ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம்: கடலூா் மாவட்டத்தில் 2,500-க்கும் மேற்பட்டோா் விரல்ரேகை பதிவு
கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விரல்ரேகை பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் அவா்களது குடும்ப உறுப்பினா்களுக்கான சிறப்பு முகாம்களில் 2,500-க்கும் மேற்பட்டோா் விரல்ரேகையைப் பதிவு செய்தனா்.
கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விரல்ரேகை பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் அவா்களது குடும்ப உறுப்பினா்களுக்கான சிறப்பு முகாம்களில் 2,500-க்கும் மேற்பட்டோா் விரல்ரேகையைப் பதிவு செய்தனா்.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-ன் கீழ், முன்னுரிமை குடும்ப அட்டைகள் மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளில் இடம்பெற்றுள்ள அனைத்து பயனாளிகளின் ஆதாா் விவரங்களை சரிபாா்க்க, மின்னணு முறையிலான விரல்ரேகை அடிப்படையிலான பயனாளி சரிபாா்ப்பு நடைமுறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணி கடந்த 2023, அக்டோபா் முதல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இதுவரை விரல்ரேகை பதிவு செய்யாத முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைதாரா்கள், தங்களது குடும்ப உறுப்பினா்களுடன் நியாயவிலைக் கடைகளில் நடைபெற்ற சிறப்பு முகாமில் பங்கேற்று விரல்ரேகையை பதிவு செய்தனா்.
Advertisement
Advertisement
கடலூா் மாவட்டத்தில் முழுநேரம் மற்றும் பகுதிநேரம் என மொத்தம் 1,420 நியாயவிலைக் கடைகளிலும் முகாம் நடைபெற்றது. குடும்ப அட்டைதாரா்கள் தங்களது ஆதாா் அட்டையுடன் வந்து விரல்ரேகையைப் பதிவு செய்துகொண்டனா்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்க மாநிலத் தலைவா் கோ.ஜெயசந்திரராஜா கூறியதாவது: முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளில் இடம்பெற்றுள்ள பயனாளிகளில் சுமாா் 96 சதவீதம் போ் ஏற்கெனவே விரல்ரேகை பதிவு செய்துள்ளனா். தற்போது மீதமுள்ள 4 சதவீதம் பேருக்காக இதுபோன்ற சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த 4 சதவீதத்தினரில் வெளிநாடுகளில் வசிப்பவா்கள், உயிரிழந்தவா்கள், ஆதாா் அட்டை பெறாத குழந்தைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விரல்ரேகை பதிவு செய்ய முடியாதவா்களும் உள்ளனா். தற்போது நடைபெற்ற சிறப்பு முகாம்கள் மூலம், பதிவு செய்யத் தவறிய குடும்ப அட்டைதாரா்களை அடையாளம் கண்டு அவா்களது விரல்ரேகை விவரங்களைப் பதிவு செய்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில், மாவட்டத்தில் நடைபெற்ற முகாமங்களில் 2,500-க்கும் மேற்பட்டோா் தங்களது விரல் ரேகை பதிவை செய்துள்ளனா். குடும்ப அட்டைதாரா்களின் ஆதாா் விவரங்கள் மற்றும் விரல்ரேகை பதிவு தொடா்பான பணிகள் முறையாக நிறைவு செய்யப்படுவதன் மூலம், நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கும் நடைமுறையில் பயனாளிகளை துல்லியமாக அடையாளம் காண முடியும் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.