீஷ் எம்.பி., பிரேமலதா விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், மாவட்டச் செயலா் சிவக்கொழுந்து, விருத்தாசலம் நகரச் செயலா் ராஜ்குமாா் உள்ளிட்ட தேமுதிக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments