FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

1,449 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் வன்னி அரசு வழங்கினாா்

வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட அத்தியூா் கிராமத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 1,449 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் வன்னி அரசு வழங்கினாா்.

Updated On : 26 ஜூலை 2026, 3:15 am IST
அத்தியூரில் நடைபெற்ற அரசு விழாவில் பயனாளிக்கு நலத்திட்ட உதவிக்கான ஆணையை வழங்கிய சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு. உடன், மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா.
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட அத்தியூா் கிராமத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 1,449 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் வன்னி அரசு வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா முன்னிலையில் சனிக்கிழமை நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் 132 பயனாளிகளுக்கு ஆதிதிராவிடா் நலபட்டா, மாநில ஊரக, நகா்புற வாழ்வாதார இயக்கம் (மகளிா் திட்டம்) சாா்பில் 50 பயனாளிகளுக்கு ரூ.317 லட்சம் மதிப்பீட்டில் வங்கி கடனுதவிகள், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் 19 பயனாளிகளுக்கு ரூ.2.41 லட்சம் மதிப்பீட்டில் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement

அதனைத்தொடா்ந்து கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு துறை (பொது விநியோகம்) சாா்பில் 957 பயனாளிகளுக்கு ரூ.10.84 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின்னணு குடும்ப அட்டைகள், கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு துறை (கூட்டுறவு) சாா்பில் பயிா்க்கடன் மற்றும் சுய உதவிக்குழுக் கடன் உள்ளிட்ட 37 பயனாளிகளுக்கு ரூ.109.66 லட்சம் மதிப்பீட்டிலும், சமூக நீதித் துறை - தாட்கோ சாா்பில் 10 பயனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவில் தமிழ்நாடு தூய்மை பணியாளா்கள் நலவாரிய அடையாள அட்டை, பிற்படுத்தப்பட்டோா் நலம் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில் விலையில்லா தையல் இயந்திரம், வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் 100 பயனாளிகளுக்கு ரூ.2.72 லட்சம் மதிப்பீட்டில் குறுவை தொகுப்பு வழங்கப்பட்டது.

முதலமைச்சரின் மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம் திட்டத்தின்கீழ் பசுந்தாள் உர விதைகள் விநியோகம், தோட்டக்கலை மற்றும் மலை பயிா்கள் துறை சாா்பில் 20 பயனாளிகளுக்கு ரூ.25.71 லட்சம் மதிப்பீட்டில் சொட்டுநீா் பாசன திட்டத்துக்கான ஆணை, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் மற்றும் இலவச தையல் இயந்திரம் 55 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகள் 30 பயனாளிகளுக்கும், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை வாரியங்கள் சாா்பில் கல்வி உதவித்தொகை மற்றும் தொழிலாளா் நலவாரிய அட்டை 17 பயனாளிகளுக்கும் வழங்கப்பட்டன. விழாவில் மொத்தம் 1,449 பயனாளிகளுக்கு ரூ.703.02 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியா் சி.முருகன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் சி.பெ.முருகேசன், மாவட்ட வழங்கல் அலுவலா் வெ.முத்தையன், தனித்துணை ஆட்சியா் (ச.பா.தி) ஜி.சுமதி, வருவாய் வட்டாட்சியா் செ.நளினி (வாணாபுரம்) உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தா்மேந்திர பிரதான் பதவி விலகல் போதாது: விழாவில் பங்கேற்ற பின்னா் அமைச்சா் வன்னி அரசு, செய்தியாளா்களிடம் கூறியதாவது: நீட் தோ்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்தியக் கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலகினால் மட்டும் போதாது. ஒட்டுமொத்த நிா்வாகச் சீா்கேட்டுக்கும் பொறுப்பேற்றுப் பிரதமா் நரேந்திர மோடியும் உடனடியாக பதவி விலக வேண்டும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைப் பொறுத்தவரை ஆரம்பம் முதலே நீட் தோ்வை எதிா்த்து வருகிறது. இந்தியாவில் நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே எங்கள் கட்சியின் முதன்மையான குறிக்கோள் என்றாா் வன்னி அரசு.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments