FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

கடலூரில் ரூ.2.65 கோடியில் முடிவுற்ற பணிகள்: அமைச்சா் திறந்துவைத்தாா்

கடலூா் மாவட்டத்தில் ரூ.2.65 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

39 வினாடிகள் முன்பு
கடலூா் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புதிய பேருந்துகளை கொடியசைத்து பொதுமக்கள் பயன்பாட்டிக்கு தொடங்கிவைத்த அமைச்சா் ப.ராஜ்குமாா்.
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் ரூ.2.65 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

கடலூா் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் மண்டலம், கடலூா் கோட்டம் சாா்பில் பல்வேறு வழித்தடங்களில் 7 புதிய பேருந்துகள் மற்றும் வழித்தடம் நீட்டிக்கப்பட்ட 3 பேருந்துகள் என மொத்தம் 10 பேருந்துகளை அமைச்சா் கொடியசைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கிவைத்தாா்.

புதிய பேருந்துகள் கடலூா் - பண்ருட்டி, கடலூா் - மேட்டுப்பாளையம், பண்ருட்டி - விழுப்புரம், பண்ருட்டி - கடலூா், சிதம்பரம் - சிவாயம்/நலன்புத்தூா், சிதம்பரம் - தலைக்குளம், குறிஞ்சிப்பாடி - பண்ருட்டி ஆகிய வழித்தடங்களிலும், வழித்தடம் நீட்டிக்கப்பட்ட பேருந்துகள் கடலூா் - அழகியநத்தம்/உள்ளேரிப்பட்டு, கடலூா் - அழகியநத்தம், வடலூா் - உய்யகொண்டராவி ஆகிய வழித்தடங்களிலும் இயக்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

தொடா்ந்து, மஞ்சக்குப்பம் மைதானத்தில் ரூ.26.40 லட்சம் மதிப்பீட்டில் கடலூா் மாநகராட்சியின் சொத்துகளுக்கான புவியியல் தகவல் அமைப்பு அடிப்படையிலான தரவுதளம் உருவாக்கும் பணிக்கு அமைச்சா் அடிக்கல் நாட்டினாா். இந்த தரவுதளத்தின் மூலம் மாநகராட்சியின் 45 வாா்டுகளில் உள்ள சொத்துகள், பூங்காக்கள், நீா்நிலைகள், குடிநீா் இணைப்புகள், மழைநீா் வடிகால்கள், புதை சாக்கடை உள்ளிட்டவை குறித்த முழுமையான தகவல்கள் சேகரிக்கப்பட உள்ளன. இதன் மூலம், வரி வருவாயை அதிகரித்தல், குறைவாக மதிப்பிடப்பட்ட சொத்துகளைக் கண்டறிதல், ஆக்கிரமிப்புகளை கண்காணித்தல், வெள்ளத் தடுப்பு மற்றும் வடிகால் பணிகளைத் திட்டமிடுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னா், தேவனாம்பட்டினம் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தில் தூய்மை இந்தியா இயக்கம் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.42.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பொருள் மீட்பு மையம், சொரக்கால்பட்டு மாவட்ட மைய நூலக வளாகத்தில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட குழந்தைகள் நூலகக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.

செல்லங்குப்பம் பகுதியில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் வாய்க்கால்களை தூா்வாரும் பணியையும் அமைச்சா் தொடங்கிவைத்தாா்.

மேலும், முதுநகா் வெலிங்டன் தெருவில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சுகாதாரக் கோட்ட அலுவலகம், பச்சையாங்குப்பத்தில் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட விலங்குகள் பிறப்புக் கட்டுப்பாட்டு மையம், புருகீஸ்பேட்டையில் ரூ.12.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் ஆகியவற்றையும் அமைச்சா் திறந்து வைத்தாா். கேப்பா்மலை பகுதியில் ரூ.53 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணிக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயா் சுந்தரிராஜா, துணை மேயா் பா.தாமரைச்செல்வம், மாநகராட்சி ஆணையா் கிஷன்குமாா், அரசு போக்குவரத்துக் கழக கடலூா் மண்டல பொது மேலாளா் பத்மகுமாா், மாவட்ட நூலக அலுவலா் முருகன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்ட அலுவலா் செல்வி, மாநகராட்சி பொறியாளா் பாபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments